Published : 06 Apr 2017 09:41 AM
Last Updated : 06 Apr 2017 09:41 AM

பங்குனி உத்திரம்: ஏப்ரல் 9 - பனைமரச் சோலையில் அவதரித்த சிவன்

சோழிங்கநல்லூர், சோழ மன்னர்கள் காலத்தில் சோழன் கண்ட நல்லூராக இருந்தது. சோழப் பேரரசின் போர்த் தளவாடங்கள் பராமரிக்கும் பகுதியாக இருந்த சோழன்கண்ட நல்லூரின் தளபதியாக கங்கன் என்பவன் இருந்தான். சிவபக்தனான கங்கன் சிவபெருமானுக்காக ஆலயம் ஒன்றை எழுப்பி அங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முயற்சி எடுத்தான். ஆனால், முயற்சிகள் பல செய்தும் அவனால் அதை உடனடியாகச் செய்துமுடிக்க முடியவில்லை.

கனவில் வந்த சிவன்

இதனால், மன சஞ்சலம் கொண்டவன், தனது மனைவி யாழினியிடம் தனது மனக்குறையைச் சொல்லி வருந்தினான். கணவனின் துயர்துடைக்க எண்ணிய யாழினி, சடைமுடியானை வேண்டினாள். அன்றிரவே, கங்கனின் கனவில் காட்சிகொடுத்த ஈசன், “கானகத்தில் உனது புரவிப் படைகள் மேய்ச்சலுக்குச் செல்லும் பனைமரச் சோலையின் வடகிழக்கு மூலையில் புற்று ஒன்று இருக்கும். நீயும் உன் மனைவியும் சென்று அந்தப் புற்றை வணங்கினால் அதிலிருந்து ஒரு நாகம் வெளிப்பட்டு உங்களுக்கு வழிகாட்டும். அது போகும் திசையிலேயே இருவரும் பயணித்தால் சுயம்புவாய் நான் இருக்கும் இடத்தை உங்களுக்கு அது காட்டும். அவ்விடத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபடு; நீயும் உன் குடிமக்களும் சுபீட்சம் பெருவீர்கள்’’ என்று சொல்லி மறைந்தார்.

கங்கன் எழுப்பிய ஆலயம்

மறுநாள் காலையில் தனது மனைவி யாழினியை அழைத்துக்கொண்டு பனைமரச் சோலைக்குச் சென்றான் கங்கன். அங்கே, ஈசன் கனவில் சொன்னது போலவே புற்று ஒன்றை இருவரும் கண்டனர். அந்தப் புற்றை பயபக்தியுடன் இருவரும் வணங்க, அதனுள் இருந்து வெளிப்பட்ட நாகம், இருவரையும் கானகத்தில் வழிநடத்திச் சென்றது. குறிப்பிட்ட இடம் சென்றதும் தனது தலையை மூன்றுமுறை தரையில் மோதிவிட்டு மறைந்தது நாகம்.

நாகம் மோதிவிட்டுச் சென்ற இடத்தில் வட்டவடிவப் பள்ளம் இருந்தது. கங்கனின் படைவீரர்கள் அந்த இடத்தை சற்றே ஆழமாகத் தோண்டினார்கள். அப்போது அதனுள்ளே இருந்து பிரகாசமான ஒளியுடன் சுயம்புவாய்த் தோன்றியது சிவலிங்கம். பக்திப் பரவசம் கொண்ட கங்கன், அப்போதே அவ்விடத்தில் கோயில் கட்டும் பணியைத் தொடங்கினான். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன், சிவாலயத்தை எழுப்பி முடித்து அதனுள்ளே சுயம்புலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவன், விசாக நட்சத்திர நாளில் குடமுழுக்கும் நடத்தி முடித்தான்.

வணங்கிய தளபதிகள்

சைவத்தையும் வைணவத்தையும் சமமாகப் பாவித்த கங்கன் அதே இடத்தில் பெருமாளுக்கும் சன்னதி அமைத்தான். இந்த ஆலயம் எழுப்பப்பட்ட பிறகு கங்கனின் படைத் தளபதிகள் போருக்குப் புறப்படும் முன்னதாக இங்கு வந்து சிவனுக்கும் பெருமாளுக்கும் வெள்ளை, சிவப்பு மலர்கள் சாற்றி வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள். இப்படிச் சென்றால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இவ்வளவு சிறப்புடன் விளங்கிய இத்திருத்தலம் சோழர்கள் வீழ்ச்சி கண்டு நாயக்க மன்னர்கள் தலைதூக்கிய காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்த பிறகு மீண்டும் இத்திருத்தலத்தில் சங்கர நாரயணரும் வரதராஜ பெருமாளும் சுயம்புவாய் முளைத்தார்கள். உழவுக்காலில் பட்டு இந்தச் சிலைகள் இரண்டும் மீண்டும் வெளியில் வந்தன. மீண்டும் இங்கே ஆலயம் எழுப்பப்பட்டது.

திருமேனியில் வளையல் தடம்

இங்குள்ள சங்கர நாராயணனின் திருமேனியில் வளையல் அழுத்திய தடத்தை இப்போதும் பார்க்க முடியும். ஒருசமயம் போருக்குச் சென்ற கங்கன், நீண்ட நாட்களாகியும் போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை. தனது கணவன் வெற்றியோடு திரும்பிவர வேண்டும் என சங்கரனிடம் போய் வேண்டினாள் யாழினி. அப்போது, கங்கன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. இதைக் கேட்டுத் துடித்த யாழினி, ஈசனை கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள். அப்போது அவள் கையில் அணிந்திருந்த வளையல் இறைவனின் திருமேனியில் பட்டு அழுந்தி வடுவை ஏற்படுத்தியதாகயும் இந்த நிகழ்வுக்குப் பிறகு, போர்க்களத்திலிருந்து கங்கன் வெற்றிமாலையுடன் திரும்பி வந்ததாகவும் செய்தி.

சிவபெருமானும் திருமாலும் ஒருங்கே கோயில் கொண்டிருக்கும் இந்த சங்கர நாராயணர் - வரதராஜ பெருமாள் திருத்தலம் ஒரு பரிகாரத் தலமாகும். தாலிபாக்கியம் நிலைத்திட வேண்டுவோர் இங்கு வந்து 48 நாட்கள் விளக்கேற்றி நிறைவு நாளில் வெண் பொங்கல் படையல் வைத்து மூவகை பூக்களுடன் இறைவனை வழிபட்டால் மாங்கல்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x