Published : 20 Nov 2014 11:56 am

Updated : 20 Nov 2014 11:56 am

 

Published : 20 Nov 2014 11:56 AM
Last Updated : 20 Nov 2014 11:56 AM

கோவிந்த, ஹர நாமச் சிறப்பு

“கோவிந்த” என்கிற நாமம் ரொம்பவும் விசேஷ மானது. ஈச்வர நாமாக்களுக்குள் ‘ஹர' என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுக்குள் 'கோவிந்த' என்பதற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

சத்சங்கத்துக்காக, சத்விஷயத்துக்காகப் பல பேர் கூடினாலும், மநுஷ்ய ஸ்வபாவத்தில், கொஞ்ச நேரம் போனதும் கூட்டத்தில் பலர் பல விஷயங்களைச் சளசளவென்று பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி பகவானிடம் மனசைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர் “நம பார்வதீ பதயே” என்கிறார். உடனே, பேசிக்கொண்டிருந்த எல்லாரும் “ஹர ஹர மஹாதேவ” என்கிறார்கள்.

அதற்கப்புறம் ஒரு பஜனையோ உபந்யாசமோ ஆரம்பிக்கிறது. இப்படிப் பல பேருடைய மனசை ஈச்வரனிடம் லகான் போட்ட மாதிரி இழுக்கிற சக்தி ஹரநாமத்துக்கு இருக்கிறது. அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே என்ற ஞானசம்பந்தக் குழந்தை வாழ்த்திய விசேஷத்திலிலேயே இப்படி ஹரன் நாமத்துக்கு சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.

“நம: பார்வதீ பதயே” மாதிரியே இன்னொன்றும் ஒரு கூட்டத்தின் மனசை பகவத் பரமாகத் திருப்பி விடுவதற்காக கோஷிக்கப்படுகிறது, அதுதான் “சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்” என்பது. இப்படி ஒருத்தர் சொன்னவுடன் கூட்டம் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்கிறது.

“பஜகோவிந்தம்” என்ற நம்முடைய ஆசார்யாள் குழந்தையாயிருந்தபோதே சொன்னதன் மஹிமை. “அண்ணாமலைக்கு அரோஹரா” என்று லட்ஷோபலட்ஷம் பக்தர்கள் சேர்ந்தபொழுது கோஷிக்கிறோம்.

காவடி எடுக்கிறபோது சுப்ரமண்ய சுவாமிக்கும் `அரோஹரா' போடுகிறோம். அர நாமமே சூழ்கிறது. இப்படியே நித்ய உத்சவமாக இருக்கிற திருப்பதியில் லட்ஷோபலட்ஷம் ஜனங்களும் 'கோவிந்தா' போட்டுக்கொண்டே தான் மலையேறுகிறார்கள்.

இரண்டு தெய்வக் குழந்தைகளின் வாக்கு விசேஷம் ஹர நாமத்தைவிடக்கூட கோவிந்த நாமாவுக்கு ஜாஸ்தி விசேஷம் என்று தோன்றுகிறது. ஒருத்தர் ‘பார்வதீ பதி'யைச் சொன்ன பிறகுதான் மற்றவர்கள் ‘ஹர ஹர' என்கிறார்கள், ஆனாலும் கோவிந்த நாம விஷயமாகவோ, முதலில் சொல்கிற ஒருத்தரும் ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்று இந்தப் பெயரையேதான் கோஷிக்கிறார், மற்றவர்களும் அதே நாமாவைத் திருப்புகிறார்கள்.

இன்னொன்று கூட. தீவிர வைஷ்ணவர்கள் ஹர நாமாவை கோஷிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் கோவிந்த நாமாவை சகலருமே சொல்வார்கள், அதனால்தான் போலிருக்கிறது இதற்கு மட்டும் ‘சர்வத்ர' என்று, அதாவது எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' அதனால், என்னை யாராவது இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது என்று கேட்டால் ‘கோவிந்தா' தான் என்று சொல்வேன்.

சர்வலோக சக்ரவர்த்தியாக இருக்கப்பட்ட பகவான் பரம கருணையோடு பரம எளிமையோடு வந்து மாடு மேய்த்து, கோபர்களையும், கோபிகளையும் அத்யந்த பிரேமையோடு அனுகிரகித்த அவசரத்திலேயே அவருக்கு கோவிந்த நாமா ஏற்பட்டது. இந்த நாமா ஏற்பட்ட விருத்தாந்தத்தை பாகவதம் சொல்கிறது, “உத்ருதநக” சுலோகத்தில் refer செய்த விருத்தாந்தம்.

'தான் மழை பெய்வதால்தானே லோகம் உயிர் வாழ்கிறது?' என்ற கர்வம் இந்திரனுக்கு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணன் கோகுலத்தில் குழந்தையாக இருந்த சமயம். அவர் இந்திரனுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். அதனால் கோபர்களிடம், அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்திர பூஜையை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக கோவர்த்தன கிரிக்குப் பூஜை பண்ணச் சொன்னார். அதே போலச் செய்தவுடன் இந்திரனுக்கு ஒரே ஆத்திரமாக வந்தது.

அந்த ஆத்திரத்திலே கோகுலத்தையே அடித்துக்கொண்டு போய்விடும்போல் பெரிய மழையைக் கொட்ட ஆரம்பித்துவிட்டான். அந்தச் சமயத்தில்தான் பகவான் கிரிதர கோபாலனாக கோவர்த்தன மலையைத் தூக்கி, மழையைத்தடுத்து, தீன ஜனங்களையும் பசு முதலான பிராணிகளையும் ரக்ஷித்தார். பிறகு தேவேந்திரனே மழை பெய்ய முடியாமல் களைத்துப் போய் அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். சகல உயிர்களையும் - ‘கோ' என்பது பசுவை மட்டும் குறிக்காமல் எல்லா ஜீவராசிகளையும் குறிப்பதாகும். பசு என்பதும் எல்லாப் பிராணிகளையும் குறிப்பது போல.

இப்படி எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பவர் அவர்தான் என்று அர்த்தம் தொனிக்கும்படியாக “கோவிந்த” என்று அவருக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான். அதனால் இந்தக் கட்டத்திற்கு கோவிந்த பட்டாபிஷேகம் என்றே பெயர். ‘கோ'க்களுக்கு ‘இந்திரன்' கோவிந்தன், ‘விந்த' என்றால் ஒன்றைத் தேடி, நாடிப்போய் அடைவது. பசுக்கள் இப்படி கிருஷ்ணனிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் கோவிந்தன், ‘கோ' என்பது பசுவை மட்டுமில்லாமல் பூமி, ஆகாசம், வாக்கு, இந்திரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது. இவையெல்லாம் தேடிப் போய் அடையும் லட்சியமான பரமாத்மா அவர் என்பதையும் கோவிந்த நாமம் தெரிவிக்கிறது.

தெய்வத்தின் குரல்
(நான்காம் பாகம்)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஹர நாமம்கோவிந்த நாமம்மஹா பெரியவாகாஞ்சி பெரியவாதெய்வத்தின் குரல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author