Last Updated : 08 Jun, 2017 09:52 AM

 

Published : 08 Jun 2017 09:52 AM
Last Updated : 08 Jun 2017 09:52 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!

தண்டனை பெற்றாவது இறைவனின் நேரடிக் கவனத்தில் இருக்க விண்ணப்பித்த மணிவாசகர், தகுதிபார்க்காமல் தம்மை அழைத்து ஆட்கொண்ட இறைவனின் கருணை இன்று இல்லாமல் போய்விட்டதோ என்று ஏக்கம் கொண்டு, இறைவனிடம் உறுதியானதொரு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

குற்றங்களைக் குணமாகக்கொண்டால் என்ன கெட்டுப்போய்விட்டது?

“ஏழை பங்கா! எம் அரசே! ஒன்றுக்கும் அற்ற நாயான என்னை, அன்று ஆட்கொண்டு உயர்வளித்த உன்கருணை, இன்று எனக்கு அறவே இல்லாமல் போயே போய்விட்டதோ? என்னை நீ ஆட்கொண்டும், அழைத்துச் செல்லாமைக்குக் காரணம், நான் செய்த மலையளவு குற்றங்களே என்றால், உனக்கு ஒன்று சொல்கிறேன்! மலைபோன்ற என் குற்றங்களை, நீ, "(உயிர்க்)குணம் அப்படித்தான் இருக்கும்" என்று எண்ணி மன்னித்தால், என்ன கெட்டுப்போய் விட்டது? உன்னை யார் கேள்வி கேட்பார்கள்? எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையுமுடைய எம்மானே! எனக்கு இரங்கி அருள்வாய்!”, என்றார் பெருமான்.

ஒன்றும் போதா நாயேனை! உய்யக் கொண்ட நின் கருணை!

இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!

குன்றே அனைய குற்றங்கள்!, குணமாம் என்றே, நீ கொண்டால்!,

என் தான் கெட்டது? இரங்கிடாய்!; எண்தோள், முக்கண், எம்மானே! (திருவாசகம்:33-3)

ஆட்கொண்டவுடனேயே கொடுவினைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதுதானே இறைத்தன்மை! வினைகளே இல்லாத நிலையில், முன்வினைப்பயனால் மணிவாசகர் பெற்றஉடல் வீழ்ந்திருக்கவேண்டும்; அப்படி வீழாமல், சாமர்த்தியமாக, மணிவாசகரின் உடலைத் தன் அருள் என்னும் ஆதாரம்கொண்டு, இவ்வுலகில் நிறுத்தினான் இறைவன்! இது திருவாசகம் தருவதற்காக இறைவன் செய்த திருவிளையாடல்.

உய்யக்கொண்ட கருணை எங்கே?

இதையறியாத குற்றமற்ற மணிவாசகர், “தகுதிஏதும் அற்றவனான, எதற்கும் பயன்படாத நாயேனை, நீ ஆட்கொண்டதற்கு ஒரே காரணம், என்னிடம் நீ கொண்ட கருணை மட்டுமே! அக்கருணை, இப்போது இல்லாமல் போனது எவ்வாறு?”, என்று மருகினார்.

கருணைப்பெருங்கடலில் கரையும் மலையளவு குற்றங்கள்!

இறைவனிடமிருந்து விடையேதும் கிடைக்காததால், ஆட்கொண்டபின், பெற்ற கருணையை இழக்கும்வகையில், பல புதிய குற்றங்களைத் தாம் செய்துவிட்டதாக ஒரு விடை கற்பித்துக்கொண்டு, “ஐயா! உன் கருணைப் பெருங்கடலில் நான் செய்த மலைஅளவு குற்றங்களும் கரைந்துவிடுமல்லவா? எனவே, என் குன்றே அணையக் குற்றங்களை, நீ, “உயிர்க்குணம் அப்படித்தான் இருக்கும்”, என்றுகொண்டு மன்னித்து அருள்வதால், எந்தக் குறைவும் வரப்போவதில்லை! என்னை உடையவனான நீயே எனக்காக இரக்கப்பட்டு இதைச் செய்வாய்!”, என்றார் பெருமான்.

