

உலகாளும் சிவபெருமானால், ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். நாயன்மார்களில் காலத்தால் மூத்தவரும் இவரே. “எந்தையே, செறிந்த இரவில் நீ எரி பாய்ந்து ஆடும் இடத்தை எமக்கொரு நாள் காட்ட மாட்டயா? இந்தப் பேராசையை என்னால் தவிர்க்க முடியவில்லையே” என்று சிவனின் தாண்டவத்தைக் காணும் பேரவாவைச் சொன்னவர்.
இளமைப்பருவம்
சோழநாட்டுத் திருப்பதியான காரைக்கால் என்கிற கடற்கரைப் பட்டினத்தில் பெருவணிகன் தனதத்தனின் மகளாகப் பிறந்தார். பொங்கிய பேரழகு மிக்க குழந்தையாக இருந்ததால் அம்மையாருக்குப் ‘புனிதவதி’ என்று பெயரிட்டனர். தோழியருடன் ஓடியாடி விளையாடுகிற பருவம் முதலே பாம்பணிந்த பரமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தார். எப்போதும் இறைவனின் திருநாமத்தையே உச்சரித்துக்கொண்டிருப்பார்.
இல்லற வாழ்க்கை
அம்மையாருக்கு ஒவ்வொரு நாளும் இறைவனின் திருப்பாதங்களை நினைத்தபடியேதான் விடியும், முடியும். அவர் பருவ மங்கையாக வளர்ந்த நின்றபோது, மணம் முடிக்க அவருடைய பெற்றோர் விரும்பினர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரம தத்தன் என்கிற வணிகருடன் அம்மையாருக்குத் திருமணம் நிச்சயமானது. திருமண ஓலை எழுதப்பட்டு, மங்கல நாளும் நெருங்கியது.
சுற்றத்தார் மகிழ திருமணமும் இனிதே நடந்தேறியது. ஒரே மகள் என்பதால் திருமணம் முடிந்த பிறகு அவரை நாகப்பட்டினத்துக்கு அனுப்பாமல் காரைக்காலிலேயே தனி வீடு பார்த்து வைத்தார்கள். அம்மையாரும் மனையறத்துக்கு உடைய நற்குணங்களோடு இல்லறம் நடத்தி வந்தார்.
அடியாருக்கு விருந்து
அப்போதும் அடியாருக்கு உபசாரம் செய்வதைக் கைவிடாமல் செய்துவந்தார். அம்மையாரின் கணவர் பரமதத்தன் ஒரு நாள் வழக்கம் போல கடைக்குச் சென்றார். அங்கே அவரைப் பார்க்க வந்தவர்கள் அவருக்கு இரண்டு மாங்கனிகளைத் தந்தனர். பரமதத்தனும் அவற்றைப் பணியாள் ஒருவரிடம் கொடுத்துத் தன் வீட்டில் சேர்ப்பிக்குமாறு சொன்னார். அம்மையாரும் அந்த மாங்கனிகளைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது வீட்டுக்கு ஒரு சிவனடியார் வருகை புரிந்தார். அவரை வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். வீட்டில் அடிசில் மட்டுமே தயாராக இருந்தது. அதற்குக் கறியமுது செய்யப்படவில்லை. அதனால் அவருடைய இலையில் அடிசிலை இட்டார். கறியமுதுக்குப் பதிலாகத் தன் கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை வைத்தார். அடியாரும் பசியாறிக் கிளம்பினார்.
இன்னொரு மாங்கனி எங்கே?
பரமதத்தன் உணவுக்காக வீடு திரும்பினார். அம்மையார் தன் கணவருடைய இலையில் மீதி இருந்த ஒரு மாங்கனியை இட்டார். அந்த மாங்கனியைச் சுவைத்து மகிழ்ந்த பரமதத்தன், அம்மையாரிடம் இன்னொரு கனியைக் கேட்டார். கணவரிடம் கனி இல்லை என்று எப்படிச் சொல்வது என்று தவித்த அம்மையார்
அவ்விடம் விட்டு அகன்றார். தான் இப்படி தவிப்பதுதான் இறைவனின் திருவுளம் என்றால் அப்படியே ஆகட்டும் என்று இறைவனின் திருவடிகளையே நினைந்தபடி நின்றார். அப்போது அவருடைய கைகளில் ஒரு அதி மதுர மாங்கனி வந்தது. இறைவனின் திருச்செயலை நினைத்து மகிழ்ந்த அம்மையாரும் அந்தக் கனியைக் கணவருக்கு இட்டார்.
