

ராஜஸ்தானில் உள்ளது பூந்தி. இது ஹதோதி வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களால் ஆளப்பட்டது. சரித்திரப் புகழ் பெற்றது. பல நினைவுச் சின்னங்கள் உள்ள பழமையான நகரம். காலம் இங்கு உறைந்துள்ளது. இங்குதான் கேஷோரைபட்டன் என்னும் இடத்தில் கேசவரின் ஆலயம் உள்ளது.
பட்டன் என்றால் நதிக்கரை ஓரமாக இருக்கும் இடம் என்று அர்த்தமாம். கோயிலும் நதிக்கரையிலயே அமைந்துள்ளது. நதியின் பெயர் சம்பல். இது பூந்தியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலிருந்தாலும் கோட்டாவிலிருந்து வருவதுதான் உசிதம். படகு மூலமாக நதியைக் கடக்க வேண்டும் . இந்தக் கரையிலிருந்து பார்த்தால் காசியைப் போல் தெரிகிறது.
இந்தக் கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயில் வலுவான அடித்தளம் கொண்ட மிகப் பெரிய மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவிலான கருவறையின் மேல் கட்டப் பட்ட ராஜ கோபுரம் மிக உயரமாகக் கூம்பு வடிவில் கொஞ்சம் நம் ஊர் பாணியில் அமைந்தது போல் தெரிகிறது. அதன்மேல், கடவுளர்கள், தேவர்கள்,யட்சர்கள் , கந்தர்வர்கள் முதலிய தேவலோகத்தினரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிவரும்போது பார்த்தால் அந்த அழகை முழுமையாக பருக முடிகிறது. மற்றும் மலர் வடிவங்கள், மிருகங்கள், அரசர்கள் போன்ற புவி சார்ந்த உருவங்களும் உள்ளன. கோபுரத்தில் ஒவ்வொரு தளத்திலும் சின்னச் சின்ன கோபுரங்கள் எழும்பி நிற்கின்றன. மேல் பாகம் குறுகிக் கொண்டே போகிறது. உச்சத்தில் கலசம் உள்ளது. முழுமையாகப் பார்த்தால் இது அலங்கரிக்கப்பட்ட ரதம் போல் உள்ளது. இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய மணி போல் காட்சியளிக்கிறது. கோயிலின் உட்புறம் - நமஸ்கார மண்டபம் - பக்தர்கள் தரிசனம் செய்யும் இடம் - ஜக்மோகன் என்று அழைக்கப்படுகிறது. ஆங்காங்கே உப்பரிகைகள். இங்கும் சிற்பியின் கைத்திறன் பளிச்சிடுகிறது. எங்கும் வடிவமைப்புகள். இவைகளை இணைக்கும் விதமாக இடைப் பின்னல் வடிவங்கள் உள்ளன. மறுபடியும் இந்த வட்டங்களில் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன
இங்குதான் உள்ளே கேசவர் கொலு வீற்றிருக்கிறார். பகவானின் விக்ரகத்தை அலங்கரிப்பதில் தங்கள் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றுவதில் வட இந்தியர்கள் ஆர்வம் கொண்டவர்கள். மனதைக் கொள்ளை கொள்ளும் தோற்றத்துடன் ' கேசவ்ராய்ஜி' பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் விக்ரகம் வெள்ளைக் கல்லில் ஆனது (கருமையான மற்ற விக்ரகம் கோயிலின் வேறு இடத்தில் உள்ளது). இடது கையில் சக்கரம். வலதில் சங்கு. பட்டு ,பீதாம்பரத்துடன் ஜம்மென்று காட்சி தருகிறார் கலர் கலராய் துணிகள். மார்பில் ஹாரம் பளபளக்கிறது. மண்டபம் இரண்டு அடுக்குகளுடனும் அதற்கு மேல் ராஜஸ்தானிய பாணியில் செதுக்கப்பட்டுள்ள விதானங்கள் அமைந்துள்ளன. எங்கு பார்த்தாலும் சிற்ப வேலைப்பாடுகள். கோயில் முழுவதும் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் செதுக்கல்கள். சிற்பியின் கை வண்ணங்கள். மொத்தத்தில் அபாரமான கலைத்திறனுடன் கட்டப்பட்ட கோயில். இதுதான் இக்கோயிலை மேம்படுத்தி எல்லோர் கவனத்தையும் ஈர்க்கச் செய்கிறது.
பூஜைகள் துவக்கத்தில் ராமானுஜ சம்பிராயதத்தில் செய்யப்பட்டதாம். . தற்போது புஷ்டிமர்க்ய சம்பிராயதத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி அன்று (உத்தேசமாக) நடைபெறும் வைபவம். ஆயிரக் கணக்கில் பக்தர்கள் நதியில் நீராடி கேசவரை வழிபடுவர். பெரிய உற்சவமாகவே நடக்குமாம். 15 நாட்கள். நதி தீரத்தில் மேடை அமைத்து விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும்.