

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளத் தெரு வழியாக ஆண்டவர் நகர், முதல் தெருவை அடைந்து அங்கிருப்பவர்களிடம் விசாரித்தால் போதும், கருமாரி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வழி தெரிந்துவிடும்.
கடந்த 40 வருடங்களுக்கு மேல் இங்குள்ள மக்களுக்கு அருள்பாலித்துவருகிறார் கருமாரி அம்மன். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி, 108 நாட்களுக்கு அம்மனுக்கு அனுதினமும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. திருக்கடையூர் அபிராமி, நெல்லை காந்திமதி அம்மன் போன்ற அலங்காரங்களும் இதில் அடங்கும்.
கோவிலின் சுற்றளவு 600 சதுர அடி. சமீபத்தில் நடந்த ஆடிப் பூரத் திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் மேல் அணிவிக்கப் பட்ட ஒரு லட்சத்து எட்டு வளையல் அலங்காரத்தை வழிபட்டனர். அன்னதானமும் மிகவும் சிறந்த முறையில் நடந்தேறியது.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக, அமாவாசைதோறும் நடைபெறும் ப்ரத்யங்கரா தேவியின் வழிபாடு உள்ளது. 108 திரவியங்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்படுகிறது. இதைத் தவிர ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் 108 சங்கினால் ப்ரத்யங்கரா தேவிக்கு விசேஷ அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றுவருகின்றன. குலதெய்வ தோஷம் நீங்கப் பலர் இந்தப் பூஜைகளில் கலந்துகொள்கிறார்கள்.
ப்ரத்யங்கரா தேவி நிறைமாதக் கர்ப்பிணியாகக் காட்சியளிக்கிறார். ஆடி மாதத்தில் சுமார் 2000 பெண்கள், தேவிக்கு நலங்கு வைத்து வழிபாடு செய்துள்ளனர். பக்தர்களுக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களைப் பிரசாதமாக வழங்கிவருகிறார்கள். மகப்பேறு பெறுவதற்கான பிரார்த்தனை ஸ்தலமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது.
ராகு கால பூஜையின் போது 11 வெற்றிலைகளை மாலையாக்கி அம்மனுக்கு அணிவிக்கப் படுகிறது. ஏதேனும் ஒரு வெற்றிலையில் பக்தர்கள் அவர்களின் கோரிக்கைகளை எழுதிச் சமர்ப்பிக்கின்றனர். ஐந்து அல்லது ஆறு வாரங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் பெறுவதாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.