

சக மனிதர்களின் துன்பங்களைக் கண்டுருகும் இளகிய மனமும், அடுத்தவருக்கு அள்ளித் தரும் தன்மையும், தேவையுள்ளோர்க்கு ஓடோடி உதவி செய்வதற்கான எண்ணங்களையும் ஊற்றெடுக்கச் செய்ய தூண்டுகிறது இஸ்லாம். “எவர் தங்கள் பொருட்களை, இரவிலும், பகலிலும் ரகசியமாகவும், பரமரகசியமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலி இறைவனிடத்தில் உள்ளது!” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. குறுகிய மனம், பேராசை, கஞ்சத்தனம் இவை மனித வாழ்வின் நோக்கத்தை தகர்த்திடும் தீமைகளாய் அது அடையாளப்படுத்துகிறது.
வாழ்க்கையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தான் ஈட்டிய செல்வத்தை செலவழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும், மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். செல்வமென்னும் அந்த இறையருளில் தேவையுள்ளவர்களின் பங்குமிருப்பதை மறந்துவிடக்கூடாது. உதவி பெறும் கரங்களைவிட வாரி வழங்கும் கரங்களே சிறந்தவை!
“தருமம் செய்வோர் இறைவனால் நேசிக்கப்பட்டு அவனது அருகாமையில் இருப்பார். மக்கள் மனங்களில் இடம் பிடித்திருப்பார். அதேபோல, சுவனத்திற்கு அருகிலும் இருப்பார். கஞ்சத்தனம் செய்பவனோ இறைவனின் கருணையைவிட்டு விலகி வெகுதூரமிருப்பான். மனிதர்களால் வெறுக்கப்பட்டிருப் பான். அதேபோல, நரகத்திற்கு மிக அருகில் இருப்பான். கஞ்சத்தனம் கொண்ட ஒரு தொழுகையாளியை விட கல்வியறிவற்ற ஒரு கொடை வள்ளலே இறைவனின் பார்வையில் சிறந்தவனாவான்” என்கிறார் நபிகளார்.
உறவுகளில் நிலவும் நல்லிணக்கம்
தன்னிறைவு பெற்ற தனிமனிதன் என்பது சமூக அமைப்பில் முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. ஒவ்வொரு மனிதனும் பிறரைச் சார்ந்தே வாழ்கிறான். தனிமனித உறவுகளில் நிலவும் நல்லிணக்கம், பரஸ்பரம் செய்து கொள்ளும் உதவிகள் அச்சமூகத்தை பலம் பொருந்தியதாக்கிவிடும்.
தேவையுள்ளோருக்குத் தராமல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியும், பொன்னும் அவற்றின் உரிமையாளர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் தண்டனைப் பெற்றுத் தரும் சோதனைக் களஞ்சியங்களாகவே மாறி நிற்கும். இவற்றால் ஏற்படும் எதிர்விளைவுகள் மிக மோசமானவையாகவும் இருக்கும். தன்னுடைய செல்வத்திலிருந்து அடுத்தவருக்கு உரிமையானதைத் தராதவரின் செல்வம் இறுதித் தீர்ப்பு நாளில் அவற்றின் உரிமையாளர்களை பழி தீர்க்கும் பாம்புகளாய் மாறி நிற்கும் என எச்சரிக்கிறது இஸ்லாம்.
என்னுடைய செல்வம்..! என்னுடைய செல்வம்..!! என்று மனிதன் கூப்பாடு போடுகின்றான். உண்மையில், அவனுடைய செல்வம் மூன்றுவகையானது. ஒன்று உண்டு, பருகி செலவழித்தது. அணிந்து இன்பம் கண்டு துய்த்தது. அடுத்தது, தனக்கும், தனது சந்ததிகளுக்குமாய் செலவழித்தது. மூன்றாவது, தேவையுள்ள வர்களுக்களுக்கு வழங்கி செலவு செய்து மறுமைக்காக சேர்த்துக் கொண்ட சிறப்புக்குரியது.
மறுமைநாளில் நடக்கும் வழக்கொன்றை நபிகளார் தமது தோழர் அப்துல்லாஹ் பின் மஸூத்திடம், “அந்த இரண்டு வகையான மனிதர்களுக்கு இறைவன் ஏராளமான சொத்து, சுகங்கள், சந்ததிகளை அருளினான். மறுமையில், முதலாவது மனிதக் கூட்டத்தாரை அழைப்பான். அவர்களில் ஒருவரை அழைத்து, என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படி செலழித்தாய்? என்று கேட்பான்.
அதற்கு அந்த மனிதரோ, “என்னுடைய சந்ததிகள் வறுமையில் பீடிக்கப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சி நான் அவற்றை என் சந்ததிகளுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன்!” என்று பதில் சொல்வான்.
அதை கேட்டு இறைவன் இப்படி சொல்வான்: “உண்மையைத் தெரிந்து கொண்டால் குறைவாகவே மகிழ்ச்சியடைவாய். அதிகமாகக் கண்ணீர் சிந்துவாய். உனது சந்ததிகளுக்கு எது வரக்கூடாது என்று அஞ்சினாயோ அதையே உமது சந்ததிகளின் மீது இறக்கிவிட்டேன்!”
பின்னர், இரண்டாவது கூட்டத்தாரைச் சேர்ந்த மனிதனிடம், “என்னுடைய அடியானே! இம்மையில், நான் அருளிய செல்வ அருள்வளங்களை எப்படிச் செலழித்தாய்?” – என்று விசாரணை ஆரம்பமாகும்.
அதற்கு அந்த அடியான், “இறைவா நீ என் மீது சொரிந்த அருட்கொடைகளை உனது கட்டளைப்படியே அறவழிகளில் செலவழித்தேன். உனது எல்லையற்ற கருணையையும், அருளையும், பாதுகாப்பையும் மட்டுமே என் சந்ததிகளின் சொத்துக்களாய் விட்டு வந்தேன்!” என்பான்.
இதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் சொல்வான்: “உண்மையை தெரிந்து கொண்டால், குறைவாகவே கவலை கொள்வாய். அதிகமாய் மகிழ்ச்சி அடைவாய். எவற்றை நம்பி உமது சந்ததிகளை விட்டு வந்தாயோ அவற்றையே நான் அவர்களுக்கு அருள்பாலித்துவிட்டேன்!”