

செப்டம்பர் 13: வாமன ஜெயந்தி, ஓணம் பண்டிகை
வாமன அவதாரம் எடுத்த ஸ்ரீமன் நாராயணன், பிரஹலாத வம்சத்தைச் சேர்ந்த மகாபலி மன்னனைத் தடுத்தாட்கொள்ள நினைத்தார். மூன்றடி நிலம் கேட்டு, பூமியை ஓர் அடியாகவும், வானத்தை இரண்டாம் அடியாகவும், மூன்றாம் அடியை மன்னன் தலையிலும் தமது புனிதத் திருப்பாதத்தை வைத்தார். இதனால் மன்னன் அதல பாதாளத்தில் அழுத்தப்பட்டார். ஆனால், ஆண்டு ஒன்றுக்கு ஒரு முறை கேரளம் வந்து தம் மக்கள் நன்கு வாழுவதைக் காணலாம் என்று மன்னனுக்கு வரமளித்தார் வாமன அவதாரப் பெருமாள்.
இதனால் ஆண்டுதோறும் அவரது வருகையை முன்னிட்டு கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக நடைபெறும். மக்கள் புத்தாடை அணிந்து வண்ண வண்ணப் பூக்களைக் கொண்டு கோலமிடுவர். செம்பருத்திப் பூவை முதலில் வைத்துத் தொடங்கப்படும் இந்த பூக்கோலங்களுக்கு அத்தப்பூ கோலம் என்று பெயர்.
ஆவணி மாதம் கேரளாவில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் காலம். அதனால் ஓணம் பண்டிகை பூக்களின் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முதல் நாளே போடப்படும் கோலம் அத்தப்பூ கோலம். பத்தாம் நாள் பத்து வகைப் பூக்களைக் கொண்டு கோலங்கள் போடுவார்கள். கேரளாவிற்கே உரிய வெண்மை ஆடை உடுத்திய பெண்கள் இக்கோலமிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். அத்தப்பூ கோலம் அரசனை வரவழைக்கும் என்பது ஐதீகம்.