

மகா அன்னாபிஷேகம் - நவம்பர் 6
அன்னமயம் பிராணமயம் ஜகத் என்கிறது வேதம். உயிர் தாங்கி இருக்கும் இந்த உடல் தழைத்து இருக்க அன்னம் என்ற உணவு அவசியம். அதனால் அன்னத்தின் முக்கியத்துவத்தை உலகோருக்கு உணர்த்த சிவனுக்கு அன்னாபிஷேகம், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று நிகழ்த்தப்படுகிறது. சிவன், அனைத்து உயிர்களுக்கும் வேளை தவறாமல் உணவளித்துக் காக்கும் தொழிலைச் செய்வதாகப் பார்வதி தேவி அறிகிறாள். இதனைச் சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்கிறாள் அன்னை.
சிற்றெறும்பு
சிறிய சம்புடம் ஒன்றுக்குள் சிற்றெறும்பு ஒன்றைப் பிடித்துப் போட்டு அழுந்த மூடி, தனது புடவைத் தலைப்பில் முடிந்து வைத்தாள் அன்னை பார்வதி. அனைவரும் உணவு உண்ணும் மதிய வேளையும் வந்துவிட்டது. அன்னை, ஒரு புன்சிரிப்புடன் பரமனை நோக்கி அனைவரும் உணவு உண்டு விட்டார்களா என்று கேட்டாள். பரமனும், எல்லாம் சரியாக நடந்தேறிவிட்டதைக் குறிக்கும் வகையில், “ஆயிற்று” எனச் சுருக்கமாக பதில் அளித்தார்.
பார்வதி தனது தலைப்பில் முடிந்து வைத்திருந்த சம்புடத்தை எடுத்துத் திறந்து பார்த்தார். அங்கே எறும்புடன் ஓர் அரிசியும் இருந்தது. ஆனந்த அதிர்ச்சி அடைந்தார் பார்வதி.
அன்னபூரணி
உலகோருக்கு அன்னம் அளிக்கும் இந்தச் சிவன்தான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். ஒரு முறை அன்னையும் பரமனும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, உலகம் மாயை என்று பரமன் கூறினார். அதனை மறுத்தாள் பார்வதி. உடனே சிவன் உணவு உட்பட அனைத்துப் பொருட்களையும் மறையச் செய்தார். உலக மக்கள் உணவின்றித் தவித்ததைக் கண்ட பார்வதி தேவி பெண்ணுக்கே உரிய தாய்மை உணர்வுடன், மீண்டும் உணவுப் பொருட்களைக் கணப் பொழுதில் உருவாக்கி அனைவருக்கும் வழங்கத் தொடங்கினார். இதனைக் கண்ட சிவன் தானும் ஓடு ஏந்திப் பிச்சை கேட்கிறார். சிரித்த முகத்துடன் உணவளித்த அன்னையிடம், சிவன் அனைத்துப் பொருட்களும் நிதர்சனமானவை என்று உணர்ந்ததாகக் கூறுகிறார்.
பிராணசக்தியை அளிக்க வல்லவள்
அன்னபூரணியைப் போற்றும் வண்ணமாக ஆதிசங்கர பகவத்பாதரும் அன்னபூர்ணே எனத் தொடங்கும் அஷ்டகத்தை இயற்றி, அதன் மூலம் பிராண சக்தியை அளிக்க வல்லவளாக இருக்கிறாள் இந்த அன்னை எனப் போற்றுகிறார். இது மட்டுமல்லாமல் அன்னத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்தவே சிவனும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் செய்துகொள்கிறார்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி அறுவடைக்குப் பின்னர், புது நெல்லைக் குத்தி எடுக்கப்பட்ட அரிசியின் ஒரு பகுதியைக் கோயிலில் உள்ள இறைவனுக்கு அளிப்பார்கள். இந்த அரிசியை அன்னமாக்கி ஐப்பசி பெளர்ணமி அன்று அபிஷேகப் பிரியனான சிவனுக்குச் சாற்றுவர்.
பாணலிங்கம் முழுவதும் அன்னத்திற்குள் மறைந்துவிடும், ஆவுடையாரும், பீடமும்கூட மறையும் அளவிற்குப் பல இடங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். காய்கறிகளால் அலங்கரிக்கப்படுவார் சிவன். வெள்ளை அன்னத்திற்குள் சிவனை மூழ்கடித்து, அச்சிவனுக்குத் தீபாராதனை காட்டுவார்கள். இந்த அன்னப் பருக்கை ஒவ்வொன்றும் பாண லிங்கச் சொரூபம் என்ற நம்பிக்கை நிலவுவதால், அந்த நிலையில் சிவனை வழிபட்டால் பல்லாயிரக்கணக்கான சிவ ரூபங்களை ஒரு சேர வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
சிவன் கோயில்கள்
அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும் சில தமிழகக் கோயில்கள் இவை: சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வைதீஸ்வரன் கோவில் உட்பட பல கோயில்களில் சிறிதும், பெரிதுமாக இருக்கின்ற லிங்க ரூபங்களுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். கோயில்களில் மட்டுமே செய்யப்படும் இந்த அன்னாபிஷேகத்தை வீடுகளில் உள்ள லிங்க ரூபங்களுக்குச் செய்வது வழக்கமில்லை. பொதுவாக ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். சில இடங்களில் ஐப்பசி மாதப் பிறப்பன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுவதும் உண்டு.