‘குன்றே அனைய குற்றங்கள், குணமாம் என்றே நீ கொண்டால், என்தான் கெட்டது?’, அட! விரக்தி நிலையிலிருந்து மீண்டுவர, இறைவனிடம் மன்றாடுவதற்காகக் கிடைத்த நமக்கான மணிவாசகம் இதுவல்லவா?

மணிவாசகரின் இத்திருவாசகத்தில் தாம்கலந்து திளைத்த வள்ளலார், தம் இறையனுபவத்தை இரண்டு திருவருட்பாக்களில் அருளியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசையுடன் வள்ளலாருக்கு அணிவித்த சிவமாலை!

தெருவினில் விளையாடித்திரிந்த சிறுகுழந்தையான தம்மை ஆசையுடன் வலிய அழைத்து, தன் அருள் என்னும் சிவமாலையை தமக்கு அணிவித்து மகிழ்ந்தான் இறைவன் என்கின்றார் வள்ளலார். “என்னிடம் நீ கொண்ட அத்தகைய ஆசையெல்லாம் இன்று உன்னிடம் இல்லாமலே ஓடிவிட்டதோ?”, என்று ஆதங்கத்துடன் இறைவனிடம் விண்ணப்பிக்கிறார் பெருமான்.

தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை, வலிந்தே

சிவமாலை அணிந்தனை! அச் சிறுவயதில், இந்த

உருவிடத்தே நினக்கிருந்த ஆசை எலாம், இந்நாள் ஓடியதோ? ..... (திருவருட்பா: 3808:1-4)

வள்ளலாரின் திருவருட்பா, இங்கு தரப்பட்ட திருவாசகப் பாடலின் முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட இறையனுபவமாகும்.

குற்றம் குணமாகக்கொண்டு அருட்பெருஞ்சோதி அருள்க!

இறைவன் தன் அடியவரின் குற்றங்களைக் குணமாகவே கொண்டு அருளுவான் என்று தெளிந்த வள்ளல்பெருமான், ஆறாம் திருமுறைத் திருவருட்பா பாடல் ஒன்றில், “எனக்கு இயல்பு குற்றம் புரிதல்! அதை உயிர்க்குணமாகக் கொண்டு, பொறுத்தருளுதல் உனக்கு இயல்பு! சிற்றம்பலத்தாடும் பெருமானே! இச்சிறியேன் உன் பேரருள் குறித்துச் சொல்லும் வாழ்த்து எதுவும் உண்டோ? சட்டென்று அடியேனுடைய சிந்தனையைத் தெளிவித்து, அச்சம், துயர் ஆகியன தீர்த்து, இப்பொழுதே அருட்பெருஞ்சோதி நீ எனக்குத் தருவதற்கான சரியான சமயம் இதுவேயாகும்”, என்று இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்.

குற்றம் புரிதல் எனக்கியல்பே! குணமாக் கொள்ளல் உனக்கியல்பே!

சிற்றம்பலவா! இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாது உளது?

தெற்றென்று, அடியேன் சிந்தைதனைத் தெளிவித்து! அச்சம் துயர்தீர்த்தே!

இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே!

(திருவருட்பா: 5350)

வள்ளல் பெருமானின் இத்திருவருட்பா, இங்கு விளக்கப்பட்ட திருவாசகப்பாடலில், மணிவாசகப்பெருமான் இறைவனிடம் வைத்த கேள்விக்குப் பதிலாகவே அமைந்துவிட்டது! என்னே இறைவனின் கருணை!

குற்றங்களைக் குணமாய்க் கருதும் இறைவனின் கொள்கை!

இறைவன் தன் அடியவர்கள் குற்றம் செய்யினும், உயிர்க்குணம் எனக் கருதி மன்னிக்கும் கொள்கையுடையோன் என்பதால் அவன் திருவடிகளைச் சரணடைந்ததாகப் பாடுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். “பொன்திரள் போன்ற அழகிய தாமரைமலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! ‘நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தன்,நாவுக்கரையன், நாளைப்போவான், சூதாடுதலை நன்குகற்ற மூர்க்கன், நல்ல சாக்கியன்,சிலந்தி(கோட்செங்கட்சோழ நாயனார்), கண்ணப்பன், கணம்புல்லன்’ என்ற இவர்கள் செய்த குற்றமான செயல்களைக் குணமானவே கருதும் உன் கருணைத் திருவுள்ளத்தின் கொள்கை கண்ட அடியேன்,உனக்கே மீளாஅடிமையாய், நின் ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைச் சரணடைந்தேன்! என்னை ஏற்றுக் கொண்டருள்க!”, என்றார் சுந்தரர்.

