Published : 24 Oct 2013 05:03 PM
Last Updated : 24 Oct 2013 05:03 PM

முக்தியின் வழி

சிக்கிம். இந்தப் பெயரைக் கேட்டவுடனே பனிபடர்ந்த சிகரங்கள், பச்சை போர்த்திய மலைகள், அவற்றினூடே குதித்தோடும் அருவிகள், வளைந்து நெளிந்து செல்லும் நதிகள், ஆழமான பள்ளத்தாக்குகளை ஆக்கிரமிக்கும் மூடு பனி மேகங்கள் ஆகிய காட்சிகள் நம் முன்னே விரியும். சிக்கிம் இயற்கையின் எழிலார்ந்த பகுதிகளில் ஒன்று. ஓவியனின் கனவு பூமி.

சிக்கிமில் முக்கியமாகக் காண வேண்டியது இரண்டு தலங்கள். மலைகளுக்கு மேல் உள்ளது. முதலில் ‘சாம்ட்ருபட்சே (Samdruptse) மலை. அதாவது, விரும்பியதை நிறைவேற்றும் மலை. அதன் மீது செல்கிறோம்.

புத்த மடாலயம்

இது பௌத்தர்களின் ஆலயமாகும். வழி நெடுக அதன் அடையாளக் கொடிகள். உள்ளே நடந்துதான் செல்ல வேண்டும். பாதை முடிவில் பிரார்த்தனை கூடம் போலுள்ள ஒரு மடாலயம். அதன் மேல் ஒரு மிகப் பெரிய சிலை. இரண்டாம் புத்தர் என்று அழைக்கப்படும் பத்மசம்பவரின் (குரு ரிபோச்சே)135 அடி உயர சிலை. இதன் அமைப்பு திபெத் நாட்டின் கட்டிடக்கலையை ஒட்டியிருக்கிறது. நிறைய பக்தர்கள் தரிசிக்க வருகிறார்கள். மற்றும் ஒரு சுவாரஸ்யம் இந்த மலை உறங்கும் எரிமலை என நம்பப்படுகிறது. பௌத்தத் துறவிகள் மந்திரங்கள் ஜபித்து அமைதியாக வைத்திருக்கிறார்களாம். குரு, தாமரை மலர் மேல் அமர்ந்த நிலையில் உக்கிரமூர்த்தியாக காணப்படுகிறார். இந்த மலையிலிருந்து சுற்றியுள்ள ஊர்கள் தெரிகின்றன. வானம் தெளிவாக இருந்தால் டார்ஜிலிங், கஞ்சென்ஜங்காவும் தெரியும். இந்தச் சிலை ஒரு கட்டிடவியல் அற்புதம் என்றாலும் இதை விட மனதைக் கவரும் இடம் இன்னொரு இடத்தில் இருந்தது.

சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்ற சிட்தேஷ்வர் தாம். நாம்சி மார்க்கெட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மலையின் பெயர் - சொலோபோக். இந்தியாவில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான கோயில்கள் அனைத்தையும் இங்கே ஒருசேரக் காணலாம் சார் தாம் என்று அழைக்கப்படும் நான்கு தலங்களின் (பூரி, துவராகா, ராமேஸ்வரம், பத்ரிநாத்) கோயில்களின் பிரதிமைகள் இங்கே உள்ளன. பூஜை செய்ய குருக்கள், பூசாரிகள் உள்ளனர் மற்றும் 12 ஜ்யோதிர் லிங்கங்கள், சீர்டி சாயி பாபா கோயில்களும் உள்ளன.

கோயில்கள் ஏழு அல்லது எட்டு நிலைகளில் அமைந்துள்ளன. தரையிலிருந்து படிகள். கீழே கிராதேஸ்வரர் (பாரதத்தில் அர்ஜுனனுக்கு அருள்புரிந்தவர்) வேடனின் ரூபத்தில் நிற்கிறார். சிவன், பார்வதியை தட்சனின் யாகத்தில் இழந்த பிறகு இங்குள்ள காடுகளில்தான் சுற்றிக்கொண்டிருந்தார் என்று புராணக்குறிப்புகள் உள்ளன.

படிகளின் நடுவே தோட்டம் போன்ற அமைப்பு. படிகள் ஏறும்போதே ஒவ்வொரு நிலையிலும் உள்ள கோயில்களைக் காணலாம். படிகள் முடியும் இடத்தில் ஒரு பெரிய நந்தியின் சிலை.

ரிஷபம் நகைகள் அணிந்துகொண்டு அழகாக இருக்கிறது கடைசித்தளத்தில் 12 ஜ்யோதிர்லிங்கங்களின் கோயில்களும் உள்ளன. மேலே ஏறியவுடன் ஒரு பெரிய பிரார்த்தனைக் கூடம். அதை கலைக்கூடம் என்றே அழைக்கலாம் அதற்கும் மேலே 108 அடி உயரத்தில் கங்காதரரின் சிலை. கையில் உடுக்கை,திரிசூலம்,தலையில் கங்கையுடன் காட்சி தருகிறார். கூடத்தின் உள்ளே இதைவிட பிரமிப்பூட்டும் நடராஜர் சிலை. கையில் அக்னியுடன் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். சுற்றி வந்தால் மற்ற கடவுளர்களின் ரூபங்களும் ஓவியங்களும் பதிக்கப்பட்டுள்ளன . கோயிலின் ஒரு பக்கமாக நின்று கொண்டு இந்த இடத்தின் தெய்வீக அழகை ரசிக்கிறோம் புகைப்படங்கள் எடுக்கச் சலிக்காது .

எதையோ தேடி அலையும் ஆன்மா இங்கு வந்து சரணடைந்தது போலிருந்தது. இடத்தை விட்டு வரவே மனமில்லை நினைவுகளை அங்கேயே விட்டு விட்டு கங்டாக் திரும்புகிறோம்

இந்துக்கள், சார் தாம் யாத்திரையை முக்தி அடையும் வழி என்று நம்புகிறார்கள் . உள்ளூர்வாசிகள், சித்தேஷ்வர் தாம் விஜயம் எல்லாப் பாவங்களையும் களையவல்லது என்று நம்புகிறார்கள்

ஐம்புலன்களையும் மனதையும் கட்டிப்போடும் அற்புதக் காட்சிகள். ஆன்மாவைத் தொடக்கூடிய இறை அனுபவம். சுருக்கமாகச் சொன்னால் இது மறைந்திருக்கும் புதையல். உணர்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x