

இஸ்ரவேலின் புகழ்பெற்ற பட்டணமாக இருந்த பெத்லகேமில், பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் பணிந்து நடந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் குடும்பத்தில் கடைக்குட்டி. தன் தந்தைக்குச் சொந்தமான ஆடுகளைப் பேணி வளர்த்து அவற்றைக் காப்பதுதான் அவனது தலையாயக் கடமை. அப்படிப்பட்ட இளம் ஆயனாக இருந்த அவன், அந்நியப் படையெடுப்பிலிருந்து இஸ்ரவேல் தேசத்தையே தனது கவண் வில்லால் காத்தான் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அவன்தான் தாவீது.
தனது ஆடுகளை ரகசியமாகக் கவர்ந்துசென்று வேட்டையாட வரும் ஓநாய்களையும் கள்வர்களையும் கவண் வில் கொண்டு தாக்கி அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறான். அப்படிப்பட்ட துணிச்சல்காரன். ரூத்துக்கும் போவாஸுக்கும் பிறந்த ஓபேத் என்பவர்தான் தாவீதின் தாத்தா. ஈசாய் என்பவர்தான் தாவீதின் தந்தை. தன் தந்தையின் செம்மறியாடுகளை வனாந்தரத்துக்கும் புல்வெளிகளுக்கும் ஓட்டிச்சென்று அவற்றைக் காத்து வந்தான். ஒருமுறை தனது மந்தையிலிருந்த ஆட்டுக்குட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. துடித்துப்போனான் தாவீது. அதைத் தூக்கிச்சென்றது ஒரு கரடி.
அதன் காலடிகளைப் பின் தொடர்ந்து விரைந்துசென்றவன், கரடி அதை உண்ணும்முன் அதன் வாயிலிருந்து அதை மீட்டான். பிறகு அவனைத் தாக்கவந்தபோது, வேறு வழியின்றிக் கரடியைக் கொன்றான். மற்றொருமுறை தாய் ஆடு ஒன்றைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றினான். அப்படிப்பட்ட தாவீதைத்தான் கடவுள் சவுலுக்குப் பதிலாக அரசனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.
புதிய அரசனைத் தேடி
சவுல் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் கடவுள் சாமுவேலை அழைத்தார்: “ சாமுவேலே... நீ உடனே பெத்லகேம் புறப்படு. போகும்போது, கையில் கொஞ்சம் அபிஷேக எண்ணெய்யை எடுத்துக்கொள். பெத்லெகேமில் இருக்கும் ஈசாயின் வீட்டுக்குச் செல். ஈசாயின் மகன்களில் ஒருவனையே நான் அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.
கடவுளின் கட்டளையை ஏற்று பெத்லகேம் சென்றடைந்த சமுவேல், அங்கே ஈசாயின் வீட்டைத் தேடிக் கண்டடைந்தார். அவரது வீட்டில் சாமுவேல் முதலில் கண்டது ஈசாயின் மூத்த மகனான எலியாவை. அவனைக் கண்ட மாத்திரத்தில், “கடவுள் நிச்சயம் இவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார். ஆனால், கடவுளாகிய யகோவா அவரிடம்: “அவனுடைய உயரத்தையும் கம்பீரமான தோற்றத்தையும் கருத்தில் கொள்ளாதே; நான் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை”என்றார்.
எனவே, ஈசாய் தன் அடுத்த மகனான அபினதா என்பவனை அழைத்துவருகிறார். ஆனால், சாமுவேல்: “இல்லை, இவனையும் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை” என்றதும் அடுத்துத் தன் மற்றொரு மகனான சம்மாவை அழைத்துவருகிறார். சாமுவேலோ, “இல்லை, இவனையும்கூடக் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை”என்கிறார். இப்படி பெத்லகேம் பட்டணத்தில் கடவுளுக்கு உகந்த மனிதராய் வாழ்ந்துவந்த ஈசாய், தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பு நிறுத்தியும் அவர்களில் எவரையும் கடவுள் தேர்ந்தெடுக்கவில்லை.
