பைபிள் கதைகள் 23: பாம்பாக மாறிய கைத்தடி!

பைபிள் கதைகள் 23: பாம்பாக மாறிய கைத்தடி!
Updated on
2 min read

பசும்புற்களைத் தேடி ஓரேப் மலைக்குத் தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார் மோசே. அங்கே அவருக்கு எதிர்பாராத இறையனுபவம் ஏற்பட்டது. இலைகள், பூக்கள் என எதுவும் கருகிவிடாமல் எரிந்துகொண்டிருந்த புதர், மோசேயை அச்சமும் ஆச்சரியமும் கொள்ள வைத்தது. அந்தப் புதரை எரிய வைத்த கடவுள், அது புனிதமான இடம் என்பதை மோசேவுக்குப் புரியவைத்தார். அங்கே தனது தூதன் வழியே மோசேயிடம் அவர் பேசினார்.

“எகிப்திலிருந்து என் மக்களை நான் மீட்டு வரப்போகிறேன். அதற்காக அங்கே செல்லும்படி நான் உன்னை அனுப்புகிறேன்” என்றார் பரலோகத் தந்தையாகிய கடவுள். ஆனால் மோசே, “நான் மிகச் சாதாரணமானவன். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்? அப்படியே நான் சென்றாலும் ‘உன்னை யார் அனுப்பியது?’ என்று இஸ்ரவேலர்கள் என்னைக் கேட்பார்களே… அதற்கு நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார். அதற்கு பரலோகத் தந்தையானவர், “ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான யகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்” என்று பதிலளித்தார். “அவர்கள் நம்பாவிட்டால் நான் என்ன செய்வது?” என்று மோசே திரும்பக் கேட்டார்.

பாம்பாக மாறிய கைத்தடி

அதற்கு கடவுள் “உன் கையில் என்ன இருக்கிறது?” என்று கடவுள் திரும்பக் கேட்டார். “ ஒரு கைத்தடி இருக்கிறது” என்று மோசே பதிலளித்தார். “அதைக் கீழே போடு “ என்றார். கடவுள் சொன்னபடியே மோசே அதைக் கீழே போட்டார். உடனே அந்தக் கைத்தடி ஒரு பாம்பாக மாறியது. மோசே அதைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓடி முயன்றார். கர்த்தர் மோசேயை நோக்கி, “பயப்படதே… கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார். மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தார். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாக மாறியது. அப்போது கடவுள், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ என்னைக் கண்டதை நம்புவார்கள்”என்றார். மோசேயின் முகத்தில் நம்பிக்கை படருவதைக் கடவுள் கண்டார்.

பின் கடவுள், “ உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை இப்போது அங்கிக்குள் நுழை” என்றார். மோசே பணிவுடன் தன் அங்கிக்குள் கையை நுழைத்தார். மோசே கையை வெளியே எடுத்தபோது, உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் கை நிரம்பியிருந்தது. இதைக் கண்ட மோசே தனது கை நோய்வாய்ப்பட்டிருப்பதை எண்ணி பயந்தார்.

அப்போது கடவுள், “உனது கையை மீண்டும் அங்கிக்குள் நுழைத்து வெளியே எடு” என்றார். மோசே அவ்வாறே செய்ய, அவரது கை முன்பிருந்ததைப்போலவே ஆரோக்கியமான கையாக மாறியது.

நாவை அளித்த கடவுள்

அப்போது கடவுள், “ நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள். இதன் பிறகும் மக்கள் உன்னை நம்ப மறுத்தால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.

ஆனால் மோசே கடவுளை நோக்கி, “தேவனே, நான் உமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத எளியவன் என்பதும் உமக்குத் தெரியும்”என்று கூறினார். அப்போது கடவுள் அவனை நோக்கி, “மனிதர்களாகிய உங்களுக்கு வாயையும் மொழியையும் படைத்தது யார்? எனவே நம்பிக்கையிழக்காமல் நீ புறப்பட்டுப் போ.. நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்ல வேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்”என்றார். மேலும் “இப்போது நீ எகிப்துக்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான தருணம் இதுவே. உன்னைக் கொல்ல விரும்பிய அரசனும், எகிப்தியர்களும் இறந்து போய்விட்டனர்”என்று மோசேயைத் திடப்படுத்தினார்.

எகிப்துக்குப் புறப்பட்ட மோசே

மிகுந்த நம்பிக்கை மிக்கவராக மோசே மாறினார். எரியும் புதர் முன் முழந்தாள் இட்டிருந்த மோசே அவ்விடத்தைப் பணிந்து வணங்கிவிட்டு, வயிறு நிறைய மேய்ந்திருந்த தனது மந்தையுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

இரவுணவின்போது, தனது மாமனாராகிய எத்திரோவிடம் மோசே பேசினார். “எகிப்தில் என் உறவினர்களாகிய இஸ்ரவேலர்க்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்துவர விரும்புகிறேன். தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டார். கேட்டுக்கொண்டபடியே, “சமாதானத்தோடு போய்வாருங்கள் மோசே”என்று எத்திரோ அனுமதியளித்தார். மிகவும் மகிழ்ந்த மோசே, பல நாட்கள் பயணதுக்குத் தேவையான உணவுப்பொருட்களை கட்டிக்கொண்டு, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். கடவுளின் வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே மறக்காமல் எடுத்துக்கொண்டார். இந்தத் தலைவனின் வருகைக்காக அந்த தேசம் காத்திருந்தது.

( மோசேயின் கதை தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in