

ஆகஸ்ட் 25 : வாரியார் பிறந்த நாள்
திருமுருக கிருபானந்த வாரியார். இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அழகான தமிழும், தமிழோடு இணைந்த பக்தியும் ஓர் உருவமாக உள்ளத்தில் தோன்றும். திரு செல்வம், முருக அழகு, கிருபா கருணை, ஆனந்தம் - மகிழ்ச்சி, வாரி பொழிபவர்.
இவரது ஆன்மீக சொற்பொழிவில் ஒரு முறை சொன்ன நுட்பமான வாழ்வியல் செய்திகள் அடுத்தமுறை இருக்காது.
சின்னச் சின்னத் துணுக்குகளாக நறுக்குச் செய்திகளை நயமாகச் சொல்லுவார். வீணையில் நல்ல பயிற்சி பெற்ற அவர் சில நேரங்களில் ஸ்வரம் பாடிக் கதை சொல்வார்.
அருமையான தத்துவங்களை அனாயாசமாகப் பேசும் வாரியாரின் முதல் வரிசையில் எப்போதும் சிறுவர், சிறுமியர் அமர்ந்திருப்பார்கள். பஞ்ச பாண்டவர் எத்தனை பேர்? என்று திடீரென்று கேள்வி கேட்பார். சில குழந்தைகள் குதூகலமாக எழுந்து ஐந்து பேர் என்று சொல்லும். சரியான விடை கூறிய சிறுவர்களை உடனே மேடைக்கு அழைத்துப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுப்பார்.
வாரியார் கதை சொல்ல ஊருக்கு வந்தால் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடங்களில் கூப்பிடுவார்கள். மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் சின்னச் சின்னப் பாடல்களையும் கதைகளையும் கூறி மயக்குவார்.
அவர் கூறிய மனதை விட்டு நீங்காத கதைகளில் ஒன்று இது. ஓர் ஊரில் ஒரு பெரிய பணக்காரர். அவரிடம் ஓர் ஏழை வந்தான். தவித்துப்போன அவனுக்குச் சாப்பாடு போட்டார் பணக்காரர். தன்னிடம் இருந்த நிலத்தில் ஒரு ஏக்கர் கொடுத்தார். மாட்டைக் கொடுத்தார். கொஞ்சம் பணமும் கொடுத்தார்.
மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்து பணம் காசு சேர்ந்ததும் சுகம் அனுபவிக்க ஆரம்பித்து அதிலேயே மூழ்கிப் போனான் அந்த ஏழை. தனக்கு நிலமும் பணமும் தந்த பணக்காரனை மறந்தான். அவர் ஆள் அனுப்பியபோதும் எச்சரித்தபோதும், இது என் நிலம் என்று எதிர்த்துப் பேசினான்.
கொஞ்ச காலம் விட்டுப் பிடித்த பணக்காரர், ஓர் ஆளை அனுப்பித் தான் தந்த நிலத்தைப் பறித்து வரச்சொன்னார்.
அவன் சென்று எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு வந்தான்.
இது ஏதோ கதையல்ல. பணக்காரர்தான் எல்லாச் செல்வமும் மிகுந்த இறைவன். ஜீவாத்மாவுக்கு (ஏழைக்கு) பணம், நிலம் என உலக சந்தோஷங்கள் தந்து அனுப்பினான்.
ஆனால் அவன் எல்லாவற்றையும் தனக்குரியதாக நினைத்துக்கொண்டான். இறைவனை மறந்தான்.
கடைசியில் வந்த வலியவன் யார் தெரியுமா? காலதேவன்!
காலத்தில் உணர வேண்டிய இறைவனை மறந்து காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்? வாரியார் அடிக்கடி சொல்லும் வாசகம் இது:
“இரை தேடுவதோடு இறையும் தேடு.”