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்! நாவினுக்கு அரையன்! நாளைப்போவானும்!

கற்றசூதன்! நற்சாக்கியன்! சிலந்தி! கண்ணப்பன்! கணம்புல்லன்! என்று இவர்கள்

குற்றம் செய்யினும்! குணம் எனக்கருதும் கொள்கைகண்டு! நின் குரைகழல் அடைந்தேன்!

பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே!

(திருமறை:சுந்தரர்:55.4)

சுந்தரர் குறிப்பிட்ட அருளாளர்களான நாயன்மார்கள், (உலகவர் பார்வையில்) செய்த குற்றங்கள்: திருஞானசம்பந்தர்: (சம்பந்தரின் அனைத்துப் பாடல்களுக்கும் பண் அமைத்துப் பெருமைசேர்த்த) திருநீலகண்ட யாழ்ப்பாணர், பண் அமைக்க இயலாதவாறு யாழ்முறிப்பாடல் ஒன்று பாடியது;

நாவுக்கரசர்: இறைக்கொள்கைஇல்லாச் சமண சமயம் ஏற்று இறைவன் திருவருளை இகழ்ந்தது;

நாளைப்போவார்: இறைவன் உறையும் தன்னுடலையே இழிவாகக் கருதியது;

மூர்க்க நாயனார்: சூதாடியது; சாக்கியநாயனார்: இலிங்கத் திருமேனியைக் கல்லால் எறிந்தது;

கோச்செங்கண்சோழன் - சிலந்தியாக இருந்போது செய்தது: வாய்நூலால் லிங்கத்தின் மேல் வலைவேய்ந்தது;

கண்ணப்பர்: செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும், வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும், எச்சில்பட்ட இறைச்சியைப் படைத்ததும் ஆகியன;

கணம்புல்லர்: திருக்கோயிலில் தம் தலைமயிலை விளக்கென்று எரித்தது.

உலகவர் பார்வையில் இவை குற்றங்கள்; இவ்வருளாளர்கள், தூயமனதுடன், அருள்வழியாலும், அன்பாலுமே இவற்றைச் செய்தார்கள் என்பதை உலகவர் அறிய மாட்டார்கள்! திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பெருமையை உலகோர் அறியச் செய்வதற்காகவே யாழ்முறிப்பாடல் பாடினார் ஞானசம்பந்தர் என்பதை இறைவன் மட்டுமே அறிந்து, அருள்செய்தான் என்றறிந்து, திருவடிகளை வந்தடைந்ததாகக் குறிப்பிட்டார் சுந்தரர். எனவே, சுந்தரர், தன் காதலுக்காக, இறைவனைப் பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டியதைக் குற்றமாகக் கொள்ளமாட்டான் என்பது இப்பாடலின் உட்பொருள்.

வினைத்தொகுதியிலிருந்து விடுதலைபெற...

மனிதர்களின் குற்றங்களே குன்றளவு வினைத்தொகுதிகளாக நிற்கின்றன. வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று இக்குற்ற வினைத்தொகுதிகள் வளருமே அன்றி, மனிதர் எவரும் தன்முயற்சியால் தீர்க்கக்கூடியதன்று. மனமுருகவேண்டி, இறைவனின் திருவடிப்பேறு பெறும்போதுதான் வினைத்தொகுதியிலிருந்து உயிர் முழுவிடுதலையைப் பெறுகிறது.

“இறைவா! உன் பெருமையனைத்தும் மறக்கச் செய்து ஊனுடம்பில் என்னைப் புகுத்திவிட்டாயே! உன்னைக் காணாது திகைத்து நின்கும் என்னைத்தேற்றி, அழைத்துச் செல்வாய்!" என்று வேண்டும் தேன் வாசககங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x