Last Updated : 27 Feb, 2014 12:00 AM

 

Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

முஹ்யித்தீன்அப்துல் காதிர் ஜீலானி: மெய்நிலை கண்ட ஞானி

முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாடப்படும் உன்னத மகான். இஸ்லாமிய உலகின் அன்பையும், மதிப்பையும், புகழையும், பாடல்களையும், போற்றுதல்களையும் பெற்றவர். முஸ்லிம் அல்லாதவர்களும் அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்திந்தனர். ‘காதிரிய்யா தர்க்கா’என்ற ஆத்மஞானப் பாட்டை மூலம் அவர்கள் எத்தனையோ ஞானகுரு மகான்களை ஆயத்தம் செய்துதந்த மாபெரும் மகான்.

உபந்நியாசங்களால் பல லட்சக்கணக்கான மக்களை நேர்வழிப்படுத்தி சன்மார்க்கத்திற்குப் புத்துயிர் தந்த ‘முஹியித்தீன்’ஆனார். மார்க்க அறிவையெல்லாம் முறைப்படிக் கற்றுத் தேர்ந்த பின்னரும் பயங்கரமான காடுகளில் இருபத்து ஐந்து ஆண்டுகள் கடுந்தவமியற்றி தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்ட மாபெரும் தவசீலர் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி .

காலநிலை

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் இயற்பெயர், அப்துல் காதிர் ஜீலானி. இவர் தோன்றிய காலத்தில் இஸ்லாம் மிகப் பலங்குன்றிய நிலைலேயே இருந்தது. 11ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின், எகிப்து, பாக்தாத் நகரங்களில் வீதிக்கொரு பள்ளிவாசலும், பள்ளிவாசல்தோறும் கல்வி போதிக்கும் மதரஸாக்களும் நிறைந்திருந்தன. இம்மூன்று நகரங்களிலும் உலகப் புகழ்பெற்ற மூன்று சர்வகலா சாலைகளே மிளிர்ந்து கொண் டிருந்தன. குறிப்பாகப் பாக்தாத் நகரம் உலகின் அற்புதமாய் விளங்கியது. தலைப்பாகை தரித்த எண்ணற்ற மார்க்க ஞானியர் அங்கே இருந்தனர்.

ஆனால் ஆட்சியாளர்களுக்கு அடிவருடிப் பிழைப்பதில் அறிஞர்கள் பலர் தம்மை அர்ப்பணிக்கலாயினர். ஆட்சியாளர்களோ திருமறை யையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் புறக்கணித்து ஒதுக்கலாயினர்.

பிறப்பு

ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் முதல் பிறையன்று (கி.பி. 1077-1078) அப்துல் காதிர், ஜீலான் நகரை ஒட்டிய நீப் எனும் கிராமத்தில பிறந்தார். தந்தையின் பெயர், ஸெய்யிது அபூ ஸாலிஹ், அன்னையர் பெயர் உம்முல் கைர். கல்வி கற்பதற்காக பாக்தாத் செல்லப் பெற்றோரிடம் அனுமதி பெற்றார் ஜிலானி. சன்மார்க்க ஞானப் பாதையில் செல்லும் தன் மகனுக்கு 40 தீனார்கள் கொடுத்தார். எக்காரணம் கொண்டும் பொய் உரைக்கக் கூடாது என்ற வாக்குறுதி பெற்றுக்கொண்டு மகனை அனுப்பினார்.

பிரயாணத்தின் வழியில் கொள்ளையர் கூட்டம் ஒன்று வழிமறித்தது. கொள்ளையர் களில் ஒருவன், ஒரு புறமாக நின்ற அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களிடம் ஒரு பேச்சுக்காக, அவரிடம் எதுவுமே இருக்காது என்ற நம்பிக்கையோடு, “நீ என்ன வைத்திருக்கிறாய்?” என வினவினான். “என்னிடம் நாற்பது தீனார்கள் இருக்கின்றன” என்று பதில் வந்தது. ஏழ்மை யான உடையுடனிருந்த அப்துல் காதிரிடம் அத்தனை பொற்காசுகள் இருக்காது என்ற நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் சென்றான் கொள்ளையன். கொள்ளை யடிக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தனது தலைவனிடம் அவன் அப்துல் காதிர் ஜீலானி சொன்னதைத் தெரிவித்தான். அத்தலைவன் அப்துல் காதிரை அழைத்து, “எங்கே அப்பணம்?” என்று வினவ, சட்டைப் பையில் உள்ளது எனச் சுட்டிக் காட்டினார் அப்துல் காதிர். உடனே ஒரு கொள்ளையன், சட்டப் பையில் இருந்து நாற்பது பொற்காசுகளை எடுத்துத் தன் தலைவனிடம் கொடுத்தான்.

அந்தத் தலைவனுக்கு ஒரே வியப்பு. தன்னிடம் பணம் இருக்கிறது எனக் கூறி, அதை இழக்க ஒரு வாலிபன் துணிவது அவன் அதுவரை காணாத ஒரு புதிய காட்சியாய் இருந்தது. இத்தனை அபாயமான நிலையிலும், உண்மையைக் கூறுவதேன் என்று அத்தலைவன் கேட்டான்.

“எவ்வித நிலையிலும் உண்மையையே கூறுவதாக எனது தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்; ஞானம் தேடிச் செல்லும் பாதையில் அந்த வாக்கை நான் காப்பதுதானே முக்கியம்” என்று அப்துல் காதிர் ஜீலானி பதிலளித்தார்.

அப்துல் காதிரின் பதிலைக் கேட்ட கொள்ளைத் தலைவன் மனத்தில் பயபக்தி உண்டாகி விட்டது. அவனுடைய ஈரமில்லா நெஞ்சிலே அன்புப் பேரூற்று பெருக்கெடுத்து ஓடியது. அக்கணமே அவன் மனத்தில் பெரும் மாறுதல் உண்டானது. “அன்னையின் ஒரு ஆணையை மீறாது நீர் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டீர்; யானோ கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு, ஆண்டவனது எத்தனையோ ஆணைகளை மீறி நடந்துவருகிறேன். இனி எனக்கு இந்த வாழ்வு வேண்டாம்” என்று கூறி அவன் கொள்ளையிட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்தான். அவனது கூட்டாளிகளும் மனந்திருந்தினர்.

மறைவு

நாற்பது ஆண்டுகள் சன்மார்க்கப் பிரசாரம் புரிந்த அப்துல் காதிர் ஜீலானி தன் பூத உடலை விட்டு மறையும் நேரம் வந்தது. ஹிஜ் 561இல் உடல் நலம் குன்றியது.

இறுதிக் கணம் வந்ததும் மூன்று முறை அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ் என்று அழைத்தார்கள். 91வது வயதில், பிறை பதினொன்றில்

(கி.பி. 1166இல்) விண்ணுலகம் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x