

பொதுவாக ஐயப்ப தரிசனம் என்றால் சபரிமலையும் மகர ஜோதியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், ஐயப்பன் குடிகொண்டுள்ள பாரம்பரியமான ஆலயங்கள் தமிழக, கேரள எல்லையில் இருக்கின்றன. அவற்றையும் தரிசித்து ஐயப்பன் அருளைப் பெறலாம்.
அச்சன் கோயில்
சபரிமலை கோயிலுக்கு அடுத்து புகழ்பெற்றது அச்சன் கோயில். அரச கோலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கும் அச்சன் கோயில், தமிழக கேரள எல்லையில் உள்ள செங்கோட்டையில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது.
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட அச்சன் கோயிலில் மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோயிலுக்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தைப் பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஆரியங்காவு மாப்பிள்ளை ஐயப்பன்
செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் ஆரியங்காவு தலத்தில், சபரி மலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா இல்லறவாசியாக எழுந்தருளியிருக்கிறார். இங்கு சாஸ்தா புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாதேவியே இங்கு சாஸ்தாவுடன் ஐக்கியமானார்.
புஷ்கலாதேவி - சாஸ்தா திருமண விழா ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடைபெறுகிறது. மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால், மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் சாஸ்தாவுக்கு உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது ஐதீகம்.
ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மாம்பழத் துறை உள்ளது. புஷ்கலையை மணம் புரிந்த சாஸ்தா, தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படிச் செய்தார். இங்கு புஷ்கலாதேவி பகவதி அம்மனாக பத்ரகாளி வடிவத்தில் அருளுகிறாள்.
குளத்துப்புழை குட்டி சாஸ்தா
செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள குளத்துப்புழை என்ற இடத்தில் உள்ள கோயிலில் குழந்தை வடிவில் காட்சி தருகிறார் சாஸ்தா. கருவறை நுழைவாயில் சிறுவர்கள் நுழையும் அளவே உள்ளது.
விஜயதசமி தினத்தன்று, பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படும் வித்யாரம்பம் என்னும் நிகழ்ச்சி இங்கு நடைபெறும். குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் இங்கே தீர்வதாக நம்பிக்கை நிலவுகிறது.