

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்பவர்களே! உங்களுடைய ராசிநாதனான சந்திரன் குருவின் பார்வை பெற்று கஜகேசரி யோகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் மாறுபட்ட வகையில் யோசிப்பீர்கள். புதிய பாதை தென்படும். அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்வது, பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். குரு இந்த வருடம் முழுக்க சாதகமாக இல்லாததால் சில முயற்சிகளெல்லாம் தள்ளிப் போய் தான் முடிவடையும்.
சின்னச் சின்ன ஏமாற்றங்களும் வரக்கூடும். அதாவது 18.6.2014 முதல் குரு உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் அவ்வப்போது களைப்படைவீர்கள். ஆனாலும் உங்களுடைய யோகாதிபதியாக குரு வருவதாலும், உச்சமடைந்து உங்கள் ராசிக்குள் அமர்வதாலும் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். என்றாலும் மனதில் ஒருவித படபடப்பு, அச்சம் வந்துபோகும். கணவன் - மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன விவாதங்களையெல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மஞ்சள் காமாலை, காய்ச்சல், அல்சர் வந்து நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் இந்த வருடம் முழுக்க சாதகமாக இருப்பதால் ஓரளவு வருமானம் உயரும். சகோதர வகையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். சகோதர உறவுகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இந்த வருடம் முழுக்க அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வழக்கில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய நண்பர்களின் தொடர்பால் புது முதலீடு செய்வீர்கள். முதலீடு செய்ய கடனுதவியும் கிடைக்கும். ஏற்றுமதி - இறக்குமதி, உணவு, மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தானத்தை சனி பார்த்துக் கொண்டிருப்பதால் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அலுவலகம் மூலமாக அயல்நாடு சென்று வரும் வாய்ப்பும் தேடி வரும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். இழந்த உரிமையைப் போராடிப் பெறுவீர்கள்.
வழிபாடு - விஷ்ணு, துர்கை
மதிப்பெண் - ஜனவரி - மே - 65/100, ஜூன் - ஆகஸ்ட் - 45/100, செப்டம்பர் - டிசம்பர் - 70/100