

பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று சோமநாதர் ஆலயம். அரியும் அயனும் காண முடியாத, முதலும் முடிவும் இல்லாத ஈஸ்வரன் ஜோதி ஸ்வரூபமாகக் காட்சியளித்தபொது தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒளி நிரல்களாக, ஜோதிர்லிங்கங்களாக மாறிப் பல இடங்களில் குடிகொண்டார்.
இதில் முதன்மையானதாகக் கருதப்படுவது குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில். இந்தப் புனிதத் தலம் மிகப் புராதனமானது. இதைப் பற்றிய குறிப்புகள் ஸ்கந்த புராணம், ஸ்ரீமத் பாகவதம், சிவ புராணம் ஆகிய நூல்களில் வருகின்றன. ரிக் வேதத்தில்கூட இது மற்ற பெரிய தலங்களுடன் ஒப்பிடப்படுகிறது. பிரபாஸ் தீர்த்தம் என்றும் இது வழங்கப்படுகிறது.
இந்தக் கோயில் திரேதா யுகத்தில் ராவணனால் வெள்ளியிலும், துவாபர யுகத்தில் கிருஷ்ணரால் மரத்திலும், பின் கலியுகத்தில் பீமதேவன் என்னும் அரசனால் கல்லினாலும் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.
அபரிமிதமான வளம்
இந்தக் கோயில் மிகவும் செல்வச் செழிப்பு வாய்ந்தது. பெஞ்சமின் வாக்கர் என்னும் வரலாற்றாசிரியர் தன் புத்தகத்தில், “லிங்கத்தின் மேல் விலையுயர்ந்த அணிகலன்கள் பொருந்திய தங்க மாலை போர்த்தப்பட்டிருந்தது.
உட்பிராகாரம் மரத்தால் கட்டப்பட்டுத் தூண்கள் உயர்ந்த மணிகளுடன் கூடிய வெள்ளிக் கவசம் பூண்டிருந்தது. பொன்னாலான சர விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் மானியங்களாக வழங்கப்பட்டிருந்தன. 500 ஆடல் மகளிரும், 200 சங்கீத விற்பன்னர்களும், 1000 அந்தணர்களும், 300 சிகைக்கலைஞர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
கோவிலின் கோபுரம் 13 தளங்கள் கொண்டதாகவும், 14 தங்கக் கலசங்கள் கொண்டதாகவும் இருந்தது. கோவிலைச் சுற்றிப் பணியாளர்கள் மற்றும் யாத்ரிகர்களுக்கான விடுதிகள், மாடங்கள் இருந்தன. அவற்றைச் சுற்றிலும் கோட்டை போன்று பெரிய சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மொத்தத்தில் கோயில் அமைந்திருந்த பகுதி ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது” என்று வியக்கிறார்.
அபரிமிதமான இந்த வளம்தான் இதன் மீதான தக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கஜினி முகம்மது, பக்தியார் கில்ஜி, முகம்மது பின் துக்ளக் என்று பலரால் தாக்கப்பட்டு, கடைசியாக 1547-ல் போர்ச்சுக்கீசியரால் அழிக்கப்பட்டது. இப்படிப் பல முறை தாக்குதலுக்கு உட்பட்டுச் சிதைந்தாலும் இந்தக் கோயில் ஒவ்வொரு முறையும் புதுப் பொலிவுடன் எழுப்பப்பட்டுள்ளது.
நீலக்கடல் பின்னணியில் ஆலயம்
கோயிலுக்குச் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. 100 மீட்டர் தொலைவில் தடுப்பு போடப்பட்டுள்ளது. உடைமைகள் எல்லாவற்றையும் வெளியே வைத்து விட்டுத்தான் உள்ளே நுழைய அனுமதி. சாளுக்கியப் பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில் 150 அடி உயரத்திற்கு மேல் எழும்பி நிற்கிறது. அதன் மேலுள்ள கலசம் மட்டும் கிட்ட தட்ட 10 டன் எடை என்கிறார்கள்.
கோவிலின் கம்பீரமும் அழகும் நம்மை அயர வைக்கின்றன. கோவில் பின்னணியில் பொங்கும் நுரையுடன் நீலக் கடல். அழகிய ஓவியம் போன்ற காட்சி. இது ஒரு கடற்கரை கோயில் என்றுகூடச் சொல்லலாம். பிராகாரங்களில் நடக்கும்போதே கடல் காற்று மனதைக் குளிர்விக்கிறது.
சிவலிங்கத்தின் மேல் மலர்
கர்ப்பக்கிரகம் தங்கக் கவசம் பொருந்திப் பளபளவென்று ஜொலிக்கிறது. மூலஸ்தானத்தில் உள்ள பெரிய அளவிலான சிவலிங்கத்தின் மேல் உள்ள மலர் அலங்காரம் குறிப்பிடத்தக்கது. அங்கே நடைபெறும் மங்கள ஆரத்தியும் காண வேண்டிய ஒன்று.
அந்தச் சமயத்தில் தாளக் கருவிகளோடு மணியும் சேர்ந்து எழுச்சியூட்டும் இசையின் ஒலி மெய்சிலிர்க்க வைக்கிறது.
கோயிலின் பின்புறம் சுற்றி வந்தால், கடற்பரப்பின் வீச்சு நன்றாகவே தெரிகிறது. கடல் மட்டம் கோவிலைவிட இரண்டு அடுக்கு அளவு கீழேதான் உள்ளது. பின்புற வெளிப் பிராகாரத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்ட சுவரில் பாண ஸ்தம்பம் (அம்புத் தூண்) என்று குறிப்பிடப்படும் ஒரு தூண் உள்ளது.
