Published : 13 Nov 2014 11:47 AM
Last Updated : 13 Nov 2014 11:47 AM

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம். வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணை கொண்டால் இதையும் எளிதாகச் சாதித்துவிடலாம்.

நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புகள் வரும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.

சுவாமியின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக்கொண்டு, "எனக்கு வேறு கதியில்லை. நீதான் நல்ல வழி காட்ட வேண்டும்" என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு சுவாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இள வயதிலேயே பெறுவதுதான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போகவிட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம்கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் சுவாமி காப்பாற்றுவார்.

படிப்பில் போட்டி

ஒன்றே ஒன்றில்தான் போட்டியிருக்க வேண்டும். ‘அந்தப் பையன் இவ்வளவு நிறைய மார்க் வாங்குகிறானே, நாமும் அப்படி வாங்க வேண்டும்’ என்ற ஆசையுடன் ஊக்கமாகப் படித்துப் போட்டி போட வேண்டும். இந்தப் போட்டியும் பொறாமையாகிப் போவதற்கு விடக் கூடாது. அறிவாளியாக, நல்லவனாக இருப்பதற்குப் போட்டி போடலாமே தவிர, பொறாமை கூடவே கூடாது. விளையாட்டிலும் அப்படியே.

உடல் தூய்மை

குழந்தைகளான உங்களுக்குச் சொறி சிரங்கு ஒன்றும் வராமலிருக்க வேண்டும். இவை வந்துவிட்டால் ரொம்பக் கஷ்டப்படுகிறீர்கள். படிக்க முடிவதில்லை. விளையாட முடிவதில்லை. உட்கார முடிவதில்லை. சாப்பிட முடிவதில்லை. சொறி, சிரங்கு எதனால் உண்டாகிறது? அழுக்கினால் உண்டாகிறது. ஆகவே உடம்பை அப்பழுக்கில்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் சொறியும் சிரங்கும் வராமல் இருக்கும். உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படியென்றால் நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சோப்போ, சீயக்காயோ போட்டு உடம்பைத் தேய்த்து நன்றாக நீராடினால் உடம்பின் அழுக்குகள் போகின்றன.

ஒரு நாள், ஒரு வேளை இப்படிக் குளித்துவிட்டால் போதாது. மறுபடியும் மறுபடியும் அழுக்கு சேர்ந்துகொண்டேதான் இருக்கும். எனவே, தினந்தினம் நீராட வேண்டும். பிரதி தினத்திலும்கூடக் காலை மாலை இரண்டு வேளைகளிலும் குளித்தால் மிகவும் நல்லது.

உங்களுடைய சின்ன வயசிலேயே பச்சைத் தண்ணீரில் குளிக்கப் பழகிவிட்டீர்களானால் அப்புறம் சளி, இருமல் உங்களைத் தீண்டாது. பச்சைத் தண்ணீரில் குளித்தால் நரம்புகளுக்கும் தெம்பு, மனசிலும் ஓய்ச்சல் போய் உற்சாகமாக இருக்கும். உடம்பிலே அழுக்குப் போவதோடுகூட மனசுகூடப் பளிச்சென்று இருக்கிற மாதிரி இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு பிடிக்கும்.

சுத்தத்தைத்தான் தூய்மை தூய்மை என்பது. நீங்கள் எல்லா விதத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். அழுக்கு என்பது உங்கள் கிட்டயே வரக் கூடாது. அதற்குத்தான் முதலில் உடம்புக்குக் குளிப்பதைச் சொன்னேன். உடம்புக்கு அப்புறம் உடுப்பு.

உடை தூய்மை

நீங்கள் போட்டுக்கொள்ளும் உடை அழுக்குமயமாக இருந்தால் எத்தனை குளித்தும் பிரயோஜனம் இல்லை. துணியில் அழுக்கு இருந்தாலும் சொறி சிரங்கு வரத்தான் செய்யும். சலவைக்குத் துணியைப் போட்டால் நன்றாக வெளுத்துத் தருவார்கள். அதைவிட நீங்களே உங்கள் உடைகளை நன்றாகத் துவைத்துக்கொள்ளுவது சிறந்தது.

துணியைத் துவைத்துப் பிழிவது உங்கள் தேகத்துக்கு ஓர் ஆரோக்கியப் பயிற்சியாக இருக்கும். நாமே நம் துணியை இவ்வளவு நன்றாகச் சுத்தப்படுத்தி வெள்ளை வெளேரென்று ஆக்கியிருக்கிறோம் என்றால் உங்களுக்கே அதில் ஒரு பெருமை, திருப்தி, சந்தோஷம் இருக்கும். உங்கள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். சலவைச் செலவும் இதனால் குறையும்.

உள்ளத் தூய்மை

உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக் கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது. ஆனாலும் காரியம் என்று வந்துவிட்டால் நல்லதைச் செய்கிறபோதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்துவிடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது.

நாமே எல்லாம் செய்துகொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணருவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக்கொள்வதுதான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

தெய்வத்தின் குரல் (ஏழாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x