Last Updated : 23 Apr, 2014 10:10 AM

 

Published : 23 Apr 2014 10:10 AM
Last Updated : 23 Apr 2014 10:10 AM

‘மோடி வரட்டும் சாடி’ அறிக்கை சரியா?: பிரதியங்கார மாசானமுத்துவின் பிரத்தியேகப் பேட்டி

தமிழிலக்கியத்தின் தனித்த பலவீனக் குரல் பிரதியங்கார மாசானமுத்துவினுடையது; சமீபத்தில் ‘மோடி வரட்டும் சாடி’ என இவர் மோடிக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை தமிழிலக்கியச் சூழலில் சூடு கிளப்பிவிட்டது. போனில் அழைத்துப் பேட்டி என்றதும் வழக்கம்போல “என்ன கருமத்துக்கு?” என்று கேட்டார். பலமுறை கெஞ்சியபின் ஒருவாறாக “சரி, வாறதுன்னா வரும்போது ஒரு பாட்டில் ஓமத்திரம் வாங்கிட்டு வாடே...” என்றார் (பி.மா சோம பானத்தை ஓமம் வாட்டரில்தான் கலந்து அருந்துவார்; பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பெரு நாட்டின் இன்கா மாமன்னர்கள் அப்படித்தான் சாப்பிடுவார்களாம்). “மினி பேட்டிதான் சார்…” என மறுமுனையில் நான் இழுத்தேன். “அப்படின்னா அரை பாட்டிலாவது வாங்கிட்டு வாடே” என போனைத் துண்டித்தார்.

அச்சன்விளை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சரக்கொன்றைகள் வழித்தடமெங்கும் இறைந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே நடந்தால், சிறிது தூரத்தில் தென்னை மரங்கள் நிறைந்த தோப்பு. சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது மோட்டார் பம்ப். பல வகையான புள்ளினங்களின் ஓசை சூழலை மேலும் இனிமையாக்கிக்கொண்டிருந்தது. தோப்புக்கு நேரெதிரே கார்ப்பரேஷன் கக்கூஸ்போல ஒரு வீடு. இளம் வாசகர்கள் யாராவது வந்துபேசிக் கூத்தடித்துவிட்டுப் போகும்போது கையோடு ஒரு இலையை எடுத்துச்செல்ல வாகாக வீட்டு வாசலில் ஒரு வாகை மரம்.

உள்ளே நுழைந்தால், ஒரு கலவரமான ஹேர்ஸ்டைலில் அமர்ந்திருந்தார் பிரதியங்கார மாசானமுத்து. தலைமுடி நீளமாக வளர்க்கப்பட்டு, ஆங்காங்கே சுருட்டப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுருட்டலுக்கும் ஒரு வண்ணம். ஒரே தொட்டியில் பல வண்ண ரோஜாக்கள் பூத்தது போலிருந்தது தலை.

“என்ன அண்ணாச்சி இது கோலம்?” என்றேன்.

“இப்பம்லாம் மண்ட ஒரு மார்க்கமா இருந்தாதானடே டி.வி-ல கருத்துச் சொல்லக் கூப்புடுகான்…” என்றார்.

“என்ன திடீர்னு மோடியை ஆதரித்து அறிக்கை; கையெழுத்து வேட்டை எல்லாம்... பொதுவா, நீங்க சமகால அரசியலைப் பற்றிக் கருத்து எதுவும் சொல்ல மாட்டீங்களே...”

முதல் கேள்வியுடன் பேட்டியைத் துவக்கினேன்.

பி.மா: பெறவு என்னடே... ஒருநா காலைல ஒருத்தன் மிஸ்டு கால் கொடுத்தான். எவம்லே அது நமக்கே மிஸ்டு கால் வுடறவன்னு நானும் பதிலுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன். பெறவு அவனே கூப்பிட்டு ‘மோடிக்கு எதிரா ஒரு கூட்டறிக்கைக் கையெழுத்துப் போடுதீரா’ன்னான். நான் வழக்கம்போல ‘துட்டு எதும் உண்டுமா… இல்ல, தருமக் கொள்ளியா’ன்னு கேட்டேன். டப்புன்னு போனை வச்சுட்டான். எனக்குன்னா கோவமான கோவம். என்னைய என்ன மாங்குடின்னு நெனச்சானான்னு பதிலுக்கு நானே ஒரு அறிக்க வுட்டுட்டம்டே...