சோமநாதர் கடற்கரையிலிருந்து அண்டார்டிகா வரையிலான நேர்க்கோட்டில் எந்த நிலப் பரப்பும் கிடையாது என இந்தத் தூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட தீர்க்க ரேகையில் தென் துருவத்தை நோக்கிச் செல்லும் நிலப்பரப்பின் வட முனையின் முதல் புள்ளியில் இந்தத் தூண் நிற்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் பூஜை செய்த இடம்
கோயிலுக்கு வெளியிலும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. சோம்நாத் சிறிய ஊர்தான். கோயிலைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் மேலும் பல புனிதத் தலங்களும் உள்ளன.இவை எல்லாவற்றையும் சோம்நாத் டிரஸ்ட் நிர்வகிக்கிறது.
கிருஷ்ணரே வந்து பூஜை செய்த இடம் சோம்நாத் என்று நம்பப்படுகிறது. எனவே, இது சைவ-வைணவத் தலமாகப் போற்றப்படுகிறது.
கோயிலுக்கு நேரதிரான திசையில் பழைய சோமநாதர் ஆலயம் உள்ளது. இது ராணி அஹல்யாபாய் ஹோல்கர் என்பவரால் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில் பூமிக்குக் கீழே உள்ள கருவறையில்தான் புராதான சோமநாதரின் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இது இங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
கிருஷ்ணர் உயிர் நீத்த இடம்
பிரதான ஆலயத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் பல்கா தீர்த்தம் என்னும் இடம் உள்ளது. இந்த வனத்தில்தான் கிருஷ்ணர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது அவருடைய பாதத்தைக் கண்டு மான் என்று எண்ணி வேடன் ஒருவன் அம்பு எய்ய, அந்த அம்பு பாய்ந்து கிருஷ்ணர் பூத உடலை நீத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் நினைவாய், பல நூற்றாண்டுகளாய் இருக்கும் ஒரு பழைய மரம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சற்று தூரத்தில் ஒரு மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
இங்கும் ஒரு திரிவேணி சங்கமம் உள்ளது. ஹிரன், கபில் மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமமாகும் இடம் இது. இங்கு பலவிதமான பறவைகளைக் காண முடிகிறது.
ஹிரண் நதிக் கரையில் கீதை மற்றும் லட்சுமி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கு கிருஷ்ணரின் பாதம் போன்ற அமைப்பு உள்ளது. இங்கிருந்துதான் கிருஷ்ணர் வைகுண்டம் புறப்பட்டுச் சென்றதாக ஐதீகம். சற்று அருகிலேயே பாண்டவர் தங்கிய பாண்டவர் குகை , சூரியனார் கோவில் ஆகியவை உள்ளன.
ஈசனும் பெருமாளும் அருள் புரியும் இந்த இடம், வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டிய தலம் .
சோமனுக்கு அருள் புரிந்த நாதர்
ஸ்கந்த புராணத்தில் வரும் கதை இது. சோமன் (சந்திரன்) தட்ச பிரஜாபதியின் 27 குமாரிகளையும் மணந்தான். மிகுந்த அழகுள்ளவன் என்பதால் அவன் கர்வம் கொண்டவன். 27 பெண்களில் ரோகிணியிடம் மட்டும் ஈடுபாடு கொண்டான்.
இதையறிந்த தட்சன், சந்திரனை அழைத்து அவன் தவறைச் சுட்டிக் காட்டினான். வெட்கமடைந்த அம்புலியும் தவறைத் திருத்திக்கொள்வதாக வாக்களித்தான். ஆனால் மறுபடியும் அவன் மனம் ரோகிணியின் பக்கம் மட்டுமே சென்றது. ஏமாற்றமும் விரக்தியுமுற்ற மற்ற 26 பேரும் தந்தையிடம் போய் மீண்டும் புகார் செய்தனர். இம்முறை கோபமடைந்த தட்சன், “நீ வாக்கு தவறி விட்டாய். பொலிவிழந்து, உருக்குலைந்து தொழு நோய் பீடிக்கக் கடவாய்” என்று சாபமிட்டான்.
சாபம் பலிக்கத் தொடங்கியது. சந்திரன் பொலிவிழந்தான். இதனால் இயற்கையிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. கடல் ஆர்பரிக்கவில்லை. இரவில் குளிர்ச்சி குறைந்தது. விசனமுற்ற தேவர்கள் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மனும் பிரபாஸ் தீர்த்தத்தில் உள்ள சங்கரனே இதைத் தீர்க்க முடியும் என்று கூறினார்.
குஷ்டரோகியான சோமனும் இத்தலத்திற்கு வந்து ஆறு மாதங்கள் சிவனை நோக்கித் தவமிருந்தான். மனமிரங்கிய சிவனாரும் அவன் முன் தோன்றி சாபத்தின் தாக்கத்தைக் குறைத்தார். மாதத்தில் 15 நாட்கள் வளரவும் பின் 15 நாட்கள் ஒவ்வொரு களையாக இழந்து தேயவும் அருளினார். நன்றியறிதலாக சந்திரனும் அவருக்குத் தங்கத்தில் ஒரு கோயில் எழுப்பினான். அதில் சோமேஸ்வரராகக் குடிகொண்டார் எம்பெருமான்.
நாளடைவில் இந்த இடம் சோம்நாத் என்று பெயர் பெற்றது. ஒரு குளமும் வெட்டப்பட்டது. இதில் முங்கி எழும் பக்தர்கள் எல்லாப் பாவங்களும், பிணிகளும் நீங்கப் பெறுவதாக நம்பிக்கை. இங்கு அம்புலி மிகவும் ஒளியுடன் திகழ்வதால் இந்த இடம் பிரபாஸ் பாடன் (பிரபை - ஒளி) என்று பெயர் பெற்றது