

“முயற்சி, ஊக்கம், அறிவுடைமை முதலான ஐந்து குணங்கள் என் மனத்தில் உள்ளன. நிர்வாண மோட்சம் பெறுவதற்காக இந்த நல்ல குணங்களை அதிகரித்து, என் மனத்தை அர்ப்பணித்திருக்கிறேன். உலகில் வாழ வேண்டியதைப் பற்றிய கவலை எனக்கு இல்லை," என்று தன் தவத்தைக் கலைக்க வந்த வசவர்த்தி மாரனிடம், கவுதம முனிவர் கூறினார்.
முயற்சி கலையாது
"நான் அப்பிரணத் தியானம் செய்ததால் உருவான வாயு, ஆற்று நீரையும் வற்றச் செய்துவிடும். அப்படிப்பட்ட வாயு என் உடம்பிலுள்ள ரத்தத்தை வற்றச் செய்யாமல் எப்படி இருக்கும்? ரத்தம் வற்றினால் பித்தமும் சிலேத்துமமும் சதையும் வற்றிப்போகும். அப்போது மனம் மிகுந்த ஒளியுடன் திகழும்.
மனமும், அறிவும், தியானமும் (சமாதி நிலை) மிக உறுதியாக அசையாமல் இருக்கும். என் மனஉறுதியை அறியாமல் என் உடம்பை மட்டும் பார்த்துவிட்டு, தேகம் மெலிந்து போனதாக நீ கூறுகிறாய் உறுதியோடும் முயற்சியுடனும் பாவனா தியானத்தோடு இருக்கிற என்னுடைய மனோ முயற்சியைக் கலைக்க உன்னால் முடியாது. உடல் மெலிந்தாலும் என் முயற்சியைக் கைவிட்டு அரச போகங்களையும் இதர சுகங்களையும் அனுபவிக்க என் மனம் விரும்பாது."
பத்துப் படைகள்
"மாரனே! உன்னை நான் நன்கு அறிவேன். உன்னிடம் பலமான பத்து வகைப் படைகள் உள்ளன. காமம் உன்னுடைய முதல் படை. குணங்களில் வெறுப்புடைமை, உன்னுடைய இரண்டாவது படை. பசியும், தாகமும் உன்னுடைய மூன்றாம் படை. உணவு முதலியவற்றை அடைய முயற்சி செய்வது, உனது நான்காவது படை. மன உறுதியின்மை உன்னுடைய ஐந்தாம் படை. அச்சமுடைமை உன்னுடைய ஆறாவது படை. நன்மை தீமைகளைப் பகுத்துணர முடியாமல் ஐயப்படுவது ஏழாவது படை. பிறருடைய நற்குணங்களை மறப்பதும் நல் உபதேசங்களை மதிக்காமல் இருப்பதும் எட்டாவது படை. பொருள் ஆசையும், கர்வம் கொண்டிருப்பதும் உன்னுடைய ஒன்பதாவது படை. தன்னைப் பெரிதாக மதித்து மற்றவரை அவமதிப்பது, உன்னுடைய பத்தாவது படை.
இந்தப் பத்துப் பாவக் காரியங்களும் உன்னுடைய பலமான படைகள். இந்தப் பத்துப் படைகளைக் கொண்டு தியானம் செய்பவர்களுக்கு நீ துன்பத்தை உண்டாக்குகிறாய்.
தோற்பது அவமானம்
உறுதியற்ற, பலவீனமான மனது கொண்டவர்கள் இந்தப் படைகளிடம் போரிட்டு உன்னிடம் தோல்வி அடைகிறார்கள். உறுதியான, பலமுள்ள மனம் கொண்டவர்கள் உன்னை வெற்றிகொள்கிறார்கள். இந்த வெற்றியால்தான் ஏகாந்தம் கிடைக்கும். நான் இதில் வெற்றி பெறாமல் திரும்பமாட்டேன்.
மனதில் உள்ள குற்றம் தொடர்பான இந்தப் போரில் தோற்பது எனக்கு அவமானம். தோல்வியடைந்து உயிர் வாழ்வதைவிட, போர்க் களத்திலே இறப்பது மேல். மனதில் உள்ள குற்றம் சார்ந்த இந்தப் படைகளுக்கு எதிரான போராட்டத்தில், மனஉறுதி இல்லாமல் மனச்சோர்வு அடைந்து சில சிரமணர்கள் தோற்றுப் போகிறார்கள்" என்று கவுதம முனிவர், மாரனுக்குப் பதில் கூறி முடித்தார்.
இதைக் கேட்ட மாரன், "இவரை நம்மால் நிச்சயம் வெல்ல முடியாது," என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு திரும்பப் போய்விட்டான்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'
தொகுப்பு: ஆதி