

இந்தியா உலகுக்களித்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர் பரமஹம்ச யோகானந்தர். க்ரியா யோகத்தை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் இவர்தான். உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் 1893-ல் பிறந்த பரமஹம்ச யோகானந்தரின் இயற்பெயர் முகுந்த லால் கோஷ். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது இனம்புரியாத ஈர்ப்பு அவருக்கு இருந்தது. யோகானந்தரின் தந்தையும் தாயும் கூட ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இருவரும் லாஹிரி மஹாசயர் என்ற ஞானியின் சீடர்கள். லாஹிரி மஹாசயர்தான் யோகானந்தருடைய குருவான யுக்தேஷ்வர் கிரியின் குரு என்பது குறிப்பிடத் தக்கது.
யோகானந்தர் தன் பதின்பருவங்களில் பெரும் ஆன்மிக அலைச்சலுக்கு உள்ளாகிறார். தனக்கென்று ஒரு குருவைத் தேடிய அலைச்சல் அது. இதன் விளைவாக காசி, இமயமலை போன்ற இடங்களுக்கெல்லாம் தன் நண்பனுடன் சென்றுவருகிறார். பல சாமியார்களையும் (போலிச் சாமியார்களையும்) சந்திக்கிறார். எனினும் இவர்களில் யாருமே தன் குரு இல்லை என்பதை உணர்கிறார். தனது குரு எங்கோ தனக்காகக் காத்திருக்கிறார் என்று அவர் உள்ளுணர்வு உறுதியாக அவருக்குக் கூறியது.
கந்தபாபா மற்றும் புலிபாபா
குருவைத் தேடிய பயணங்களிடையே யோகானந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் விசித்திரமானவை. புராணக் கதைகளுக்கும் தேவதைக் கதைகளுக்கும் ஈடான விசித்திர உணர்வையும் அமானுஷ்ய உணர்வையும் ஏற்படுத்துபவை. அவர் சந்தித்த கந்தபாபா (நறுமண பாபா) ஒருவர் எந்த மணத்தை விரும்புகிறாரோ அந்த மணத்தை உருவாக்கும் திறன் பெற்றிருந்தார். வெறுங்கையால் புலியை அடக்கியதாகக் கூறப்படும் புலி பாபாவையும் யோகானந்தர் சந்திக்கிறார்.
இதுபோன்ற சந்திப்புகளைப் பற்றிக் கூறும்போது “நறுமணச் சித்தர் போன்றவர்களின் அற்புதச் செயல்கள் பிரமிப்பூட்டுபவை என்றாலும் ஆன்ம சாதனையில் உபயோகம் அற்றவை. வெறும் பொழுதுபோக்கைத் தவிர வேறு எந்த குறிக்கோளும் அற்ற அவை, இறைவனைத் தீவிரமாகத் தேடுவதிலிருந்து திசைதிருப்பிவிடக் கூடியவையாகும்” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார். இயேசு கிறிஸ்துவும் தன் அற்புதங்களை வெளிப்படையாக நிகழ்த்தத் தயங்கினார் என்று கூறப்படுகிறது.
யுக்தேஷ்வர் கிரியுடன் சந்திப்பு
இப்படிப் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பிறகு 1910-ல் காசியின் வீதிகளுள் ஒன்றில் தன் குரு யுக்தேஷ்வர் கிரியைக் கண்டடைகிறார் பரமஹம்ச யோகானந்தர். அவரை தூரத்தில் கண்டதுமே இனம்புரியாத உணர்வொன்று யோகானந்தரைக் கவ்வுகிறது. திரும்பிப் போகலாம் என்று கால்களைத் திருப்ப முயன்றால் முடியவில்லை. சில அடிகள் முன்வைத்துச் சென்று தான் கண்டடைந்த குருவின் காலடிகளில் “குருதேவா” என்று வீழ்கிறார். “எனக்கே உரியவனே, நீ என்னிடம் வந்துவிட்டாய்… உனக்காக எத்தனை ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்” என்று குருநாதர் யுக்தேஷ்வர் கிரியின் உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தைகள் யோகானந்தரின் உள்ளத்தை வந்தடைகின்றன.
