Last Updated : 30 Jun, 2016 10:38 AM

 

Published : 30 Jun 2016 10:38 AM
Last Updated : 30 Jun 2016 10:38 AM

ஓஷோ சொன்ன கதை: இரண்டு தனிமைகள்

காட்டில் தொலைந்து போன ஒரு வேடனின் கதை இது. மூன்று நாட்கள் ஆகியும் அவனுக்குக் காட்டை விட்டு வெளியேறும் வழி தெரியவேயில்லை. உணவின்றி, விலங்குளைப் பற்றி சதா அச்சத்தோடு அந்த மூன்று நாட்களையும் அவன் கழித்தான். அவனால் உறங்கக்கூட இயலாமல், ஒரே மரத்தினடியில் அமர்ந்தபடி இருந்தான். பாம்புகள், சிங்கங்கள் மற்றும் கொடூர விலங்குகள் உலவும் வனம் அது.

நான்காவது நாள் காலையில், ஒரு மனிதன் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் ஓடோடிச் சென்று அந்த மனிதனைக் கட்டிப்பிடித்தான். அந்த மனிதனும் மகிழ்ச்சியில் அவனைத் தழுவிக்கொண்டான்.

“நான் இந்தக் காட்டில் தொலைந்து போய்விட்டேன். யாராவது வருவார்களா என்று தேடியபடி இருந்தேன்” என்றான் முதலில் தொலைந்தவன்.

“நானும் அப்படித்தான். ஆனால் நாம் இருவருமே தொலைந்து போனவர்கள். அதனால் நமது மகிழ்ச்சியோ அர்த்தமற்றது.” என்றான் மற்றவன்.

அப்படித்தான் நேர்கிறது. நீங்களும் தனிமையில் இருக்கிறீர்கள். மற்றவரும் தனிமையில் இருக்கிறார். நீங்கள் சந்திக்கிறீர்கள். முதலில் தேனிலவுதான். தனியாக இருக்கும் இன்னொருவரை சந்தித்துவிட்டதால் இனியும் நீங்கள் தனியர் அல்ல என்ற எண்ணம் தரும் பரவசம் அது. ஆனால் மூன்று நாட்களில், நீங்கள் புத்திசாலியாக இருந்தால், மூன்று நிமிடங்களில், அந்த மகிழ்ச்சி நிலையானதல்ல என்று தெரிந்துவிடும்.

உங்களின் சேர்தலில் இரண்டு தனிமைகள் இணைகின்றன, அவ்வளவே. இரண்டு புண்கள் ஒன்றையொன்று குணப்படுத்தவே இயலாது. கண்களைக் கட்டிக் கொண்டிருக்கும் இருவர் ஒருவரையொருவர் வழிநடத்தவே முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x