

ஆண்பால் கவிஞர்கள் கீர்த்தனைகளை இயற்றிப் புகழ்பெற்ற அளவுக்கு, பெண்பால் கவிஞர்கள் எண்ணிக்கையில் அவ்வளவு பேர் இல்லை. ஆனால் தனது பாடல்களில் விரவும் பக்தியைக் கொண்டே பிரபலமானவர் அம்புஜம் கிருஷ்ணா. இவர் பன்மொழிக் கவிதாயினி. நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதியிருக்கிறார். இவரது மூன்று மகன்களும் மகளும் இணைந்து, ஆண்டுதோறும் தங்களது அன்னையின் நினைவு நாளை அவரது பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் மூலம் நினைவு கூர்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று மியூசிக் அகாடமியில், ஷேத்ராம்புஜ மாலா என்ற பெயரில், அம்புஜம் கிருஷ்ணா, பிரபல ஷேத்திரங்கள் குறித்து எழுதிய பாடல்களின் தொகுப்பின் பின்னணியில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அனிதா குஹா பரதாஞ்சலி குழுவினரால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஷேத்திரப் பாடல்கள் பின்னணியில் பாடப்பட்டன.
அம்புஜம் கிருஷ்ணா
அப்பாடல்கள் குறிக்கும் ஷேத்திரங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர் சித்ரா மாதவன், ஒலி, ஒளிக் காட்சி மூலம் அரிய தகவல்களை ஆங்கிலத்தில் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள முக்குறிணி பிள்ளையார் குறித்த பாடலுடன் தொடங்கியது நடனம். ரங்கம், சிதம்பரம், மதுரா, வில்லிபுத்தூர் ஆகிய தலங்களைக் கண் முன்னே கொண்டுவந்ததில், அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்கள் பெரும்பங்கு வகித்தன.
மதுரை அழகர் கோயில் பெருமாள் குறித்த அழகா அழகா என்று தொடங்கும் பாடல் மனதை அள்ளியது. ஆனந்தமான இந்த நிகழ்வையடுத்து அரங்கத்துக்கு வெளியே வந்தபோது பூஞ்சாரலாகப் பெய்த மழை சூழ்நிலைக்கு மேலும் அழகூட்டியது.