Last Updated : 14 Jul, 2016 12:03 PM

 

Published : 14 Jul 2016 12:03 PM
Last Updated : 14 Jul 2016 12:03 PM

ஸ்ரீராமானுஜரின் தலைமைச் செயலகம்

ஸ்ரீராமானுஜர் திருவரங்க மாநகர் எழுந்தருளியபோது அவருக்கு நம்பெருமாள் சிறப்பான வரவேற்பு அளித்தார்; சிவப்புக் கம்பள விரிப்பில் அவரைக் கௌரவித்தார்; தம்முடைய திருவரங்கச் செல்வத்தை அவருடைய உடைமையாக்கி ‘உடையவர்’ என்று அழைத்துச் சிறப்பித்தார். விண்ணுலகு மற்றும் மண்ணுலகையாளும் செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் உபயவிபூதிக்கும் தலைமை நிர்வாகத்தை உடையவரிடமே ஒப்படைத்தார்.

உடையவர் தங்கிச் செங்கோல் செலுத்தும் தலைமையகமாகச் சேரன் மடத்தை அவருக்கே உரிமையாக்கினார். அதே சேரன் மடத்தில் முற்காலத்தில் குலசேகராழ்வார் தங்கியிருந்து தம்முடைய திருமகளாகிய சேரகுலவல்லியை அரங்கனுக்கு உரிமையாக்கி ஆட்படுத்தினார்.

திருவரங்கர் அனுப்பிய அனைத்துக் கொத்து பரிகரங்களும் (பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்) பரிஜனங்களும் (பொதுமக்கள்) வெற்றி முழக்கோடு ‘ஜய விஜயீபவ’ என்ற கோஷங்களுடன் ஸ்ரீராமானுஜரை சேரன் மடத்தில் எழுந்தருளச் செய்து தாங்கள் ‘இராமானுசனுடையார்’ என்று பெருமிதம் கொண்டனர்.

திருவரங்கம் வடக்கு உத்தர வீதி கிழக்குக் கண்டத்தில் ஸ்ரீரங்க நாராயண ஜீயரின் மடமாக இன்றும் அது விளங்குகிறது. இந்தத் திருமடத்தில்தான் ஸ்ரீராமானுஜர் தம்முடைய செயலகத்தை ஏற்படுத்திக்கொண்டார். ஸ்ரீரங்க க்ஷேத்திர பரிபாலனத்தையும் பெரிய பெருமாள் திருச்செல்வத்தையும் இந்தச் செயலகத்திலிருந்துதான் நிர்வாகம் செய்தார்.

அதனைச் செயற்படுத்துவதில் அதிகாரிகளையும் அலுவலர்களையும் பணியாட்களையும் அமர்த்திக்கொண்டார்.

இச்செயலகத்தில் வீற்றிருந்து ஸ்ரீராமானுஜர் விடியற்காலை மூன்று மணி தொடங்கி நள்ளிரவு வரை செயலாற்றினார். அதற்கு உதவியாகப் பணியாற்றிய அவருடைய சிஷ்யர்களையும் அவர்களுடைய செயற்பங்குகளையும் இரண்டு ஜீயர்கள் தொகுத்துப் பதிவு செய்து வைத்தனர். ஒருவர் ஸ்ரீராமானுஜரை நேரில் கண்டவர்; மற்றொருவர் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளைலோகம் ஜீயர். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்தவர் இந்த ஜீயர்.

ஸ்ரீராமானுஜரின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர்கள் கந்தாடையாண்டான், நடாதூராழ்வான், கூரத்தாழ்வான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், கிடாம்பியாச்சான், கிடாம்பிப் பெருமாள், வடுகநம்பி, முதலியாண்டான், எம்பார், கோமடத்துச் சிறியாழ்வான், பிள்ளையுறங்காவில்லிதாசர், அம்மங்கி, உக்கலாழ்வான், உக்கலம்மாள், மாருதியாண்டான், மாறொன்றில்லாச் சிறியாண்டான், வண்டர், சொண்டர், ராமானுஜவேளைக்காரர், அகளங்க நாட்டாழ்வான், திருவரங்கத்தமுதனார், திருவலகிடும் அம்மைமார்கள், தண்ணீர் தெளிக்கும் கொற்றி அம்மைமார்கள் என்று அலுவலர்கள் எப்போதும் விழிப்புடன் பணியாற்றினர்.

அவர்களாற்றிய பணிப் பங்கீடுகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. அவற்றைக் காண்போம்:

(1) கந்தாடை ஆண்டானும் நடாதூராழ்வானும் வேதார்த்த விசாரம் செய்யும் வைதிகர்களை நிர்வகித்தனர்.

(2) கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தைச் சொல்லும்போது ஏடும் எழுத்தாணியும் கையிலே கொண்டு அவர் அருளிச் செய்யும் வாக்ய வரிசைகளைப் ‘பட்டோலை’ செய்து பாதுகாத்து வந்தார்.

அவருக்கு மேலும் சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமடத்தின் நூல் நிலையத்தைப் பராமரித்து ஒழுங்குபடுத்துதல், உணவுப் பொருள் சேமித்து வைக்கும் சரக்கு அறையை மேற்பார்வை செய்தல் ஆகிய இரு பொறுப்புகளைக் கூரத்தாழ்வான் ஏற்றுப் பணியாற்றினார்.

(3) அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற ஜீயர் ஸ்ரீமடத்தில் எழுந்தருளச் செய்த திருமேனிகளுக்கு உரிய காலத்தில் திருவாராதனம் செய்துவந்தார். எம்பெருமானார் நியமனத்தை சிரமேற்கொண்டு ஞானஸாரம், பிரமேயஸாரம் என்ற ஸம்பிரதாய கிரந்தங்களில் எம்பெருமானாரின் உபதேச மொழிகளை அனைவரும் அறிந்து உய்யும்படியாகத் தமிழ்ச் செய்யுள் நூல்களாகத் தொகுத்தளித்துள்ளார்.

