

இயற்கையை வெல்ல முடியாத மனித இனம், இந்த பூமியில் இயற்கையைவிடத் தன்னையே தலைசிறந்த படைப்பாக எண்ணி காலம்தோறும் இறுமாப்பு கொள்கிறது. அதன் உச்சமாக இயற்கைக்கு எதிரான வாழ்க்கைமுறையால், வலியச்சென்று அழிவை தேடிக் கொள்வதுண்டு. அப்புறம் விடுதலைக்காக, கடவுளின் நினைவு வந்து கதறுவான் மனிதன். அப்போதேல்லாம், கடவுள், அவனைக் கைவிட்டதே இல்லை. அதேபோல தன்னிலை உணர்ந்தும் தவறான திசையில் பயணித்த மனிதக் கூட்டங்களை அவர் தண்டிக்கவும் தவறவில்லை. தூய்மையான வாழ்க்கை முறையைச் சொல்லிக்கொடுத்த கடவுளின் கட்டளைகளை அவன் கீழேபோட்டு மிதித்தபோது, அவர் கோபம்கொண்டார். அவரது கோபம் ஆயிரமாயிரம் தாய்மையின் அன்புக்கும் தியாகத்துக்கும் இணையானது. அதனால்தான் ஒரு சாமான்ய மனிதனாக இந்த பூமியில் அவதரிக்க முடிவு செய்தார். பாதை தவறிய மனிதர்களின் பாவச்சுமைகளைத் தானே சுமந்து அவர்களுக்கு மீட்பைக் கொடுக்க மனிதனாகிறார்.
கடவுள் மனிதனாய்ப் பிறக்க முடிவெடுக்கும் முன்பு, இந்த பூமியில் இருந்த சூழல், ஒரு துயர காவியத்தின் தொடக்கம்போன்றது.
சோலைவனம் பாலைவனமாகிப் போனது!
வளமை வறுமையாகிப் போனது!
செழுமை சீரழிந்துப் போனது!
புண்ணியம் பாவமாகிப் போனது!
வாழ்வு சாவாகிப் போனது!
உலகமே வெறுமையாகிப் போனது!
மனித ஜனனம் மரண ஓலமிட்டது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் பாலம் உடைந்து போனது. மனிதன் கத்தினான், கதறினாள், புரண்டான், புலம்பினான், மண்டியிட்டான; மன்றாடினான் அந்த ஆண்டவனை நோக்கி…
ஆண்டவா! சோலைவனம் வேண்டும்…
வளமையும்,
செழுமையும் வேண்டும்…
பொறுமை வேண்டும்…
புண்ணியம் வேண்டும்…
வாழ்வு வேண்டும் என்றான்.
ஆண்டவன் தன் சுவாசக்காற்றை ஊதி நேசத்தை வெளிப்படுத்த தனது சாயலாக அல்லவா மனிதனைப் படைத்தான். தன் படைப்பினை தன் கண்முன் அழிவுற ஆண்டவன் விரும்பவில்லை, அறிவித்தார் இறைவாக்கு சொல்லும் இசையாஸ் வழியாக:
“இதோ! ஒரு கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்றும் பெயர் பெறுவான். அவரோ வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத தந்தை, அமைதியின் மன்னன். அவருடைய ஆட்சியின் வளார்ச்சிக்கும் அமைதியின் பெருக்கிற்கும் முடிவு என்பதே இராது” என்றார். நாட்கள் சென்றன, வாரங்கள் கடந்தன… மாதங்கள் நகர்ந்தன… ஆண்டுகள் உருண்டோடின…
மரண நிழல்படும் நாட்டிற்குப் பேரொளி ஒன்று உதிக்காதா?
மனிதனின் இதயம் மகிழ்ச்சியின் உதயம் காண சூரியன் ஒன்று உதிக்காதா?
கோணலானவையெல்லாம் நேராக்கப்பட…கரடுமுரடானவையெல்லாம் செம்மையாக்கப்பட…செம்மறியின் வேந்தன் ஒருவர் வரமாட்டாரா?
குருடனுக்குப் பார்வை கொடுக்க, செவிடனுக்குச் செவி கொடுக்க, முடவனை நடக்க வைக்க, இறந்தவனை உயிர்த்தெழ வைக்க ஒரு புதுமை நாயகன் வர மாட்டாரா?
உன்னதங்களின் கீதம் பாடி, உலகிற்கு அமைதி கொணர, கடவுளின் மாட்சி வெளிப்படுத்தப்பட வர மாட்டாரா?
எளிய மனத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே! என்று வீர முழக்கமிட ஒருவர் வரமாட்டாரா?
நல்லோர் மேலும் தீயோர் மேலும் அருள் பொழிவு செய்ய அருளாளன் ஒருவர் வரமாட்டாரா?
நானே நல்ல ஆயன், நானே திராட்சைக் கொடி, நானே உயர்ப்பும் உயிரும், நானே வழி என்று வழிகாட்ட ஒருவார் வர மாட்டாரா?
“ அஞ்சாதீர் இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா. உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, உலகிலே அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி உண்டாகுக. வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம்”
முதலும், முடிவும் பிறந்தது…
அகரமும், னகரமும் பிறந்தது…
ஒளியும், வழியும் பிறந்தது…
நேசமும், பாசமும் பிறந்தது…
இறைவன் மனிதனாகவே
கன்னிமாரியாள் வயிற்றிலே
பிறந்து விட்டார் நேசபாலன் இயேசு உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்கின்றார். இயேசு உன்னையும், என்னையும் நேசிக்கிறார்.இயேசு உன்னையும், என்னையும் ஆசீர்வதிக்கிறார். அந்த தெய்வ குழந்தையின் சிரிப்பு இந்த மார்கழியின் மெல்லிய குளிர்போல உலகைத் தழுவட்டும்.
சாமி.ஜா.லோக்கையா, தஞ்சை மறைமாவட்ட குரு