

சிம்ம வாகனத்தில் போருக்குப் புறப்படும் அன்னை, அரக்கனை சம்ஹாரம் செய்யும் தேவி, ஆயுதபாணியாக ஊழித் தோற்றம் காட்டும் காளி இப்படிப் பல தோற்றங்களில் நமக்கு மெய்நிகர் காட்சியைத் தருகின்றன `ஷக்தி’ தலைப்பிலான ஓவியங்கள்.
அஸ்வின் சுப்பிரமண்யம், ராதிகா முகிஜா ஆகியோரின் முயற்சியில் ஷக்தி என்னும் தலைப்பில் ஓவியர் சஞ்சய் மனுபாய் சிட்டாராவின் ஓவியங்களின் விற்பனை மற்றும் கண்காட்சி, சென்னை ஆழ்வார்பேட்டையிலிருக்கும் வின்யாசா ஆர்ட் காலரியில் வரும் 27 வரை நடக்கின்றது.
பூர்வகுடி பாணி ஓவியங்கள்
மாதா நி பசேதி என்னும் பூர்வகுடி பாணி ஓவியங்களை குஜராத்தின் வகாரி சமூகத்தினர் வரைகின்றனர். தாய்வழி சமூகத்தின் நீட்சியாக, பெண் தெய்வ வழிபாட்டின் வடிவமாக, மண்ணின் தெய்வமான காளியை தங்களின் கலைகளின் வழியாக போற்றுகின்றனர்.
காப்பவள் அழிப்பவள் ரட்சிப்பவள் என்னும் பல நிலைகளில் தேவியை தங்களின் ஓவியங்களில் காட்சிப்படுத்துவது இந்தப் பாணியின் சிறப்பு. இப்படி வரையப்படும் ஓவியங்கள் பாரம்பரியமான கலம்காரி பாணி ஓவியங்கள் எனப்படுகின்றன. கோயில் ரதங்கள், கோபுரங்களில் காணப்படும் மிக நுட்பமான வேலைப்பாடுகள் இந்த வகை ஓவியங்களிலும் இருக்கும்.
இயற்கை வண்ணங்கள்
கலம்காரி ஓவிய பாணியின் சிறப்பே அதன் இயற்கை வண்ணங்கள்தான். மிகக் குறைந்த வண்ணங்களை மிக அதிக நுட்பங்களையும் உள்ளடக்கிய ஓவிய பாணி கலம்காரி. பருத்தி துணியை பாலில் நனைத்து, பின் காயவைத்து அதில்தான் ஓவியம் வரைவர். வெள்ளத்தை நொதிக்கவைத்து கிடைக்கும் கரைசலை, மூங்கில் குச்சியில் தொட்டு ஓவியத்துக்கான அவுட்லைனை வரைகிறார்கள். அதன்பின் இயற்கையான காய், கனிகள் மற்றும் சில வகை தாவரங்களின் சாயத்தைக் கொண்டே ஓவியத்தில் பலவிதமான வேலைப்பாடுகளைச் செய்கின்றனர். சிவப்பு நிறத்துக்கு குங்கிலியத்துக்குப் பதிலாக கடுக்காயையும் பயன்படுத்துகின்றனர்.
கோயில்களில் வரையப்படும் ஓவியப் பாணி
கலம்காரி இரண்டு பாணிகளில் வரையப்படுகின்றன. காளஹஸ்தி பாணி, இன்னொன்று மசூலிப்பட்டிணம் பாணி. முழுவதும் கைவேலைப்பாடுகளால் தயாராகும் காளஹஸ்த்தி கலம்காரியில், பேனாவைப் பயன்படுத்திக் கையால் வரைந்து பின் வண்ணம் அடிக்கப்படுகிறது. கோவில்களில் பயன்படும் அழகிய திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம்பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவை கலம்காரி பாணி உருவாக்கங்கள்தான்.
ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் கடவுளர் உருவங்களுடனும் கலம்காரி ஓவியங்களில் பொதுவாக இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த ஷக்தி கண்காட்சியில் பூர்வகுடி மக்கள் தங்களின் பெண் தெய்வத்தைக் கொண் டாடும் வகையிலேயே ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. பிரம்மாண்டமும் கலையின் நுட்பமும் ஒரே புள்ளியில் இணைக்கும் வைபவமாக இந்த ஓவியக் கண்காட்சி சிறக்கின்றது.
படங்கள்: யுகன்