

ஒரு பிராடஸ்டண்ட் பாதிரியார், வீட்டிலுள்ள குழந்தைகள் போடும் சத்தத்தால் தினசரி பிரார்த்தனைகள் கெடுகிறதென்று நினைத்தார். ஒரு நாள் இரவு, அவரது பொறுமை எல்லைமீறிப் போக, “எல்லாரும் அமைதியாக இருங்கள்” என்று ஆவேசத்தோடு கூறினார்.
குழந்தைகளும் அவர் மனைவியும் அவரது ஆணையால் நடுங்கிப் போனார்கள். அடுத்த நாள் பாதிரியார் வீட்டுக்குள் நுழையும்போதே வீடு அமைதியாக இருந்தது. அவரும் ஆனந்தமாகத் தனது பிரார்த்தனையைத் தொடங்கினார். ஆனால் தனது பிரார்த்தனைக்குக் கடவுள் செவிகொடுக்கவில்லை என்று தோன்றியது. இப்படியே நாட்கள் சென்றன. கடைசியாக ஒரு நாள் கடவுளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டேவிட்டார்.
“என்ன நடக்கிறது? போதுமான அமைதி இங்கே இருக்கிறது. ஆனாலும் என்னால் பிரார்த்தனையின்போது உங்களை உணர முடியவில்லையே?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
“எனக்கு உனது வார்த்தைகள் கேட்கின்றன. ஆனால் அங்கே சிரிப் பொலியே இல்லை. என்னால் உனது பக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பின்னணியில் குதூகலமே இல்லை” என்று பதில் கிடைத்தது.
உடனடியாக ஜெப அறைக்கு வெளியே வந்து நின்ற பாதிரியார், “குழந்தைகள் வழக்கம்போல சத்தமிட்டு விளையாடட்டும்” என்று உத்தரவிட்டார். இப்போது கடவுள், அந்தப் பாதிரியாரின் பிரார்த்தனைகளைக் கேட்கத் தொடங்கினார்.
மெக்காவில் ஒரு யாசகர்
மெக்காவுக்குச் செல்லும் சாலையில் ஒரு பார்வையற்ற யாசகர், யாத்ரீகர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த முஸல்மான் ஒருவர், குரானின் வழிகாட்டுதல்களின் படி தாராளமாக தர்மம் செய்கிறார்களா என்று அந்த யாசகரிடம் கேட்டார். அந்த யாசகர் தனது தட்டைக் காண்பித்தார். ஒரு நாணயம்கூட தட்டில் விழுந்திருக்கவில்லை. அந்தக் கருணையுள்ள முஸல்மான், அந்தப் பார்வையற்ற யாசகரின் அனுமதியுடன் அவர் கழுத்தில் ஒரு அட்டையை எழுதித் தொங்கவிட்டு தன் வழியில் போனார்.
நேரம் கடந்தது. யாசகர் தட்டில் சில்லறைகள் கொட்டத் தொடங்கின. அட்டையை எழுதித் தொங்கவிட்டுச் சென்ற முஸல்மான் திரும்பி வந்தபோது, அந்தப் பார்வையற்ற யாசகரை மீண்டும் சந்தித்தார்.
“என் கழுத்தில் என்ன வாசகத்தை எழுதிவிட்டுப் போனீர்கள். இத்தனை பணம் குவிகிறதே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
முஸல்மான் எழுதிச் சென்ற வாசகம் இதுதான்: வசந்த காலத்தின் அழகான ஒரு நாள் இன்று. சூரியன் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறான். எனக்கோ பார்வை இல்லை.
யூத மரபு என்ன சொல்கிறது?
டோ பீர் டி மெஜரிச்சிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்பவர்களை ஒருவர் பின்தொடர வேண்டுமா? கடவுளின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்கான தேடலை நிகழ்த்தும் அறிஞர்களைப் பின்பற்ற வேண்டுமா?”
குழந்தையின் வழியைப் பின்பற்றி னால் போதுமென்று பதில் கிடைத்தது.
“குழந்தைக்கு என்ன தெரியும். அது எதார்த்தம் என்பதையே புரிந்துகொள்ளாத நிலையில் அல்லவா இருக்கிறது?” என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
“நீங்கள் சொல்வது தவறு. குழந்தையைப் பொறுத்தவரை மூன்று அருமையான பண்புகள் உள்ளன. எக்காரணமுமின்றி அவர்கள் எப்போதும் குதூகலமாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று தேவையென்றால், அவர்கள் அதை பிடிவாதமான உறுதியுடன் பெற்றுவிடத் தெரிந்தவர்கள்” என்றார் டோ பீர் டி மெஜரிச்.