அறிக்கை வுட்டீங்க சரி. அதுக்குக் கீழே கையெழுத்துப் போட்டிருக்கிறது பூரா உங்க புனைபெயரா இருக்கே. நீங்க கதை, கவிதை, நாவல், டி.வி. சீரியல், திரைக்கதை, ஃபேஸ்புக், ட்வீட்டர் என ஒண்ணொண்ணும் ஒவ்வொரு புனைபெயர்ல எழுதறீங்க. அதையே கையெழுத்தாவும் போட்டு 27 பேர் ஆதரவுன்னு சொல்றது ரொம்ப ஓவரா இருக்கே… சரி போட்டு. மதக் கலவரத்தின் பெயரால் குஜராத்தில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவருக்கா உங்கள் ஆதரவு?

ஒரு பேச்சுக்கு அங்கே அப்படி நடந்துச்சுன்னே வச்சுக்கோங்க… அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சு, குஜராத்லருந்து அப்புறப்படுத்தி, டெல்லிக்கு அனுப்பி முஸ்லிம்களைப் பாதுகாக்கலாமே.

குஜராத் ஒன்றும் வளரவில்லை, பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்கிறார்களே நம் அறிவுஜீவிகள்?

சரிடே... அப்படி வளரலன்னே வச்சுக்குவோம்... சீயெம்மா இருந்து அவரால குஜராத்த வளர்த்த முடியல... ஓட்டுப் போட்டு பீயெம்மா ஆக்குங்க. கூடுதல் பவரு. அப்ப வளர வச்சிருவாரு.

(‘எப்ப மாமா… மாமா… ட்ரீட்டு...’ என போன் கதறுகிறது; ‘ஒரு நிமிஷம் இருடே’ என செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசல்பக்கம் போயி ஹஸ்கி வாய்ஸில் பேசலானார் ‘அட கிறுக்குப்பயவுள்ள, ஒரு கவிதைக்கு ஒரு லைக்குதாம்டி ஃபேஸ்புக்குல போட முடியும்... ஒஹ்... செலுப்பி போட்டோ போட்டிருக்கியா… தெரியாதடி. ஒரு கிறுக்கன் வந்துருக்கான், அவன அனுப்பிட்டு வந்து லைக்குதம்டி. நீ கெடந்து கரையாதே’)

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிதான் மோடிங்கிறாங்க. பிரச்சாரச் செலவுகளுக்காகக் கோடிக் கணக்கான பணத்தை கார்ப்பரேட்டுகள் அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள். மோடியை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறீர்களா?

இந்திய வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளைக் காலிசெய்ய இதவிடச் சிறந்த வழி என்னடே இருக்கு? கருப்புப் பணத்த வெளிக்கொண்டுவார வழியாக்கும்டே இது.

குஜராத் பக்கமே போகாத நீங்கள், ‘குஜராத் ஒளிர்கிறது’ என எப்படிச் சொல்கிறீர்கள்?

இங்ஙன உள்ள பயக்கபூரா குஜராத்துக் கலவரத்த நேர்ல பாத்தமாதிரி எழுதுகானுகளே அதுமாதிரிதான்.

பேச்சை மாற்றாதீர்கள். குஜராத் ஒளிர்கிறதா, இல்லையா?

இவன் பாதரவு தாங்க ஏழலையே… லேய் மக்களேய்... குஜராத்துல நெதம் ஆயிரக் கணக்குல கூலிங் க்ளாசு விக்குதுலேய். கண்ணுகூசப்போயிதான அவனவன் வாங்கி மாட்டுதான். சபுடாராவில் குதுர வண்டி ஒட்டுத நம்மூரு பய ஒருத்தங்கிட்ட பேசுனம்டே. அவன் குஜராத் குளிருதுன்னான்.

தன் திருமணத்தை மறைத்து மோசடி செய்தவர்தான் மோடி என்கிறார்களே...

விட்டுத் தொலைங்கடே... அடுத்த கலியாணத்துக்கு மறக்காம எல்லாரையும் கூப்பிடுவாரு...

நான் அடுத்த கேள்வியைத் தொடங்க வாயெடுப்பதற்குள் திரும்ப ‘எப்ப மாமா… மாமா… ட்ரீட்டு...’ ஒரு டி.வி-யிலிருந்து அழைப்பு. குஜிலிகும்பான், கும்பமுனி ஆகியோருடன் பிரதியங்காரமும் கலந்துகொள்ளும் நேரலை நிகழ்ச்சியாம். சட்டென்று உள்ளே போய் சட்டையை மாற்றி டி-ஷர்ட்டை அணிந்து வெளியேறிவிட்டார். டி-ஷர்ட்டின் வயிற்றுப் பகுதியில் ‘ஐயாம் சிங்கிள்’ என எழுதியிருந்தது.

நான் அவர் வீட்டுப் பூனையுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, உதிர்ந்து கிடந்த ஒரு வாகை மரத்து இலையை மறக்காமல் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

(இது கற்பனையான சந்திப்பு, யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.)

- செல்வேந்திரன், தொடர்புக்கு: selventhiran.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x