

எப்போதும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்களே! எட்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் திருமணம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் எடுத்து நடத்த வேண்டி வரும். புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இடையிடையே பணப்பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டி வரும். அநாவசிய உறுதிமொழிகளை தவிர்ப்பது நல்லது. தந்தை உடல்நிலை பாதிக்கும்.
கருத்து மோதல்களும் வரும். உடன்பிறந்தவர்களுக்காக பரிந்து பேசுவதால் மனைவியுடன் இடைவெளி அதிகமாகும். பிள்ளைகளால் புகழடைவீர்கள். மகளின் திருமணத்தை உற்றார், உறவினர் வியக்கும்படி நடத்துவீர்கள். இந்த ஆண்டு முழுக்க பாவ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி பேசி புகழடைவீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆரோக்கியம், அழகு கூடும். மீதிப் பணத்தை தந்து சொத்தை பத்திரப் பதிவு செய்து முடிப்பீர்கள். ஆனால் பூர்வீக சொத்துப் பிரச்சினை இழுபறியாகி வருடத்தின் பிற்பகுதியில் சுமுகமாக முடியும். குரு இந்த ஆண்டு முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் புதிய முயற்சிகள் வெற்றியடையும். காற்றோட்டமும் அதிக இடவசதியுமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பேர் சொல்ல வாரிசு பிறக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் லாபம் கூடும். வெளிமாநில வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை மூத்த அதிகாரிகளிடம் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. புது சலுகைகள் கிடைக்கும்.
வழிபாடு - வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர்
மதிப்பெண் - 78/100