

திருஞான சம்மந்தப் பெருமான் பாடிய கோளறு பதிகத்தில் இரண்டாவது பாடலில் ‘‘என்பொடு, கொம்பொடு, ஆமை இவை மார்பிலங்க எருதேறி’’ என்பார். நானும் இதுவரை பலரிடம், கேட்டு அலுத்துப் போன நிலையில், அதற்கான விடையை ஏகாம்பர நாதனும், அப்பர் பெருமானும் அளித்து அருளினார்கள். நமக்கெல்லாம் நரசிம்மப் பெருமாளின் கோபத்தை, சிவபெருமானார், சரபேஸ்வரராக வந்து அடக்கினார் என்று மட்டுமே தெரியும். ஆனால் அதேபோல் மச்ச, கூர்ம, வராக அவதாரத்திலும் சிவபெருமானே மகாவிஷ்ணுவின் அவதார நோக்கம் நிறைவேறியவுடன் இவரது வேகத்தையும், கோபத்தையும் தனித்தருளியிருக்கிறார் என்பது புரிகிறது.
அதனால்தான் மார்பில் ஆமை ஓடும், பன்றிக் கொம்பும் அலங்கரிக்கின்றன. சாதாரணமாக ஒரு மல்யுத்தப் போட்டி என்றாலே, முடித்து வைக்க ஒரு நடுவர் தேவைதானே! இங்கோ அநியாயத்தை அழிக்க வந்தவர், ஆவேசம் குறையாமல் இருந்தால், அவரது கோபத்தை அடக்க ஒருவர் வர வேண்டி இருக்கிறது. அதுவும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே!
‘ஒவ்வொரு வித மிருகங்களின் உருவத்தோடு வரும்போது அவற்றை மாய்க்கும் உருவெடுத்து வந்து, அதன் ஞாபகமாக அதன் பாகங்களின் ஒன்றை அணிந்துகொண்டு இவர் காட்சி கொடுக்க, அவரோ பள்ளிகொண்டபடியே பார்த்து ரசிக்கிறார். காக்கும் கடவுளல்லவா! தான் ரட்சித்த தருணங்களை இதன் மூலம் கண்டு ரசிக்கின்றார்.
உறக்கத்திலாழ்ந்த பிரம்மன்
ஒரு யுகம் அழிந்து அடுத்த யுகம் ஆரம்பிக்கும் நேரம், ‘மனு’ மகாவிஷ்ணுவைத் தனது கண்ணாரக் கண்டு தரிசனம் செய்ய வேண்டுமென்று, தவம் பண்ணினான். இந்த நேரத்தில் பிரம்மன் களைப்பினால் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார். ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனின் மூக்கிலிருந்து வெளிப்பட்டு வருகிறான். நால்வேதங்களையும், கற்றுணர இதுவே சரியான தருணம் என்று வேதங்களோடு மறைந்துவிடுகிறான். நேரே கடலுக்கடியில் போனவன், கற்றுக் கொண்டதோடு, அவற்றை மறைத்தும் வைத்து விடுகிறான். வேதங்கள் அடுத்த யுகத்திற்குச் செல்ல முடியாத நிலை. பார்த்தார் மஹாவிஷ்ணு, இனி இவனை அழிக்கும் வேலை மட்டுமல்ல, இன்னும் பல வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டியிருக்கிறது என எண்ணினார். முறுவல் செய்தார்.