யார் கொடுத்தது?
அம்மையார் கொடுத்த கனியைச் சுவைத்த பரமதத்தன், அது தான் கொடுத்து அனுப்பிய கனி இல்லை என்பதை உணர்ந்தார். உடனே அம்மையாரிடம் இது யார் கொடுத்த கனி என்று கேட்டார். அம்மையாரும் நடந்த நிகழ்வுகளைச் சொன்னார். அப்போதும் பரமத்ததனுக்கு ஐயம் தீரவில்லை.
இன்னொரு கனி வரவழைத்துத் தா என்று கேட்டார். உடனே அவ்விடம் விட்டு அகன்றவர், இறைவனிடம் வேண்டினார். “எனக்கு மாங்கனி அளித்து அருளாவிட்டால் நான் புகன்றது பொய்யுரையாகிவிடுமே” என்று மனமுருகி வேண்டினார். உடனே அம்மையாரின் கைகளில் மீண்டும் ஒரு மாங்கனி வந்தது. அதை பரமதத்ததுக்குக் கொடுத்தார். பரமதத்தன் மாங்கனியைக் கையில் வாங்கிய கணமே அது மறைந்து போனது.
தெய்வப்பெண்
கனி மறைந்ததுமே அம்மையார் சாதாரணப் பெண் அல்ல என்பதைப் பரமதத்தன் புரிந்துகொண்டார். அம்மையாரை விட்டுப் பிரிந்து வாழ்வதே நல்லது என்று நினைத்தார். சுற்றத்தாரிடம் வணிக நோக்குடன் செல்வதாகப் பொய்யுரைத்துச் சென்றார். வணிகத்தில் ஈட்டிய பொருளுடன் காரைக்கால் திரும்பாமல் பரமதத்தன், பாண்டிய நாட்டுக்குச் சென்று அங்கே வாழ்ந்துவந்தார்.
அவரைப் பார்த்த சிலர், அம்மையாரிடம் அந்தச் செய்தியைக் கூறினார்கள். உண்மை அறிந்த அம்மையாரின் சுற்றத்தார், அவரை அழகிய பல்லக்கில் அமரச் செய்து பாண்டிய நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். அம்மையார் வருகிற செய்தி அறிந்ததுமே பரமதத்தன் தன் மனைவி, மக்களுடன் வெளியே வந்தார். அம்மையாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார்.
பேய் உருவம் வேண்டுதல்
கணவர் தன் காலில் விழுந்ததுமே அம்மையார் திகைப்புற்றார். பரமதத்தனோ, “இவர் மானிடப் பிறவி அல்ல. நற்பெரும் தெய்வம்” என்று உரைத்தார். அம்மையாரும் இறைவனிடம், இல்லற வாழ்வுக்காகத் தாங்கிய வனப்பு நீங்கி, பேய் உருவம் வேண்டி நின்றார். அவர் வேண்டியது மக்களை அச்சுறுத்தும் பேய் வடிவம் அல்ல. உடம்பில் தலை விடுத்து, எலும்புக்கூடு மட்டுமே தாங்கிய உருவம்.
காற்று போல விரைந்து செல்வதும் ஒளிபெற்றதுமான மாயா உருவம். உடனே அம்மையார் தன் உடம்பின் தசையும் அழகும் நீங்கி, எலும்புக்கூட்டையே உடலாகப் பெற்றார்.
கயிலை காணும் ஆவல்
சிவபெருமான் மீது ‘அற்புதத் திருவந்தாதி’யையும் ‘இரட்டை மணிமாலை’யையும் பாடினார். திரிபுரம் எரித்த சிவபெருமான் எழுந்தருளிய கயிலாய மலையைக் காண விரும்பினார். அம்மையார் பேய் வடிவம் பெற்ற பேற்றினால் மனத்தினும் விரைந்து சென்று கயிலையை அடைந்தார். இறைவன் வீற்றிருக்கும் தலம் என்பதால் கயிலையில் காலால் நடக்காமல் தலையால் நடந்தார். இப்படியேதான் திருவாலங்காட்டிலும் தலையால் நடந்தார்.
அம்மையார் சிவனை நெருங்கி வந்ததும், ‘அம்மையே’ என்று அழைத்தார். அம்மையாரும் ‘அப்பா’ என்று அழைத்து அவர் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கினார். எப்போதும் நீர் ஆடும் போது நின் திருவடிகளின் கீழ் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்று வரம் வேண்டிப்பெற்றார்.