Last Updated : 17 Oct, 2013 04:04 PM

 

Published : 17 Oct 2013 04:04 PM
Last Updated : 17 Oct 2013 04:04 PM

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத மகான் - பரஞ்சோதி பாபா

இசைப் பயணத்துக்கு இடையே பக்திப் பயணத்தையும் தவம் போலவே செய்துவருகிறார் டிரம்ஸ் சிவமணி. பரஞ்சோதி பாபாவின் தீவிர பக்தர். வார்த்தைக்கு வார்த்தை அவரை ஐயா என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பரஞ்சோதி பாபாவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சிவமணி.

நதி மூலம், ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். நானும் ஐயாவை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சென்னை வடபழனி வீதிகளில் வாழ்ந்த மகான் அவர். யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். நான் ஐயாவைத் தரிசித்த அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது நடந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் இருக்கும். பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுடன் பாடல் பதிவில் இருக்கிறேன். அப்போது சவுண்ட் இன்ஜினியர் முரளி என்பவர்தான் ஐயாவைப் பற்றி என்னிடம் சொன்னார். நானும் உடனே கிளம்பி சிவன் கோயில் தெருவுக்குச் சென்றேன். அங்கே ஜடைமுடியுடன் சாலையில் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். என்னை அருகில் சேர்க்கவே இல்லை. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இப்படியே மூன்று மாதம் நான் போவதும் அவர் என்னைத் திருப்பி அனுப்புவதுமாகவே இருந்தது. நான் கொஞ்சம்கூட சளைக்கவில்லை. ஒருநாள் மாலை என்னை உற்றுப் பார்த்தவர், ‘என்ன... என்னைக் கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்டார். என்னை அவர் அருகில் அமரவைத்துக்கொண்டார். தோசை வாங்கிவரச் சொல்லி, ஒரே இலையில் இருவரும் சாப்பிட்டோம். அதுதான் துவக்கம். அதற்குப் பிறகு தினமும் ஐயாவைத் தரிசித்தால்தான் அன்றையநாள் நிறைவுபெற்ற திருப்தி எனக்கு. சமயங்களில் இரவு அவருடனேயே தங்கியும் விடுவேன்.

இடையில் ஆறு மாதம் ஜெர்மனிக்குச் சென்றிருந்தேன். ஐயாவைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை மனதை அரித்தது. அப்போது இந்தியாவைப் பற்றிய டாகுமெண்ட்ரி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மனம் ஐயாவையே சுற்றிச் சுற்றி வந்தது. சென்னையைக் காட்டினால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அடுத்த நொடி சென்னைத் தெருக்கள் திரையில் தோன்றின. வடபழனியைக் காட்டுவார்களா என்று மனம் ஏங்கியது. அடுத்தக் காட்சியில் வடபழனி வந்தது. ஐயா எனக்குக் காட்சி தருவீர்களா என மனம் அரற்றியது. சட்டென்று திரையில் ஐயாவின் திருவுருவம்! அது அப்படியே வடபழனி கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டது. நானும் அந்தக் காட்சியை ரீவைன்ட் செய்து பார்த்து சிலிர்த்துவிட்டேன். கண்டம் தாண்டி காட்சி தந்த ஐயாவின் உருவம் ஆயுளுக்கும் மறக்காது.

இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டில் இருந்து இரண்டு பேர் என்னை இசை நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருந்தார்கள். ஐயாவிடம் கேட்டுவிட்டு ஒப்புக்கொள்ளலாம் என்று அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்ததுமே, ‘என்ன, ரெண்டு பேர் வந்தாங்களா?’ என்று கேட்டார். அதிகம் பேசமாட்டார். ஆனால் எதையுமே அருகிருந்து பார்த்தது போலவே பட்டென உடைத்துச் சொல்லிவிடுவார். என்ன நடக்கும் என்பதையும் சொல்வார். ஆனால் தன்னிடம் இருக்கும் இந்த தீட்சண்யத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. பரதேசிக்கோலத்துடன் தான் இருப்பார். மழையோ,வெயிலோ பொருட்படுத்த மாட்டார். மழை அடித்துப் பெய்தாலும் அவர் நிற்கிற இடம் நனையாது.

ஒருமுறை அவருக்கு மிகவும் முடியாமல் போனது. அவர் மருந்து, மாத்திரைகளை அனுமதிக்கவே மாட்டார். அருகில் இருந்தவர்கள் அழைத்தும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. எனக்குத் தகவல் கிடைத்து நான் சென்று அவரை அழைத்தேன். அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. யாரையும் தொடக்கூட அனுமதிக்கவில்லை. தன்னைத் தேடி வருகிறவர்களின் வியாதை வாங்கி தன் காலில் வைத்துக் கொண்டதால்தான் காலில் புண் வந்து, புறையோடிப் போயிருக்கும். கால் வீக்கம், செப்டிக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என் மருத்துவ நண்பரை வரவழைத்தேன். அப்போதும் சிகிச்சைக்கு உடன்படவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காபியில் மாத்திரையைக் கலந்து அவரிடம் கொடுத்தேன். ‘இதை நான் குடிச்சுதான் ஆகணுமா?’ என்று கேட்டார். பாதியைக் குடித்துவிட்டு மீதியை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். நானும் வாங்கிக் குடித்தேன். காபி, ரசமாக மாறியிருந்தது.

தங்கள் மகளின் இதய அறுவை சிகிச்சைக்குத் தேதி குறித்துவிட்டு ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வடநாட்டு தம்பதி வந்திருந்தனர். அந்தக் குழந்தையை அருகே அழைத்து ஆரஞ்சுப்பழத்தைக் கொடுத்து அனுப்பினார் ஐயா. மருத்துவமனையில் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு சரியாகியிருந்ததைப் பார்த்து அதிசயித்துவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்காக கட்டிய பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு ஐயாவைத் தரிசிக்க வந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து ஐயாவுக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒருவர் வந்தார். தன் கனவில் ஐயா வந்து, தான் சமாதியாகும் இடத்தைப் பற்றிச் சொன்னதாகக் கூறினார். ஐயா சொன்னபடியே ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது. கூடிய விரைவில் அது ஷேத்திரமாகப் போகிறது. ஐயாவின் ஆசிப்படி அங்கே இருக்கும் கிராமத்துக் குழந்தைகளுக்காக பள்ளி உருவாகப் போகிறது.’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x