

ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் விலகும்.
என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். ஷேர் லாபம் தரும். என்றாலும் முன்பின் தெரியாதவர்களை நம்பி உங்களின் ஆதார் எண்ணைத் தர வேண்டாம்.
11.12.2018 முதல் 13.2.2019 வரை குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகுபகவான் பயணிப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் பரிச்சயம் செய்து வைப்பவர்களையே வேலையில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமையால் மன இறுக்கம் உண்டாகும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள்மீது திரும்பும். அவர்களிடம் உஷாராக இருங்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்துக் கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நல்லது செய்துவந்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு படபடப்பு இருக்கும்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.
சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசால் ஆதாயம் கிடைக்கும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். வெளிநாடு, வெளிமாநிலத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும்.
7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பிள்ளைகளால் அலைச்சல்கள் இருக்கும். அவர்களை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள்.
இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையைத் தந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத் தீபமேற்றி வணங்குங்கள். மாமரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.