சாமுவேல் மனம்கொள்ளாமல், “ ஈசாய்... உனக்கு இவ்வளவு மகன்கள்தான் இருக்கிறார்களா?”என்று கேட்டார். அப்படிக் கேட்டதும் அவசரமாக மறுத்தார் ஈசாய். “இல்லை... இல்லை, இன்னும் ஒரு மகன் இருக்கிறான், அவனே கடைக்குட்டி. எல்லோரிலும் இளையவன், ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறான்” என்றார் ஈசாய். சாமுவேல் “உடனே சென்று தாவீதை அழைத்து வா” என்றதும் விரைந்து சென்று அவனை அழைத்துக்கொண்டு வந்தார். தாவீது அழகான தோற்றமும் கண்களின் உண்மையின் ஒளியையும் ஏந்தியிருப்பதை சாமுவேல் பார்த்தார்.
அப்போது கடவுள், “ சாமுவேலே...இவனையே நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவன் தலையில் அபிஷேக எண்ணெய்யை ஊற்று”எனக் கடவுள் கூறினார். இதை தாவீதின் தந்தை மகிழ்ச்சியுடன் கைகளைக் கடவுளை நோக்கிக் கூப்பியபடி நன்றியுடன் பார்த்தார். அவனுடைய சகோதரர்களோ ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இடைச் சிறுவனாகிய தாவீது காலம் கனிந்து வருகையில் அவனை அரசனாக்கக் கடவுள் அவனை முன்னதாகவே தேர்ந்தெடுத்தது இவ்வாறுதான்.
வாளுக்குப் பதிலாக ரொட்டி
போர்க்களம் நோக்கிச் செல்ல வீரர்களுக்கு வாளும் கேடயமும் கவச உடைகளும் தேவை. ஆனால், தாவீது தன் அண்ணன்மார் அனைவருக்கும் ரொட்டித் துண்டுகளை எடுத்துக்கொண்டு தினசரி போய்வந்தார். ஏனெனில், பெலிஸ்தர்கள் மறுபடியும் இஸ்ரவேலரோடு போர் செய்ய வந்தார்கள். பெரும்போர் மூண்டது. தாவீதின் அண்ணன்மாரில் மூவர் இப்போது இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில் இருக்கிறார்கள். எனவே, தாவீதின் தந்தை ஈசாய் அவனைப் பார்த்து, “அன்புமகனே, நீயே மிகவும் பொறுப்பானவன். நம் தேசத்துக்காகப் போரிட்டுவரும் உனது அண்ணன்களுக்குக் கொஞ்சம் தானியத்தையும் ரொட்டிகளையும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, அவர்கள் எப்படி இருக்கிறார்களென்று நலம் விசாரித்து வா” என்று அனுப்பிவைத்தார்.
போர்முனைக்கு தாவீது வந்து சேர்ந்தான். தன்னுடைய அண்ணன்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று ஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டே சென்றான். அப்போது பெலிஸ்தர்களின் படையணியில் ஓர் அரக்கனைப் போல் கோலியாத் என்பவன் நின்றுகொண்டிருந்தான். 9 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்ட உடற்கட்டுடன் கோலியாத் இருந்தான். அவனது கேடயத்தைச் சுமந்துவரத் தனியே ஒரு வீரன் இருப்பதைக் கண்டான். அவனைக் கண்டு இஸ்ரவேல் படை வீரர்கள் நடுங்கினார்கள்.
இஸ்ரவேல் வீரர்கள் இருந்த பக்கமாய் வந்த கோலியாத்: “ என்னோடு மோத உங்களில் ஒருவனை என் முன் நிறுத்துங்கள். அவன் என்னை வென்று சாகடித்தால், நாங்கள் உங்களுக்கு அடிமைகள். ஆனால், நான் அவனைக் கொன்று போட்டால், நீங்கள் எல்லோரும் எங்களுக்கு அடிமைகள். என்னோடு நேருக்கு நேர் மோத எந்த ஆண்மகனையாவது இங்கே அனுப்புங்கள் ” என்று கர்ஜித்தான். இதைக் கேட்டு தாவீதின் மனம் கொதித்தது. தன் அருகில் நின்ற இஸ்ரவேல் வீரர்களைப் பார்த்து, “இந்த பெலிஸ்தனை வென்று அவனைக் கொன்று நம் நாட்டைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டான்.
இப்படிக் கேட்ட தாவீதைப் பார்த்துச் சிரித்த வீரர்களில் ஒருவன், “ அப்படி மட்டும் செய்துவிட்டால், அந்த மாவீரனுக்குச் சவுல் ஏராளமான செல்வங்களைக் கொட்டிக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, தன் மகளை அவனுக்கு மணம் முடித்து தனது ராஜ்ஜியத்தின் வாரிசாக்குவார்” என்றார்.
(பைபிள் கதைகள் தொடரும்)