

சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஐபேடு, ஸ்மார்ட் போனில் தென்னிந்தியாவிலுள்ள நான்கு மாநில திருக்கோயில்களிலுள்ள கடவுள்களின் விவரங்களை எளிதாக அறிய, புதிய மென்பொருளை உருவாக்கும் பணியில் புதுவை பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஆன்மிகத்தை அறிய உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தென்னிந்தியாவிலுள்ள முக்கியக் கோயில்களுக்கு வருகின்றனர். ஆனால், திருக்கோயில்களில் உள்ள கடவுள்களின் பெயர், வரலாறு ஆகியவற்றை உடனடியாக அனைத்துக் கோயில்களிலும் அறிந்து கொள்வதில் சிறிது சிரமம் இருந்தது. தற்போது புதுவை பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் (ஐ.எப்.பி.) அதைத் தொகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. நிறுவன இயக்குநர் பியர் கிரார்டு இதற்கான மென்பொருளை வடிவமைத்துள்ளார்.
பயோ டிக் என்ற மென்பொருள் தெய்வங்களின் வரலாறு, பெயர் விவரங்களை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தாவரங்களின் பாகங்களைக் கொண்டு, அதன் பெயர் உட்பட முழு விவரங்களை அறிய இந்த மென்பொருள் முன்னதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தாவரங்களைப் போன்று, திருக்கோயில் தெய்வங்களின் விவரங்களை அறியும் வகையில் புதிய சாப்ட்வேர் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயில்களில் உள்ள கடவுள் பெயரையோ, இறைவனின் பாவனைகளையோ ஸ்மார்ட் போனில் தேடினால் உடனடியாக அனைத்து விவரங்களும் கிடைத்துவிடும்.
இது தொடர்பாக புதுவை பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் முருகேசன் கூறும்போது, “பயோடிக் சாப்ட்வேர் மூலம் இந்து கடவுள்களின் விவரங்களை அறிய முடியும். இந்த சாப்ட்வேரை ஸ்மார்ட் போன், ஐபேடு ஆகியவற்றில் பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ள முடியும். தற்போது இந்த சாப்ட்வேரில் 235 கடவுள்களின் விவரங்களைத் தொகுக்கும் பணி நடந்துவருகிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள இறைவன், இறைவி விவரங்களை சாப்ட்வேரில் சேர்த்து வருகிறோம்.
குறிப்பாகச் சிவனுக்குப் பல்வேறு பெயர்களுண்டு. அதில் சட்டநாதர், பஞ்சலிங்கம் என்றால் அவரைப் பற்றிய முழு விவரம், குறிப்புகள் இடம் பெற்றிருக்கும். அதேபோல் விஷ்ணு அவதாரத்தில் நரசிம்மர் என்றால் வரலாறு, இதர இடங்களில் உள்ள கோயில்கள் ஆகியவையும் இடம்பெறும். தாவரங்களின் பாகங்களை அடிப்படையாகக் கொண்ட சாப்ட்வேர் என்பதால் இறைவனின் உருவ அமைப்பை அடிப்படையாக வைத்து இதில் மாற்றி வடிவமைத்துள்ளோம். கடவுள் விவரங்களை மென்பொருளைச் சேர்க்கும் பணி நடக்கிறது” என்றார்.
அதேபோல் மென்பொருளில் அனைத்து இறைவன், இறைவி படங்களை ஒருங்கிணைத்து, அதில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புகைப்படக்காரர் ரமேஷ்குமார். இப்பணிகள் விரைவில் முழுமையடையும் என்று இக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.