

கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் கற்பகாம்பாளுக்கு 108 பொன்வண்ணத் தாமரை மலர்கள் பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்டு அஷ்டோத்திர பூஜை நடத்தப்பட்டது. இதனை ஏற்பாடு செய்திருந்த திருக்கோயில் நிர்வாகம் தொடர்ந்து செவ்வாய்தோறும் இப்பூஜையைச் செய்ய முடிவு செய்துள்ளது.
திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனா என்ற பூஜையில் பெருமாளுக்குத் தங்கத் தாமரை மலர்களால் பக்தர்கள் பங்கு பெறும் பூஜை செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுவதைக் கேள்விப்பட்டதும் கற்பகாம்பாளுக்கும் இவ்வாறு பூஜை செய்ய பக்தர்கள் ஆர்வம் தெரிவித்தனர். இதையடுத்து நாராயணீயம் பாராயணக் குழுவைச் சேர்ந்த இந்திரா, பிரேமா ஆகியோரின் முயற்சியால், பக்தர்களின் காணிக்கையாக 108 வெள்ளித் தாமரைகள் செய்யப்பட்டு அதற்குத் தங்க முலாம் பூசப்பட்டுத் தயார் செய்யப்பட்டது.
இந்தப் பொன்வண்ணத் தாமரைகளைக் கொண்டு விழாக் காலங்கள் தவிர செவ்வாய்கிழமை தோறும், பக்தர்கள் பங்கேற்கும் வகையில் கற்பகாம்பாளுக்கு `தங்கத் தாமரை அஷ்டோத்திர சத நாமாவளி` என்ற பெயரில் பூஜை செய்யப்படும். இதற்கான கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரசாதமாக மூன்று லட்டுகள், ஒரு ரவிக்கை `பிட்`டுடன் தேங்காய், பழம் வழங்க திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது என இத்திருக்கோயில் செயல் அலுவலரான இணை ஆணையர் த.காவேரி தெரிவித்தார்.