Last Updated : 13 Nov, 2014 12:18 PM

 

Published : 13 Nov 2014 12:18 PM
Last Updated : 13 Nov 2014 12:18 PM

குருவைத் தேடி...

உலகம் முழுவதும் சுற்றியாவது தனக்கான தலைசிறந்த குருவைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஓர் இளைஞன் புறப்பட்டான்.

அவன் தன் கிராமத்தை விட்டு வெளியே வந்தவுடன், மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒரு முதியவரைச் சந்தித்தான். அவரிடம், “நீங்கள் ஒரு நாடோடியா?” என்று கேட்டான்.

“ஆமாம். நான் ஒரு நாடோடி. நான் உலகம் முழுக்கச் சுற்றி இருக்கிறேன்” என்றார்.

“அப்படியென்றால், நான் சரியான நபரிடம்தான் வந்திருக்கிறேன். நான் ஒரு தலைசிறந்த குருவின் சீடனாக விரும்புகிறேன். நான் எங்கே செல்ல வேண்டும் என்று ஆலோசனை சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

அந்த முதியவர் அவனுக்கு சில முகவரிகளைக் கொடுத்தார். அந்த இளைஞனும் நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

சுமார் முப்பது ஆண்டுகளாக உலகம் முழுக்கத் தனக்கான தலைசிறந்த குருவைத் தேடி அலைந்தான். ஆனால், அவனால் தனக்கு ஏற்ற குருவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் சோர்ந்துபோய், மன வருத்தத்துடன் திரும்பிவந்தான். அவன் கிராமத்துக்கு உள்ளே நுழைந்தபோது, அவன் முன்பு பார்த்த அதே மரத்தடியில், அதே முதியவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் முன்பு பார்த்ததைவிடவும் அவர் இன்னும் தளர்ந்துபோய் இருந்தார்.

சட்டென்று அந்த முதியவர்தான் தனக்கான ‘தலைசிறந்த குரு’என்பதை அவன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் அவர் பாதம் பணிந்து, “ஏன், நீங்கள்தான் குரு என்பதை முன்பே என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டான்.

அதற்கு அந்த முதியவர், “ஏனென்றால், அப்போது உனக்கான நேரம் வரவில்லை. உன்னால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. உலகம் முழுக்கச் சுற்றியதால், உனக்கு இப்போது ஓரளவு முதிர்ச்சியும், புரிதலும் வந்திருக்கிறது. இப்போது உன்னால் என்னைப் பார்க்க முடியும். கடந்த முறை நீ என்னைச் சந்தித்தாய். ஆனால், உன்னால் என்னைப் பார்க்க முடியவில்லை. நீ தவறவிட்டுவிட்டாய். நீ என்னிடம் வேறு யாரோ ஒரு குருவைப் பற்றி விசாரித்தாய். அதுவே, உன்னால் என் இருத்தலை உணர முடியவில்லை, என் வாசத்தை நுகர முடியவில்லை என்பதை உறுதிசெய்தது.

அப்போது நீ பார்வையற்றவனாக இருந்தாய். அதனால்தான் சில தவறான முகவரிகளை உனக்கு நான் அளித்தேன். ஆனால், தவறான நபர்களுடன் இருப்பதும் நல்லதுதான். ஏனென்றால், தவறானவர்களுடன் இருக்கும்போதுதான் ஒருவன் கற்றுக்கொள்கிறான். நான் உனக்காக முப்பது ஆண்டுகளாக இதே இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த மரத்தை விட்டு நகரவேயில்லை” என்றார்.

அப்போதுதான், அந்த இளைஞன் (இனி எப்போதும் அவன் இளைஞன் இல்லை) அந்த மரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அவன் கனவில், எப்போதும் இந்த மரத்தைத்தான் பார்த்துவந்தான். அந்த மரத்தடியில்தான் தனக்கான தலைசிறந்த குரு தனக்குக் கிடைப்பார் என்பதை அவன் உணர்ந்திருந்தான். கடந்த முறை, அவன் மரத்தைப் பார்க்கவேயில்லை. அப்போதும் மரம் இருந்தது, தலைசிறந்த குருவும் இருந்தார், எல்லாம் தயாராக இருந்தன. ஆனால், அப்போது அவன் தயாராக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x