

எகிப்து தேசத்தின் அரசனாகிய பார்வோனின் கனவுகளுக்கு யோசேப்பு கொடுத்த விளக்கமும் ஆலோசனையும் நம்பக்கூடியவையாக இருந்தன. எனவே யோசேப்புவை அரசன் தனக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட ஆளுநராக்கினான். யோசேப்பு கூறியதைப் போலவே அரசனின் கனவுகள் பலித்தன. ஏழு ஆண்டுகள் பெரும் விளைச்சலும் அறுவடையும் எகிப்தைக் கொழிக்கச் செய்தன. அதேபோல் அடுத்து வந்த ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சத்தைக் கூட்டி வந்தன. எகிப்தை மட்டுமல்லாது எகிப்தைச் சுற்றியிருந்த பல நாடுகளையும் பஞ்சம் தாக்கியது. அதில் யோசேப்பின் தந்தையாகிய யாக்கோபு எனும் இஸ்ரவேல் வசித்து வந்த கானான் தேசமும் தப்பவில்லை. தனது செல்ல மகன் யோசேப்புவைக் கொடிய மிருகம் கொன்றுவிட்டதாகக் கூறிய மகன்களின் கூற்றை நம்பிய யாக்கோபு ஒன்பது ஆண்டுகள் ஆகியும் யோசேப்புவை மறக்க முடியாமல் இருந்தார். அதேநேரம் மற்ற 11 மகன்களின் நலன்களுக்காகக் கடவுளின் வழியில் பிறழாமல் வாழ்ந்துவந்தார்.
உணவைத் தேடி ஒரு பயணம்
எகிப்தில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை அறிந்த யாக்கோபு, “ எனதருமைப் பிள்ளைகளே.. நாம் பட்டினியால் செத்து மடிவதை விட எகிப்துக்குப் போய் உணவுப் பொருட்களை வாங்கி வந்து உயிரைக் காத்துக்கொள்ளலாம்” என்றார். அப்பாவின் பேச்சைக் கேட்டு யோசேப்பின் பத்துச் சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள். ஆனால் ராக்கேலுக்குப் பிறந்த பென்யமீனை மட்டும் யாக்கோபு அவர்களோடு அனுப்பவில்லை. யென்மீன் கடைசியாகப் பிறந்தவன். யோசேப்பின் மீது அப்பாவைப் போலவே அதிக பாசம் வைத்திருந்தவன். சிறுவனாக இருக்கும் யென்மீனை அனுப்பினால் அவனுக்கும் ஏதாவது கேடு ஏற்படலாம் என்று யாக்கோபு பயந்தார். எனவே அவனை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு மற்ற பத்து மகன்களையும் தானியம் வாங்கிவர அனுப்பினார்.
அடையாளம் தெரியவில்லை
கானானிலிருந்து எகிப்துக்கு புறப்பட்டுச் சென்ற பெருங்கூட்டத்துடன் பத்துச் சகோதரர்களும் பயணப்பட்டார்கள். பெரும் களைப்பு மேலிட எகிப்தை அடைந்து தானியங்கள் விற்கப்படும் களஞ்சியத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கம்பீரமான அரியணையில் ஆளுநருக்கு உரிய அரச உடையில் யோசேப்பு அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக வந்து நின்ற யோசேப்பின் சகோதரர்கள் பத்து பேரும் அவரைக் குனிந்து வணங்கி நின்றனர். “என்னை நீங்கள் வணங்குவதுபோல் நான் கனவு கண்டேன்” என்று கூறியது அவர் நினைவுக்கு வந்தது. காரணம் இப்போது யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அவர்களால் யோசேப்புவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
தனது சகோதரர்கள் முன்புபோலவே மனம் திருந்தாதவர்களாகவும் பொறாமைக்காரர்களாகவும் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அவர்களைத் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிக்கொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார். “ நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கோபமான தொனியில் கேட்டார். அவர்கள், “ நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர். ஆனால் யோசேப்பு “ இல்லை; நீங்கள் கானானிலிருந்து வந்திருக்கும் உளவாளிகள்போல் இருக்கிறீர்கள். எங்கள் தேசத்தில் என்ன குறை இருக்கிறதென்பதை உளவறிய வந்திருக்கிறீர்கள்” என்றார்.
ஆளுநராகிய யோசப்பு இப்படிக் கூறியதும் பத்துச் சகோதரர்களும் பதறிப்போனார்கள். ஏனெனில் அந்நாட்களில் உளவாளிக்கு விசாரணை ஏதுமற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டது. “ இல்லை, நாங்கள் உளவாளிகள் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள். யாருக்கும் தீங்கு செய்ய நினைப்பவர்கள் அல்ல. நாங்கள் மொத்தம் 12 பேர். ஆனால் ஒரு தம்பி காணாமல் போய்விட்டான். கடைசித் தம்பி, வீட்டில் எங்கள் அப்பாவோடு இருக்கிறான். எங்களை நம்புங்கள் ஐயா” என்று கைகூப்பி நின்றார்கள்.
யோசேப்பு வைத்த பரீட்சை
தன் சகோதரர்கள் இப்போது மாறியிருக்கிறார்கள் என்று யோசேப்பு உணர்ந்துகொண்டாலும் அவர்களை நம்பாததுபோல் நடித்தார். அந்தப் பத்துப் பேரில் தனது அண்ணன் சிமியோனை மட்டும் சிறையில் வைத்துவிட்டு, மற்றவர்கள் வேண்டிய மட்டும் தானியங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்படி அனுமதித்தார். ஆனால் அவர்களிடம் ஒரு நிபந்தனை விதித்தார். “ உங்கள் தானியங்கள் தீர்ந்ததும் நீங்கள் திரும்பி எகிப்துக்கு வரும்போது உங்கள் கடைசித் தம்பியையும் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் உங்கள் அண்ணன் சிமியோனை விடுதலை செய்வேன்” என்றார்.
வேறு வழியின்றி தானியங்களுடன் தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, நடந்த அனைத்தையும் தங்கள் தந்தையிடம் சொன்னார்கள். யாக்கோபு இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். யோசேப்புவை இழந்ததைப் போல் யென்மீனையும் நான் இழக்க வேண்டுமா எனக்கேட்டுக் கலங்கினார். ஆனால் தானியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்துபோனது. எனவே மீண்டும் உணவு வாங்கி வருவதற்காக பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல அனுமதிப்பதைத் தவிர யாக்கோபுவுக்கு வேறு வழியில்லாமல் போனது.