

எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! பூவா தலையா போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த நீங்கள், இந்த ஆண்டு தெளிவாக விரைவாக முடிவெடுப்பீர்கள். துணிந்து கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். உங்களை குறைத்து மதிப்பிட்ட பலருக்கும் இந்தாண்டில் சிம்ம சொப்பனமாய் இருப்பீர்கள். வேலையில் இருந்துகொண்டே பகுதி நேர வியாபாரம் தொடங்கி குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். உங்களின் ஆலோசனைகள் சபைகளில் அரங்கேறும்.
ஜூன் 17-ம் தேதி வரை குரு கூடுதல் பலத்துடன் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் மதிப்பும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் சேரும். அடிக்கடி பழுதான வாகனத்தை விற்று புதியது வாங்குவீர்கள். வருடம் பிறக்கும் போது சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் மனைவிக்கு அவ்வப்போது உங்கள் மீது சந்தேகம் வரும். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசாங்கத்திற்கு நெருக்கமாவீர்கள். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் புது வேலை அமையும்.
பூர்வீக சொத்து கைக்கு வரும். வாய்தாவால் தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயரை சில பிரபலங்கள் பாந்துரைப்பார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு, தூக்கமின்மையால் சிரமப்படுவீர்கள். சனி, ராகுவின் ஆதரவு இருப்பதால் எதிரணியில் இருப்பவர்களும் ஆதரிப்பார்கள். கம்ப்யூட்டர், லேப்டாப் என பல எலக்ட்ரானிக் சாதனங்களை புது மாடலில் வாங்குவீர்கள்.
சிலர் சமையலறையையும், படுக்கை அறையையும் அதிகம் செலவு செய்து நவீனமாக்குவீர்கள். புது வேலை கிடைக்கும். தள்ளிப்போன திருமணமும் கூடி வரும். வியாபாரத்தில் அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் அமையும். உணவு, பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தள்ளி வைக்கப்பட்ட நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள்.
வழிபாடு - முருகப் பெருமான்
மதிப்பெண் - 85/100