இந்திரன் வழிபட்ட வெள்ளை விநாயகர்

இந்திரன் வழிபட்ட வெள்ளை விநாயகர்
Updated on
1 min read

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில். இந்திரன், அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு, விநாயகரை வணங்க மறந்துவிட்டதால் நேரடியாக வந்து வழிபட்ட இடம் இது என்று கூறப்படுகிறது. கடல் நுரையால் ஆன வெள்ளை விநாயகர் என்பது இதன் சிறப்பம்சம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டிதிதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.

ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஒன்றரை அடி உயரமுள்ள இந்த வெள்ளை விநாயகர் கடல் நுரையால் ஆனதால், எப்போதும் அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டும்தான் உண்டு.

இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்துவருகிறார். இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.

இத்தலம் கும்பகோணம் - தஞ்சை சாலையில் திருவலஞ்சுழியில் அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in