

தஞ்சை மாவட்டத்தில் பம்பப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த தென்னுாரில் பாரம்பரியச் சிறப்புடைய தைக்கால் தர்கா அமைந்திருக்கிறது. பல இன, சமய நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் இந்த தர்கா 400 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது.
அமைதியையும், சமூக ஐக்கியத்தையும் புலப்படுத்தும் வெள்ளைக் கொடி, தர்காவின் முகப்பில் பறந்து கொண்டிருக்கிறது. தர்காவின் நாயகர் சையது படேசாஹிப் புல்ஹர்னி அன்றும் இன்றும் ஆற்றிவரும் மனிதநேய நற்பணிகளுக்கு அடையாளமே இது என்று பம்பப்படையூர் அன்பர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
அரேபியாவிலிருந்து தென்னூருக்கு வந்தார்
சவூதி அரேபியாவில் பிறந்து வளர்ந்து நானுாறு ஆண்டுகளுக்கு முன்பே கும்பகோணம் தாலுக்கா தென்னுாருக்கு வந்து ஞானத் திருப்பணியாற்றினார் இறைநேசர் சையது படேசாஹிப் புல்ஹர்னி. ஆன்மிகச் செல்வரான அவருடைய நல்லாசியை நாடி சுற்றுவட்டார மக்கள் அணியணியாக வரத் தொடங்கினர்.
நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டவர்களும், பல பிரச்சினைகளால் மனஅமைதியை இழந்தவர்களும் பரிகாரம் தேடி அவரிடம் வந்தார்கள்; பயனடைந்தார்கள். அந்த மகானின் நல்லடியாராக மாறிய உள்ளூர் செல்வந்தர் ஆதி சோமலிங்கம். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு உடனிருந்து வந்தார்.
வயிற்று வலி, மூட்டு வலி, அம்மை, தொழுநோய், புற்றுநோய், பக்கவாதம், முடக்குவாதம், மனநோய் இன்னும் பலவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் சையது படே சாஹிபைத் தேடி வந்தார்கள். மூலிகை மருந்துகளை வினியோகித்து அவர்களைக் குணமடையச் செய்துவந்தார். தமது கையால் தொட்டு பலருடைய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் வழக்கத்தையும் அவர் பின்பற்றிவந்ததாகக் கூறப்படுகிறது.
தென்னுாரையும் சுற்று வட்டாரத்தையும் சேர்ந்த பல சீடர்களும் பக்தர்களும் மகானின் அருகில் பலமணி நேரம் அமர்ந்திருப்பார்கள். நோய் நொடிகளுக்கு உடனுக்குடன் பரிகாரம் கண்டு, அவருடைய நல்லாசியைப் பெற்றுச் செல்வார்கள்.
அரசர்கள் போற்றிய இறைநேசர்
தஞ்சை அரசர்கள், தஞ்சையை ஆண்ட சோழ அரச பரம்பரையினர், அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டியர்களும் தென்னுார் இறைநேசருடன் தொடர்பு கொண்டிருந்த தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மன்னர் சரபோஜியின் சகோதரி வயிற்று வலியினாலும், குடல் பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். சையது படேசாஹிபின் உதவியை நாடினார் சரபோஜி. உரிய நிவாரணம் கிடைத்தது.
தைக்கால் தர்கா
சகோதரியைக் குணப்படுத்திய இறைநேசருக்கு மானியமாக 24 ஏக்கர் நிலத்தை அளித்தார் சரபோஜி. அந்த நிலப்பகுதி தென்னுார் மக்களின் தொழுகை வசதிக்குப் பயன்படும் என்று அரசர் கருதினார். சையது படேசாஹிப் புல்ஹர்னி காலமானதும் அவர் நினைவாக ஆதி சோமலிங்கம், தனது சொந்த நிலத்திலேயே தைக்கால் தர்காவைக் கட்டினார். அங்கேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
குடும்பச் சொத்துகளையும் உடைமைகளையும் ஒன்று திரட்டி தென்னுார்சோமலிங்கம் தைக்கால் எனும் குடும்ப அறக்கட்டளையை ஆதி சோமலிங்கம் நிறுவினார். 500 ஏக்கர் நிலம் அதில் அடங்கும். அவரே அதற்குப் பொறுப்பேற்றிருந்தார். பல நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தார்.
ஆண்டுதோறும் இறைநேசர் சையது படேசாஹிப் புல்ஹர்னியைச் சிறப்பிக்கும் கந்துாரி விழாவையும், சந்தனக் கூடு ஊர்வலத்தையும் தர்கா அறங்காவல் குழு நடத்திவருகிறது. பல சமய மக்களும் அவற்றில் பங்கேற்பது சிறப்புக்குரியது. ஏழை எளியோருக்கும், முஸ்லிம் பக்கீர்களுக்கும் தர்கா நிர்வாகம் தினமும் இலவச உணவு வினியோகித்துவருகிறது. வசதியில்லாத மக்களுக்கு இலவச உடைகள் வழங்கப்படுகின்றன. இலவசக் கல்வி வசதியும், மருத்துவ சிகிச்சையும் உண்டு.
தென்னூர் இறைநேசர் சையது படேசாஹிப் புல்ஹர்னியை தரிசிக்க அனுதினமும் மக்கள் இங்கே வந்த வண்ணம் உள்ளனர்.