Last Updated : 27 Mar, 2014 09:07 AM

 

Published : 27 Mar 2014 09:07 AM
Last Updated : 27 Mar 2014 09:07 AM

கல்லிலே மீண்டெழும் ஸ்ரீநிதீஸ்வரர்

மலை கிராமங்களில் இருந்து பெரிது பெரிதாக உடைத்து எடுத்து வரப்பட்ட கருங்கல் பாறைகள் ஒரு புறம். ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்ட கல் தச்சர்களுக்கான பட்டறை மறு புறம். பாளம்பாளமாக அறுக்கப்பட்ட கல் தூண்களில் சிற்பம் வடிக்கும் சிற்பிகள். அருகே சாரக்கட்டைகளின் ஊடாக சிற்ப வேலைப்பாடுகளுடன் வளர்ந்து வரும் கற்றளி.. விடாது கேட்டுக் கொண்டிருக்கும் சிற்பிகளின் உளிஓசை.. இந்த காட்சி, ஊர்தோறும் ஆலயங்கள் கட்டிய பண்டைய மன்னர்கள் காலத்திற்கே நம்மை இட்டுச்செல்கிறது. ‘முழுவதும் கருங்கற்களாலேயே கட்டப்படும் கற்றளியா..? அதுவும் இந்த காலத்திலா.?’ ஆச்சரியப்பட வைக்கிறதா...? வாருங்கள்! திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்திற்கு...

அன்னம்புத்தூர்! பெயரே ஊரின் பழைமையைச் சொல்கிறது. அந்த அழகிய கிராமத்தின் பசுமையான வயல்வெளிகளுக்கு மேற்கில் ஓர் ஏரிக்கரை. அதனையொட்டி மிகப்பெரிய மண்மேடில் மண்டிக் கிடக்கும் செடிகொடிகளுக்கு மத்தியில் வெட்டவெளியில் தன்னந்தனியே ஒரு பிரம்மாண்ட சிவலிங்கம். (சுமார் 5 அடி உயரம்) கவனிப்பாரின்றி வெய்யிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருந்தது. உள்ளம் கசிந்த ஊர்ப் பெரியவர்கள் சிலர், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளை அப்புறபடுத்தி தினமும் பூசித்துவந்தனர்.. வழிபாடுகள் தொடர மெள்ள மெள்ள பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. வழிபாட்டுக்கு வசதியாக மண்மேட்டை இன்னும் துப்புரவாக்கி விரிவுபடுத்தலாம் என்று அங்கிருந்த கற்களையும் முட்களையும் உடைந்த கல் தூண்களையும் அகற்றினர். அப்படி அப்புறப்படுத்திய சிதிலமடைந்த சில கல் துண்டுகளில் பழங்கால வரிவடிவில் கல்வெட்டுக்கள் இருப்பதைக் கண்ட விவரமறிந்த பக்தர் ஒருவர் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமூட்டிய தகவல்கள்

அங்கு வந்த இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டாய்வாளர்கள் (டாக்டர் ராஜவேலு, ரகு, அழகேசன்) சிவலிங்கம் இருக்கும் மண்மேட்டையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மிகவும் சிதிலமடைந்து உடைந்து போன கல்வெட்டுக்களைப் படியெடுத்துச் சென்றனர். முடிவில் அவர்கள் சொன்ன தகவல் அன்னம்புத்தூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிட்டானத்தின் குமுதவரியில் இருந்த இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் சுமார் கி.பி1008ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்த கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் (பல்லவர்களை வென்று கைப்பற்றிய தொண்டை நாடு) கிடங்கில் நாட்டைச் (தற்போதைய திண்டிவனம்) சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள நிதீஸ்வரர் ஆலய வழிபாட்டிற்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் நிதீஸ்வரர் என்பது தெளிவாகிறது.

மேலும் மண்மேட்டின் கீழ்ப்பகுதியில் காணப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு பல்லவர் காலக் கட்டிடக் கலையைக் காட்டுகிறது. கிடைக்கப்பட்ட விநாயகரின் சிற்பமும் பல்லவர்கள் காலத்தைச் சார்ந்ததே. ஆக சோழர்கள் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் பல்லவர்களை வென்று பின்னர் வந்த சோழர் ஆட்சியில் முதலாம் ராஜராஜ சோழன் இந்த சிவாலயத்தின் மீது பக்தி கொண்டு ஆலயத்தை புணரமைத்து திருப்பணிகள் செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில். முதலாம் ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்த கோயில். நிதிகளுக்கு அதிபதியான குபேரன் இங்கு வந்து ஈசனை வழிபட்டு அட்டநிதிகளையும் பெற்ற கோயில். எனவே இங்குள்ள மூலவர் நிதீஸ்வரர் என்ற திருநாமம் பெறுகிறார். பொய் சொன்ன பிரம்மனின் பாவத்தைப் போக்கி, அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதிய மகேஸ்வரன் அருளும் கோயில். (பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடிச் சென்று தோற்றுப்போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னதால் பெற்ற பாவத்தை தீர்க்க இங்கு வந்து ஈசனை வழிபட்டதாகவும் அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் பெயர்கொண்ட பிரம்மனின் பாவத்தை போக்கிய தலம் அமைந்த இடமாதலால் இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.)

தொல்லியல் துறை ஆய்வுகளின் இந்தச் செய்தி, அன்னம்புத்தூர் மக்களிடம் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இத்தனைச் சிறப்புகளை பெற்ற இந்த ஈசனை இப்படி வெட்டவெளியிலா இருக்கவைப்பது? மளமளவென செயலில் இறங்கினர் ஊர்மக்கள். மண்மேட்டில் இருந்த நிதீஸ்வரரை முதலில் அருகில் குடிசையில் அமர்த்தினர். உடனடியாக ஒரு திருப்பணிக் குழுவை அமைத்து ஆலயத்தை மீளக்கட்டுமானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

‘அந்த ஈசனே நமக்கு துணை நிற்பான்’ என்று அந்த மகேஸ்வரன் மேல் பாரத்தை போட்டுவிட்டு கருங்கல் கற்றளியாகவே ஆலயம் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஊர் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், விவரமறிந்து நிதீஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் என ஓவ்வொருவரும் மனமுவந்து அளிக்கும் பொருளுதவியால் ஆலயம் இன்று கனகம்பீரமான கற்றளியாக எழுந்து வருவதாக மனம் உருகிச் சொல்கிறார்கள் திருப்பணிக்குழு அன்பர்கள்.

இத்தனைத் தொன்மையும் புராதனச் சிறப்பும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட இந்தத் தலத்தின் மகிமையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள் அன்னம்புத்தூர் கிராம மக்கள். புதிதாக ஆலயங்கள் கட்டுவதைவிட நமது நாட்டில் வழிபாடில்லாமல் எண்ணற்ற ஆலயங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அவற்றை மறுகட்டுமானம் செய்து வழிபாட்டிற்கு திறந்து வைப்பதே மிகப் பெரிய புண்ணிய திருப்பணி என்றார் காஞ்சி மகா பெரியவர். அவரின் இந்தக் கருத்துக்களை தெரிந்தோ, தெரியாமலோ நிறைவேற்றி வருகிறார்கள் இவ்வூர்மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x