

திருமால் வாமனராக, ‘ஆலமரவித்தின் அருங்குறளாக’ அவதரித்து, தேவர் தம் துயர் தீர்க்க, மகாபலியிடம் சென்று, மூவடி மண் யாசித்தார். அம்மன்னன், சுக்கிராசாரியார் தடுக்கவும், மறுத்து, தானம் செய்தான். அப்புனித நீர் சுவாமி திருக்கரத்தில் விழுமுன், திருவிக்கிரமாகி ஓங்கி, உலகளந்தார். இதைக் கம்பர், ‘ உயர்ந்தவர்க்குதவி உதவி என்னவே, விசும்பல் ஓங்கினான்’ என்று பால காண்டம் அகலிகைப் படலத்தில் கூறுவார். மண்ணும் விண்ணும் அளந்து மூன்றாம் அடியை அம்மன்னன் சிரசின் மீது வைத்து அருளினார் பெருமாள். இதனை வள்ளுவர்,
‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு’ என்பது குறள்.
இதில் மடியின்மை என்பதற்கு, செய்ய நினைத்த செயலைச் செய்யும்பொழுது சோம்புதல் இல்லாமை என்பது பொருள். தன் திருவடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன், கடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் ஒருசேர அடைவான். சோம்பலில்லாத மன்னன் நிலப்பரப்பு முழுவதையும் இடையீடின்றிப் பெறுவான் என்பது இக்குறளின் முழுமையான பொருள். இது வாமன அவதாரத்தை விளக்குகிறது. அடுத்து, காமத்துப்பாலில்,
‘தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு’
என்னும் குறளில், தாமரைக் கண்ணான் என்பது கண்ணனைக் குறிக்கும். முதல் குறளால் லீலாவிபூதி எனப்படும் இவ்வுலகத்தைத் திருமால் அளந்தார் என்றும், அடுத்த குறளால் நித்திய விபூதி எனப்படும் பரமபதத்தைக் குறித்தார் என்றும் அறிந்து மகிழலாம்.
வள்ளுவரின் திருமகள்
திருப்பாற்கடலைக் கடைந்தபோது முதலில் மூத்த தேவியான மூதேவி பிறந்தாள். பின் செம்மையான நிறமும் அழகும் உடைய திருமகள் பிறந்தாள். இப்படிப்பட்ட திருமகளை விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்’
என்ற குறளில் விருந்தினர், புதியராய் வந்தோர். முன் அறிமுகத்தால் வந்தவர், அது இல்லாமல் வந்தவர் என இருவகையினர். திருமகள் மனம் மகிழ்ந்து, முகம் இனியளாய் தக்க விருந்தினரைப் போன்று அவனது இல்லத்தில் வாழுவாள். திருமகள் மனம் மகிழக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுவதால்.
அடுத்து, அயலார்க்கு உண்டாகும் நன்மைகளைக் கண்டு மனம் பொறுக்கா திருக்கும் தன்மை அழுக்காறு எனப்படும். அவ்வாறு பொறாமை உடையவனைத் திருமகள், தானும் பொறுக்காமல், தன் மூத்தவளுக்குக் காட்டிவிடுவாள். அதாவது தன் தமக்கையாகிய மூதேவியைக் காட்டி இவனிடம் செல்க என்று கூறிவிடுவாளாம். இதனை அழுக்காறாமை அதிகாரத்தில் காணலாம்.
‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்’
ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தில் மூத்தவளும் இளையவளும் எவ்வெவரிடத்து இருப்பர் என்பதை விளக்குகிறார். ஆள்வினையுடைமையாவது, இடைவிடாத உடல் உழைப்பு அதாவது முயற்சியுடைமை.
‘மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளான் தாமரையினாள்’
மாமுகடி என்பது கரிய மூதேவி ஒருவன் சோம்பலில் நிலைத்திருப்பாள்; திருமகள் சோம்பல் இல்லாதவனின் முயற்சியில் நிலைத்திருப்பாள். முயற்சி இல்லாதவனிடம் வறுமையும், முயற்சி உடையவனிடம் செல்வமும் நிலைத்திருக்கும் என்பதாம் வரைவின் மகளிர் - எல்லை, வரம்பு இல்லாத பெண்கள் என்னும் அதிகாரத்தில், யார் யாரைவிட்டுத் திருமகள் நீங்குவாள் என்பதை,
‘இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு’
சூது என்னும் அதிகாரத்தில், செல்வத்தை அழித்து வறுமையைத் தரும் சூதாட்டத்தை விரும்புவோர், மூதேவியால் விழுங்கப்பட்டு இம்மையில் ஐம்புலன்களால் அனுபவிப்பனவற்றை இழந்து, மறுமையிலும் நரகில் துன்புறுவர் என்கிறார்.