Published : 21 Jul 2016 01:12 PM
Last Updated : 21 Jul 2016 01:12 PM

ஸ்ரீ கிருஷ்ண யோகத்தான்

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடபெறவிருக்கும் அந்தக் கண்காட்சியின் முன்னோட்டமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 17-ம் தேதி கிருஷ்ண யோகத்தான் நடைபெற்றது. அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அதில் பங்கேற்றனர். யோகத்தின் பெரும் சக்தியாக கிருஷ்ணர் விளங்குவதால் யோகத்துக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள தொடர்பை உணர்த்தும்விதமாக யோகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு, சூழலியல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலைத் தக்கவைத்தல், குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகளைக் கற்பித்தல் (பெற்றோர், மூத்தோர் மற்றும் ஆசிரியர்களை மதித்தல்), பெண்களின் மரியாதையை உயர்த்துதல், நாட்டுப்பற்றை ஊக்குவித்தல் ஆகியவை இந்தக் கண்காட்சியின் ஆறு கருப்பொருள்கள். இந்த ஆறு கருப்பொருள்களும் யோகத்தான் நிகழ்ச்சியில் யோக நிலைகளாக விளக்கப்பட்டன. உதாரணத்துக்கு விருக்ஷாசனம் (மரம் போன்ற அமைப்புநிலை) மூலம் மரங்களின் மதிப்பும் காடுகள் பாதுகாப்பும் உணர்த்தப்பட்டது. புஜங்காசனம் (பாம்பு போன்ற அமைப்புநிலை), காட்டுயிர் பாதுகாப்பை உணர்த்தியது.

யோகம் பயிற்றுவிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் யோகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பைப் பார்த்து வியந்தார்கள். நடிகர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். யோகப் பயிற்சியில் தேர்ந்தவரான சிவகுமார், 58 ஆண்டுகளாக யோகா செய்துவருகிறார். 76 வயதிலும் தான் இளமையுடனும், ஞாபகத்திறனுடனும், எப்போதும் உஷார் நிலையிலும் இருப்பதற்குத் தொடர்ச்சியான யோகப் பயிற்சிதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

பத்தாயிரம் கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் யோகத்தான் நிகழ்ச்சி ஜூலை 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதுவும் ஆறு கருப்பொருள்களை மையமாக வைத்து நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x