மறுநாள் காலையில் ‘மனு’ தன் தவத்தை ஆரம்பிக்க நதியில் நீராடுகிறான். தனது பிரார்த்தனையை மனத்தில் இருத்தி இரு கை நிறையத் தண்ணீரை எடுத்துத் தலைக்கு மேலே தூக்கி மந்திரங்களைச் சொன்னபடியே விடுவதற்குத் தயாரானபோது அவனது கைகளில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. தன் தலைக்கு மேலிருந்து குரல் வருவதை உணர்ந்த மனு, கைகளை இறக்கிப் பார்க்கிறான். ஒரு சின்ன மீன் குஞ்சு, ஜொலி ஜொலித்தபடி இருந்தது. அது நீந்தியபடி இவனைப் பார்க்கிறது. மன்னா! மீண்டும் என்னைத் தண்ணீரில் விட்டு விடாதே! என்னைச் சாப்பிட பெரிய மீன்களெல்லாம் காத்திருக்கின்றன. நல்ல வேளையாக உன் கையில் நான் வந்தேன். என்னை நீயே, வைத்துக்கொள்! என்றது. மனுவும் தனது கமண்டலத்தில் அதைப் பாதுகாப்பாய் விட்டு விட்டு மீண்டும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறான். என்னை வேறு பாத்திரத்திற்கு மாற்று! என்னால் மூச்சுவிட முடியவில்லை என்ற குரல் கேட்கத் திரும்பிப் பார்க்கிறான். மீன் விழி பிதுங்கியபடி கமண்டலத்தில் இருந்து வெளியே வருகிறது. ஓடுகிறான் மனு. தனது ஆசிரமம் நுழைந்தவன், அங்கிருந்து ஒரு பெரிய பாத்திரம் எடுத்து மீனை விடுகிறான். கதை தொடர்கிறது.
வளர்ந்துகொண்டே போன மீன்
ஆமாம் மீன் வளர்ந்தபடியே போக- பாத்திரங்களை மாற்றி, மாற்றி இனிமேல் மாற்றப் பாத்திரமில்லை என்ற நிலையில் வளர்ந்துவிட்ட பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு மீண்டும் ஒடுகிறான். நேரே நதியில் விடுகிறான். அது நதியின் அளவிற்கு வளர்ந்து தலையைத் தூக்க, இறைவா என்ற பிரார்த்தனையோடு, அந்தப் பிரம்மாண்டமான மீனைத் தூக்கிப் போய் கடலில் விடுகிறான். அது அங்கும் வளர்ந்தபடியே போக, அப்போதுதான் அவனுக்குப் புரிகிறது! ஆண்டவனே! மகாவிஷ்ணுவல்லவா வந்திருக்கிறார் என வீழ்ந்து வணங்க, பெருமாளும் காட்சி கொடுத்து, “மனுவே நான் சொல்வதை கவனமாகக் கேள்! உலகம் அழிய இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கின்றன.
நீ சமுத்திரத்தின் அந்தப் பக்கம் போய் படகு ஒன்று தயார் பண்ணி அதில் தாவர விதைகள், ஆண், பெண், மிருகங்கள், சப்தரிஷிகள் அவர்களது குடும்பம் மற்றும் மறக்காமல் வாசுகிப் பாம்பையும் ஏற்றிக்கொள்” என்கிறார். அவனும் அதன்படி சமுத்திரத்தின் அந்தப் பக்கம் போக, மகாவிஷ்ணு தனது வேலையை முடித்து வேதங்களை மீட்கிறார். ஆழிப் பேரலைகள் அலைக்களிக்க மனுவோ படகு கட்ட முடியாமல் தவிக்க, கருணைக்கடல் மகாவிஷ்ணு வாசுகி பாம்பை வைத்துக் கட்டு என வழிசொல்கிறார்.
கட்டப்பட்ட படகை, தனது கொம்பு போன்ற முள்ளில் கட்டி இழுத்துப் போய் கரை சேர்கிறார். ஊழிப் பெருங்காலத்தின் உக்கிரத்தை விட, உக்கிரமாகிறார் பெருமாள். எங்கே இன்னமும் இவரைக் காணோம் என அலை பாய்கிறார். பெரிய மீனை விழுங்க மிகப் பெரிய கொக்கு வடிவம் கொண்டு வருகிறார் சிவபெருமான். இருவரும் கண்ணால் பேசிக்கொள்கிறார்கள். தூக்கிப் பிடித்ததும் மகாவிஷ்ணு வைகுந்தம் போய் பள்ளிகொண்டுவிட, பரமன் தனது கூரிய நகத்தால் மீனின் கண்ணை அலேக்காக எடுத்துத் தன் கைவிரல் மோதிரமாகப் போட்டுக்கொள்கிறார். இதனை அப்பர் பெருமான் தனது திருநெய்த்தான பதிகத்தில்
சேலொடும் செருச்செய்யும்
நெய்த்தானனார் என்பதாகப் பாடுகிறார்.