(4) கிடாம்பியாச்சானும் கிடாம்பிப் பெருமாளும் ஸ்ரீமடத்தின் திருமடைப்பள்ளி கைங்கரியத்தை ஏற்றுக்கொண்டனர்.

(5) ஆந்த்ரபூர்ணர் என்ற வடுகநம்பி ஸ்ரீமடத்தின் கோசாலைப் பசுக்களுக்குப் புல் இடுதல், தேய்த்துக் குளிப்பாட்டுதல், பால் கறத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார்.

(6) முதலியாண்டான், ஸ்ரீராமானுஜர் நீராட்டம் செய்து திருமண் காப்பு அணிந்து கொள்வதற்கு அருகிருந்து பரிசாரக கைங்கரியம் செய்தார். திருமண் ஸ்ரீசூர்ணக் காப்புகளைப் பராமரித்துத் திருப்பவித்ர மாலைகளைத் திருத்தி அமைப்பது போன்ற பணிகளை சிரத்தையுடன் ஆற்றினார்.

மேலும் ஸ்ரீராமானுஜரின் திருவடி நிலைகளை உரிய காலத்தில் சமர்ப்பித்தும் பேணிப் பாதுகாப்பதும் ஆகிய பணிகளை முதலியாண்டான் கருத்துடன் கவனித்துவந்தார்.

(7) எம்பாருக்கு ஐந்து வகைப் பணிகள் நியமிக்கப்பட்டிருந்தன. ஸ்ரீராமானுஜர் திவ்ய தேச சஞ்சாரங்கள் செய்கிற காலத்தில் அவருடைய திருவடிகளையும் திருமேனியையும் பிடித்துவிடுதல், ஸ்ரீராமானுஜரின் காஷாய வஸ்த்ரங்களைத் தோய்த்து உலர்த்தித் திருப்பரியட்டங்களாகச் சமர்ப்பிப்பது, ஸ்ரீராமானுஜர் வெளிப்புறங்களில் எழுந்தருளும்போது பற்றிச் செல்வதற்குத் தம்முடைய திருக்கையைத் துணையாகச் சமர்ப்பிப்பது, இரவு ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளி கொள்ளும்போது அவருடைய திருப்படுக்கையைச் சோதித்து விரிப்பது, ஸ்ரீராமானுஜர் திருக்கண் அயர்ந்து நித்திரை கொள்ளும்போது அவருடைய திருமேனிக் காவலாக நிற்பது ஆகிய பணிகளை எம்பார் ஆற்றினார்.

(8) கோமடத்துச் சிறியாழ்வான் ஸ்ரீராமானுஜரின் திருக்கைச் செம்பையும் ஸ்ரீபாதரக்ஷையும் எடுத்தார்.

(9) பிள்ளையுறங்காவில்லிதாசர் ஸ்ரீமடத்தின் கருவூலத்தின் (Treasury) பொறுப்பை ஏற்று நிர்வகித்தார்.

(10) அம்மங்கி என்ற அடியார் ஸ்ரீராமானுஜருக்குப் பருகப் பக்குவமாகப் பாலமுது காய்ச்சும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

(11) உக்கலாழ்வான் என்பவர் திருமடைப்பள்ளியிலிருந்து திருத்தளிகை அமுது வகைகளை ஸ்ரீமடத்து சன்னிதிக்கு மாற்றும் பொறுப்பை நிர்வகித்தார்.

(12) உக்கலம்மாள் என்னும் அடியார் ஸ்ரீராமானுஜருக்குத் திருவாலவட்டம் வீசிக்கொண்டிருப்பார்.

(13) மாருதியாண்டான் என்பவர் திருமடைப்பள்ளிக்கு வேண்டிய தீர்த்தம் மற்றும் சன்னிதிக்கு வேண்டிய திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக் கொடுத்தார்.

(14) மாறொன்றில்லாச் சிறியாண்டான் என்பவர் மடத்தில் அடியார்கள் அமுது செய்யத் தேவையான அமுதுபடி (அரிசி) மற்றும் காய்கறி அமுதுகளைச் சேர்த்து வைப்பார்.

(15) வண்டர், சொண்டர் என்ற பிள்ளையுறங்காவில்லிதாசரின் மருமக்கள் இருவர் அரண்மனைச் சேவகத்தில் சம்பாதிக்கும் பொற்காசுகளை அப்படியே மடத்தில் சேர்த்துப் பொருளாதாரத்தைப் பேணினர்.

(16) ஸ்ரீமடத்தின் பாதுகாவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றிய ராமானுஜ வேளைக்காரர்கள் ஸ்ரீராமானுஜரின் திருமேனி காவல் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றினர்.

ஸ்ரீமடத்துக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஏற்படும் விரோதிகளை எதிர்த்து, அழிவு ஏற்படாமல் பணி செய்தனர்.

(17) திருவரங்கத்தமுதனார் ஸ்ரீராமானுஜரின் வைபவங்களை இராமானுச நூற்றந்தாதியாகச் செய்து அடியார்களை மகிழ்வித்தார்.

(18) மற்றும் ஸ்ரீராமானுஜரின் சிஷ்ய சமூகங்கள் தமக்குரிய பணிகளை நிறைவேற்ற எப்போதும் காத்துக்கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஸ்ரீராமானுஜரின் தலைமைச் செயலகப் பணிகளும் அவற்றை ஆற்றிய அடியவர்களின் திருநாமங்களும் குரு பரம்பரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x