இருதயத்தைக் காக்கும் இருதயாலீஸ்வரர்

இருதயத்தைக் காக்கும் இருதயாலீஸ்வரர்
Updated on
2 min read

இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது இருதயாலீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோவில் சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற திருத்தலத்தில் காணப்படுகிறது. இங்கு லிங்க ரூபமாய்க் காட்சி அளிக்கும் சிவபெருமான் அருள்பாலிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.

சிவன் இருதயாலீஸ்வராக எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம். சிவன் இங்கு மட்டும் இருதயத்தைக் காப்பதாகக் கூறுவதற்கு ஓர் சுவையான புராணக் கதை உள்ளது.

சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்ற அவா ஏற்றப்பட்டது பூசலாருக்கு. எனவே அவரது சிந்தையில் உதித்த சிவனுக்கு கற்பனையாலேயே திருக்கோவிலைக் கட்டத் தொடங்கினார்.

பின்னர் தியானத்தில் அமர்ந்த அவர், ஆகம விதிகளின்படி ஆலயம் அமைய வேண்டும் என்பதால் பாவனையிலேயே கோவில் அமைக்கும் ஸ்தபதிகளை வரவழைத்துக் கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார். பிராகாரங்களை எழுப்பினார். தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளைக்கூடச் சிந்தனையிலேயே செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கையிலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் உருக வேண்டினார்.

அதே காலகட்டத்தில் காஞ்சியில் சிவனுக்கு ஒரு கோயிலைச் சிறப்புறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். மன்னன் அமைத்த கோவில் அல்லவா? இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த கும்பாபிஷேக நாளுக்கு முதல் நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பியுள்ள ஆலயத்தில் எழுந்தருளப் போவதால், வேறொரு நாளில் பல்லவன் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவ மன்னன் பல ஆண்டுகள் இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தின் சிறப்பை அறிய விரும்பினான். பின்னர் தான் நிர்மாணித்த ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு மந்திரி பிரதானிகள் புடைசூழ திருநின்றவூரை அடைந்தான் பல்லவமன்னன்.

ஊரோ பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது. மன்னன் திடீரென்று வந்ததால் ஊர் மக்கள் கூடினர். அவர்களிடம் பூசலார் குறித்தும் அவர் நிர்மாணித்த திருக்கோவில் குறித்தும் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடி யில் உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் ஏதும் கட்டின மாதிரி தெரியலையே ’’ என்று பதில் கிடைத்தது.

பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வீசியது. அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவராலும் காண முடிந்தது. நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் சிவன் அனைவரும் பார்க்கக் குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியத்தினை மன்னனுடன், ஊர் மக்கள் கண்டனர். பல்லவ மன்னனோ, அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிலவுலகில் நிர்மாணிக்க அனுமதி கோரினான்.

பூசலார் சம்மதித்ததால் இததிருக்கோவிலை மன்னன் நிர்மாணித்தான். திருநின்றவூரில் - சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலை இன்றும் காணலாம். பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் சிவனுக்கு இருதயாலீஸ்வரன் என்று பெயர். அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in