பிரிபடாமல் இருந்த உயிர் ஒன்று, தோற்றத்தில் இரண்டாக மாறி, வெகுகாலம் கழித்து ஒன்று சேர்ந்ததுபோன்ற உணர்வு அது. யோகானந்தரின் வாழ்க்கைப் பாதையை முற்றிலும் அந்தச் சந்திப்பு திருப்பிவிட்டது. அதன் பிறகு குருவின் அறிவுரையின் பேரில் படிப்பைத் தொடர்கிறார். 1915-ல் பட்டப் படிப்பை முடித்ததும் யுக்தேஷ்வர் கிரியின் ஆசிரமத்தில் சேர்கிறார் யோகானந்தர். அங்கே அவருக்கு தீட்சை வழங்கும் யுக்தேஷ்வர் கிரி, யோகானந்த கிரி என்ற பெயரை அவருக்குச் சூட்டுகிறார். அதன் பிறகு ஆசிரமம், பள்ளிக்கூடம் போன்றவற்றைத் தொடங்கி நடத்தும் யோகானந்தர் 1917-ல் ‘யோகாதா சத்சங் சொஸைட்டி’யைத் தொடங்குகிறார்.
க்ரியா யோகாவை அமெரிக்காவில் சென்று போதிக்கும்படி யுக்தேஷ்வர் கிரி கேட்டுக்கொள்ளவே 1920-ல் அமெரிக்கா செல்கிறார் யோகானந்தர். 1920-லிருந்து 1952-ல் அவர் மரணமடையும்வரை அமெரிக்காவிலேயே இருந்தார். இடையில் 1935-36-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் வருகைதந்து காந்தி முதலானவர்களை சந்தித்தார் யோகானந்தர். காந்திக்கு க்ரியா யோகத்தைக் கற்றுத்தந்தவர் பரமஹம்ச யோகானந்தர்தான்.
அமெரிக்காவில் யோகக் கல்வி
அமெரிக்காவில் யோகானந்தருக்கு ஏராளமான பிரபலங்கள் அவரது சிஷ்யர்களாக ஆனார்கள். சாமர்செட் மாமின் ‘ஆன் ரேஸர்ஸ் எட்ஜ்’ என்ற புகழ்பெற்ற நாவலில் யோகானந்தரிடம் பெற்ற தாக்கங்களும் காணப்படுகிறது.
இந்த பூமியில் தன் பயண காலம் முடிவுறும் காலம் வந்துவிட்டதை உணர்ந்ததாலோ என்னவோ தன் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் தன் எழுத்துக்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் யோகானந்தர். 1952-ல் தனது 59-வது வயதில் ஆன்மிகச் சொற்பொழிவொன்றை ஆற்றிக்கொண்டிருந்தபோது யோகானந்தர் மரணமடைந்தார். அவர் இறந்த பிறகு அவரது உடல் பாதுகாத்துவைக்கப்பட்டது. அவர் இறந்து 20 நாட்கள் ஆன பிறகும் அவரது உடலில் சிதைவோ அழுகலோ ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாதது குறித்து ‘டைம்’ இதழ் மிகவும் வியந்து எழுதியது.
கடவுளை நாம் நம்மிலிருந்து விலகிய ஒரு பொருளாக, தூரத்தில் உள்ள இமயமலையாகக் கருதி, அந்தப் பரம்பொருளை அடைய முயன்று தோல்வியடைகிறோம். இதனால் பெரும் பதற்றமும் சலனமும் நம் மனதில் ஏற்படுகின்றன. நமக்குள் இருக்கும் பரம்பொருளையும், பரம்பொருளின் பகுதியாக நாம் இருப்பதையும் காண முடியாமல் இந்த மனநிலை நம்மைத் தடுக்கிறது. ‘சலனம் முடியும் இடத்தில்தான் கடவுள் தொடங்குவார்’ என்பது பரமஹம்ச யோகானந்தரின் வாக்கு.
