ஜென் கதை: பாறை உடைப்பவனின் பாடல்

ஜென் கதை: பாறை உடைப்பவனின் பாடல்
Updated on
2 min read

முன்னொரு காலத்தில் பாறை உடைப்பவன் ஒருவன் இருந்தான். தினமும் அவன் பாறைகளை வெட்ட மலைக்குச் செல்வான். வேலை செய்யும்போது உற்சாகத்தில் பாடுவான். அவன் சந்தோஷமாக இருந்தான். தேவைக்கு அதிகமான எதற்கும் அவன் ஆசைப்பட்டதில்லை.

ஒரு நாள் அவன் ஒரு பிரபுவின் மாளிகையில் பணி செய்ய அழைக்கப்பட்டான். அரண்மனையின் பிரம்மாண்டத்தைப் பார்த்த அவனுக்கு வாழ்வில் முதல் முறையாக ஆசை ஏற்பட்டது. “நான் மட்டும் ஒரு செல்வந்தனாய் இருந்திருந்தால், ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்திப் பிழைக்கும் நிலை எனக்கு இருந்திருக்காது.” என்று ஏக்கம் கொண்டான்.

அவனது ஏக்கம் இறைவனுக்குக் கேட்டது. “உன் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் நீ எதை விரும்பினாலும் உனக்குத் வழங்கப்படும்.”

மாலையில் வீடு திரும்பிய அவனுக்குத் தன் விருப்பமாக எதைக் கேட்பது என்றே தெரியவில்லை. மாளிகைபோல வீடு வேண்டுமென்று நினைத்தான். அவன் இருந்த குடிசை, மாளிகை ஆனது. ஒரு செல்வந்தனாக அந்த இரவு முதல் வாழத் தொடங்கினான்.

அரசனாக ஆசை

ஒரு கோடைக் காலத்தில் வெப்பமும் தகிப்பும் வாட்டும் ஒரு பகல் வேளையில் அந்த நாட்டின் மன்னர் ஒருவர் பல்லக்கில் அமர்ந்து, பிரபுக்களும் அடிமைகளும் நிரம்பிய பரிவாரத்தோடு செல்வதை அவன் தன் வீட்டு ஜன்னலின் வழியாகக் கண்டான். “நானே அந்த ராஜாவாக மாறினால் எப்படியிருக்கும்” என்று நினைத்தான்.

அவன் விருப்பம் உடனடியாக நிறைவேறியது. பல்லக்கில் சௌகரியமாக அமர்ந்திருப்பதை உணர்ந்தான். ஆனால் அந்தப் பல்லக்கு, அவன் எண்ணியதைவிட அதிக வெப்பமுடையதாக இருந்தது. வெளியே சூரியனைக் கண்டு வியக்கத் தொடங்கினான். அதன் வெப்பம், ராஜாவின் பல்லக்கையே ஊடுருவக்கூடியதாக இருந்தது. அவனுக்குச் சூரியனாகும் ஆசை வந்தது.

சூரியன் ஆனான்

வெப்பத்தையும் ஒளியையும் வீசும் சூரியனாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சிறிது காலத்துக்கு நன்றாகவே இருந்தது. பின்பு ஒரு மழை நாளில் அவன் அடர்த்தியான மேகத்திரளைத் ஊடுருவ முயன்று முடியாமல் போனது. அதனால் அவன் மேகமாக மாறினான். வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் தன் ஆற்றலுக்காக விதந்தோதப்படுகிறான். அவன் மழையாக மாறி, ஒரு வலிமை பொருந்திய பாறையால் தடுக்கப்பட்டு அதன் மீது வழிந்தோட வேண்டிய கட்டாயம் ஏற்படும்வரை அவன் நீராக இருந்தான்.

ஒரு வெற்றுப் பாறைக்கு அத்தனை வலிமையா என்று சிந்திக்கத் தொடங்கினான். அவன் பாறையானான். ஒரு அழகிய மலைப் பகுதியில் பாறையாக அவன் உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருந்தான்.

தனது அபாரமான வடிவத்தை எண்ணி சந்தோஷப்பட அவனுக்கு நேரம் போதவில்லை. இருந்தாலும் அவன் காலடியிலிருந்து தொடர்ந்து கேட்கும் விநோதமான இரும்புச் சப்தத்தைக் கேட்கிறான். கீழே, ஒரு சிறிய மனிதன் அமர்ந்து, அடிவாரத்தில் கற்களைத் துண்டு துண்டாக வெட்டியெடுப்பதைக் கண்டு அதிரச்சியடைந்தான்.

மீண்டும் பாறையைப் பிளந்தான்

“இந்த துச்சமான சிருஷ்டிக்கு என்னைப் போன்ற ஒரு மகத்தான கல்லைவிட வலிமையா. நான் அந்த மனிதனாக விரும்புகிறேன்”. பின்பு அவன் மீண்டும் பாறை வெட்டியானான். மலைக்குச் சென்று பாறைகளைப் பிளந்தான். வியர்வையிலும் கஷ்டத்திலும் சம்பாதித்தாலும்கூட அவன் இதயத்தில் பாடல் இருந்தது. அப்போதுதான் யாராக இருக்கிறோம் என்பதிலும், தன்னிடம் இருப்பதை வைத்து வாழ்வதிலும் அவனுக்குத் திருப்தியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in