

அழகான ஒரு கிராமம். அங்குள்ள வயலில் நெல் விளைவதற்குப் பதிலாக, பொன்னே விளைந்தது போல் ஓகோவென்று கொள்ளை விளைச்சல்! ஊருக்குப் ‘பொன் விளைந்த களத்தூர்’ என்றே பெயர். நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர் பிறந்த திருத்தலம் என்பது ஊருக்கு இன்னொரு சிறப்பு. செங்கல்பட்டு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
பொன் விளைந்த களத்தூரில், ஒத்திவாக்கம் ஸ்டேஷன் ரெயில்வே கேட்டைத் தாண்டி, நடைத் தூரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான, ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி கோயில் இருக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டவாசப் பெருமான் இக்கோயிலில் மூலவராக உறைந்திருக்கிறார். கருவறையில், மூலவருக்கு முன்னதாக ஸ்ரீஅகோபிலவள்ளித் தாயார் சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் உற்சவராகக் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு வலது பக்கம் சக்கரத்தாழ்வார்; இடது பக்கம் நவநீத கிருஷ்ணன்.
கருவறையில் ஸ்ரீநரசிம்மரோடு மட்டுமல்லாது, கருவறையின் வலதுபக்கம் தனிச் சந்நிதியிலும் தனியாக ஸ்ரீஅகோபிலவள்ளித் தாயார் உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். மூலவருக்கு இடது பக்கம் ஸ்ரீஆண்டாள் சன்னிதி. ஆண்டாள் சன்னிதிக்கு முன், தெற்குத் திசை பார்த்து ஸ்ரீ கோதண்டராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், மற்றும் ஹயக்ரீவர் என்று கண்கொள்ளாக் காட்சியாக விக்கிரகங்கள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. பிராகாரத்தில் சுதை வேலைப்பாட்டில் ஸ்ரீ ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலின் மூலவர், காலம் காலமாக இங்கேயே உறைந்திருப்பவர். உற்சவ மூர்த்தியான ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வெளியிலிருந்து வருகை புரிந்தவர். மகாபலிபுரம் என்கிற கடல்மல்லைத் திருத்தலத்தி லிருந்து 900 ஆண்டுகளுக்கு முன் கடல்கொண்டுவிடக் கூடாதெனப் பாதுகாப்பாக கருடன் வழிகாட்ட, இங்கே பக்தர்களால் கொண்டுவரப்பட்டவர் இந்த உற்சவமூர்த்தி என்பது வரலாறு. தன் இருப்பிடத்தைத் தானே முடிவு செய்து இடம் பெயர்ந்து வந்துவிட்ட பெருமாள் என்று சொல்லுகிறார்கள். மகாபலிபுரம் ஸ்ரீ ஸ்தலசயன ஸ்வாமி ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மனாக சிம்ம முகத்துடன், மடியில் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் அழகிய மூலவிக்கிரக சிலா மூர்த்தியை இன்றும் சேவிக்கலாம்.
கருணை பொங்கும் திருக்கோலம்
பொன்விளைந்த களத்தூர் ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாளையும், உற்சவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அத்தனை அழகு; கருணை பொங்கும் திருக்கோலம். ஸ்ரீ வேதாந்த தேசிகர் வந்து ஒருநாள் தங்கி சேவித்துப் பின் கிளம்பிய பெருமை உடையது இந்த ஆலயம். இக்கோயிலில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதிக்கு இடது பக்கம் ஆழ்வார் சந்நிதி உள்ளது.
விஷ்வக்சேனர் எனப்படும் சேனை முதலியார் முன்னிருக்க, பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வரும் இங்கு இருந்து அருள்புரிகிறார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் திரளாக இங்கு வருகை தருகிறார்கள். திருமணத் தடை அகலவும், குழந்தை இல்லாதோர்க்குக் குழந்தை வேண்டியும், மனதுக்கு அமைதி, சாந்தம் மகிழ்ச்சி மட்டுமல்லாமல், வேண்டுவனவெல்லாம் குறைவில்லாமல் கிடைப்பதற்காகவும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் பிரார்த்திக்கிறார்கள்.