Published : 23 Jun 2016 12:06 PM
Last Updated : 23 Jun 2016 12:06 PM

சமணம்: பலிபீடத்தில் வந்த சிரிப்பு

மாரிதத்தன் எனும் அரசன் ஓதயநாட்டை ஆண்டு வந்தான். இராசமாபுரம் அதன் தலைநகரம். ஒரு நாள் சண்டமாரிதேவி என்கிற கோயிலுக்கு அரசன் மக்களுடன் திருவிழாவுக்குச் சென்றான். கோயிலில் பலியிட மக்கள் ஆடு, மாடு, எருமை, கோழி, மயில் என ஏராளமான உயிரினங்களைக் கொண்டு வந்தனர்.

அரசன் தன் மகத்துவத்துக்கேற்ப மனிதனைப் பலிகொடுக்கும் நரபலியைத் தர எண்ணினான். அதனால் தன் தளபதி சண்டகருமனிடம் மிக அழகிய ஆண், பெண் இருவரை அழைத்துவரச் சொன்னான்.

அப்பொழுது சுதத்தாசாரியர் என்கிற சமணத் துறவி தலைமையில் ஐநூறு துறவிகள் இராஜமாபுரத்து வெளியே ஒரு சோலையில் தங்கியிருந்தனர். அத்துறவிகளில் அபயருசி, அபயமதி எனும் அண்ணனும் தங்கையும் இருந்தனர். இருவரும் கடும் விரதங்களை ஏற்பவர்கள். அவர்கள் நீண்ட பயணத்தால் களைத்திருந்தனர். எனவே அவர்கள் நகரில் சென்று ஆகாரம் ஏற்றுச் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் சண்டகருமனின் கண்களில் பட்டனர். அவர்களின் அழகையும் இளமையையும் கண்ட அவன் மனமிரங்கினாலும் அவ்விருவரையும் அரசனின் ஆணைப்படி பலியிட இழுத்துச் சென்றான்.

பலிபீடத்திலும் சாந்தம்

கோயிலில் இருந்த மக்கள், நாட்டு நலனுக்காக இருவரையும் பிரார்த்திக்க வேண்டினார்கள். இளந்துறவிகள் புன்னகையுடன் அரசனுக்கு ஆசி வழங்கி, கொடும் பலி வழக்கத்தை ஒழித்து ஆனந்தமான அகிம்சை அறத்தைப் போற்றி அறத்தின் வழியில் வாழ்வதற்கான போதனைகளை அருளினர். சாந்தப் பொலிவாய் சஞ்சலமின்றி மரணவாயிலில் இருந்து இன்மொழி வழங்குவோரைக் கண்ட அரசன் சஞ்சலமடைந்தான். நீட்டப்பட்ட வாள் உறையினுள் சென்றது.

மன்னன் மாரிதத்தன் அந்த அண்ணன், தங்கையிடம், “உங்கள் புன்னகையின் பொருள் என்ன?”என்று கேட்டான். ஒரு பிறவியில் யசோதரன் எனப்பட்ட அபயருசி, “ஒருவருக்கு நேர்வதெல்லாம் அவர்களின் முன் வினப்பயனே. அதனின்று எவரும் தப்பமுடியாது. நாங்களும் அவ்வாறே.

இன்றைய நிகழ்வுகளுக்கு எல்லாம், ஏழு பிறவிகளுக்கு முன் நாங்கள் புரிந்த மாக்கோழி பலிதான் காரணம். அப்பாவத்தால் ஏழு பிறவிகளிலும் கீழான விலங்குப் பிறவிகளாகப் பிறந்தோம். இன்னல்களை அடைந்தோம்.ஏதோ சிறு புண்ணியத்தால் மானிடப் பிறவி எடுத்தோம். உயிர்பலி பாவம் என்பதால், நாங்கள் பலி தந்தது அரிசி மாவினாலான மாக்கோழிதான். உயிருள்ள கோழி அல்ல.

அதற்கே பல பிறவிகளாகப் பாவங்களை அனுபவித்தோம். பலியிடும் எண்ணமேதான் எங்கள் துன்பத்திற்கு காரணம். ஆகவே நரபலி இடப்போகும் உன் கதி என்னாகுமோ என்று நாங்கள் சிரித்தோம்” என்றான் அபயருசி.

மாரிதத்தன் இவற்றைக் கேட்டபின் மனம் மாறி அகிம்சை நெறியின் மாண்பையும், கொல்லாமையின் உயர்வையும் உணர்ந்தான். அதனால் பலியிடலை நிறுத்தினான். நாட்டில் யாரும் எந்தவிதமான உயிர்பலியையும் தரக் கூடாது என்று தடைசெய்து கட்டளையிட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x