இரட்டைப் புலவர்களோ ஏகாம்பரநாதர் உலாவில், இப்படி பாடுகிறார்கள். ‘வேதமுடன் துண்ணெனவே ஆழிபுகுமம் கோமுகனை செற்றிடு மீன் கண்ணை உகிரால் கழைத்தவர்’ (508வது கண்ணி)
இதில் ஒரு பொருத்தம் உள்ளது. இங்கே காட்டப்பட்ட கொக்குச் சிற்பம் ஏகாம்பரநாதர் கோயில் பதினாறு கால் மண்டபத்தில் தான் இருக்கிறது. மிக அழகிய, அபூர்வ சிற்பம். தேடிப்பார்த்தால், இவர்கள் நாடகத்தின் அடுத்த வேடங்களான கூர்ம, வராக அவதாரத்தில் சிவனார் வந்து முடித்து வைக்கும் காட்சிகளும் கண்ணில் படவே செய்யும்.
நரசிம்ம அவதாரத்தின் அடையாளம்
சம்மந்தப் பெருமானின் பாடலில் உள்ள அந்த ‘என்பு’ அதாவது எலும்பு எது என்று எண்ணியபோது அது நரசிம்மரின் எலும்பாக இருக்க முடியாது. ஆனாலும் அந்த அவதாரத்தின் ஞாபகமாக அவர் ஹிரண்ய கசிபுவின் எலும்பை அணிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்னர் இவனே இராவணனாகப் பிறந்து, பரம சிவபக்தனாக வாழப் போகிறான். அவனுக்கும் ஒரு அருளை வழங்குவதாகிறது. நரசிம்ம அவதாரத்தின் அடையாளமும் ஆகிறது.
எல்லாவற்றிற்கும் மேல், பிரஹலாதன் என்ற அற்புதப் பிறவி அவதரிக்கக் காரணமானவன். மகாவிஷ்ணுவின் நரசிம்மர் என்ற அபூர்வ அவதாரம் நிகழக் காரணமாவன். எல்லாவற்றிக்குமாகச் சேர்த்து இந்த அங்கீகாரமாக இருக்கலாம். இதுவும் அந்த ஏகாம்பரநாதன் அருளில் தோன்றிய எண்ணமே. இவர் அவரின் கோபத்தை, வேகத்தை அடக்குவதும், அவர், இவர் வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளும்போது காப்பதும் வெகு சகஜம். பஸ்மாசுரனிடமிருந்து சிவபெருமானைப் பெருமாள் காத்தது நமக்குத் தெரிந்ததுதானே! இது உண்மையாயின் அதுவும் உண்மையே. எல்லாமுமான பரம்பொருளின் திருவிளையாடலை பேதமின்றிப் பார்த்துப் பரவசப்படுவது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும்.
இந்தச் சிற்பத்தில்கூட நன்கு உற்றுப் பாருங்கள். தனது மச்சினனுக்கு ஏதும் ஆகக் கூடாது என்பதற்காக மழுங்க மொட்டை போட்டது போன்ற அலகு; அசுரர்களை அழிக்கவென்றால் கூரான அலகு. இங்கேயோ எவ்வளவு கவனம்; அந்த மொட்டை அலகில் உள்ள மகாவிஷ்ணு கையைப் பாருங்கள்! என்ன நலம்தானா என்பதுபோல் அபய ஹஸ்தம். இவர் கண்ணும் நலம் என்று பதில் கூறுவது போலவே இருக்கிறது. மற்றைய கை மோதிரமாகப் போட்டுக்கொண்டதை உமையிடம் காண்பிப்பது போலவும் இருக்கிறது.
அடுத்து உள்ளது மச்சாவதராச் சிற்பம் - ஸ்ரீரங்கத்தில் உள்ளது. கண்ணாரக் கண்டு ரசிப்போம். லீலைகளை எண்ணி எண்ணி மகிழ்வோம்.
(சிற்பங்கள் பேசும்…)
ஓவியர் பத்மவாசன்