நம் மனதின் சலனத்தை முடிவுறச் செய்து அங்கே கடவுளைத் தொடங்கச் செய்வதற்குரிய சாதனமாக க்ரியா யோகத்தை நமக்கு விட்டுச்சென்றிருக்கும் பரமஹம்ச யோகானந்தர் என்றும் நம் போற்றுதலுக்கு உரியவர்! இவர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை’ நூல் இந்தியாவில் எழுதப்பட்ட சிறந்த ஆன்மிக நூல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
யோகானந்தரின் வாக்கு - சலனம் முடியும் இடத்தில் கடவுள் தொடங்குகிறார்
# தொந்தரவற்று, அமைதியாக இருங்கள். உங்கள் மீதான கட்டுப்பாட்டுடன் இருங்கள். அப்போது இணக்கமாக இருப்பது எப்படியென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
# தோல்விகளின் பருவம் தான் வெற்றிக்கான விதைகளை விதைப்பதற்கான சிறந்த பருவமாகும்.
# உண்மைதான் மெய்மையை அடையும் சரியான தொடர்பாளர்.
# ஒருவர் தனது இதயத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதோடு மட்டுமின்றி அடுத்தவர் மகிழ்ச்சியையும் உள்ளடக்கும் போதுதான் ஆன்மா திருப்தியடையும்.
# உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கடவுளின் உருவத்திலேயே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களின் உண்மையான சுயம். உங்களுக்குள் இருக்கும் கடவுளின் உருவத்தை உணர்வதுதான் அறுதியான வெற்றி--முடிவற்ற ஆனந்தம், எல்லா ஆசைகளினதும் ஈடேற்றம், உடல் சார்ந்த அனைத்துத் தளைகள், இந்த உலகம் உங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் போன்ற எல்லாவற்றின் மீதாகவும் நீங்கள் பெறும் வெற்றி!
# தங்கள் ஆன்மாவில் ஒத்திசைவு கொண்டிருப்பவர்களாலேயே இயற்கையில் இருக்கும் ஒத்திசைவைக் காண முடியும். இந்த அக ஒத்திசைவைக் கொண்டிருக்காதவர்களுக்கு இந்த உலகத்தில் ஒத்திசைவு இல்லை என்ற உணர்வே ஏற்படும். அலங்கோலமாக இருக்கும் மனது தன்னைச் சுற்றிலும் அலங்கோலத்தையே காணும்…
# உங்கள் கவனத்தை உங்கள் அகம் நோக்கிக் குவியுங்கள். புதுவிதமான சக்தியொன்றை, புதிய பலத்தை, புதிய அமைதியை நீங்கள் உணர்வீர்கள்- உடலிலும் மனதிலும் ஆன்மாவிலும்.
# உங்களுக்கான சொர்க்கத்தை உருவாக்குவதற்கான எல்லா முகாந்திரங்களும் உங்களிடமே குவிந்துகிடக்கின்றன.
# உங்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் மூடிக் கிடக்கும் எல்லா உள்கதவுகளையும் தியானம் விசாலமாகத் திறந்துவிட்டுக் கடவுள் சக்தியின் வெள்ளத்தை உங்களுக்குள் நுழையச் செய்கிறது.
# சராசரியான மனிதர்கள் எப்போதும் பதற்றமாக இருக்கிறார்கள். அவர்கள் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் ஒருசில சமயம் நிதானமாகவும் பெரும்பாலான நேரங்களில் பதற்றமாகவும் இருக்கிறார்கள். ஆழமாக அவர்கள் தியானம் செய்யும்போது பாதி நேரம் நிதானமாகவும் பாதி நேரம் பதற்றமாகவும் இருக்கிறார்கள். நீண்ட காலம், நம்பிக்கையுடன் பயிற்சி செய்துவந்தால் பெரும்பாலான நேரங்களில் அவர்களால் நிதானமாக இருக்க முடியும், எப்போதாவது அவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம். பொறுமையுடன் தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் எப்போதும் நிதானத்துடன் இருக்கும், பதற்றமற்ற மனநிலையை அவர்கள் அடையலாம். சலனம் முடியும் இடத்தில் கடவுள் தொடங்குவார்.