

மிதுனம்
மிருகசீரிஷம் 3,4ம் பாதம் 70% திருவாதிரை 65% புனர்பூசம்1,2,3-ம் பாதம் 68%
இளகிய மனசு உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்துக் கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் முடக்கிப் போட்ட குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சகிப்புத் தன்மையையும், விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் மூளைபலத்தால் முன்னேறுவீர்கள். பழையப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதை வாங்குவீர்கள்.
குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகளுக்கு நிச்சயமாகும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் பயனமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வராத பணம் கைக்கு வரும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வீண் விரயம், தயக்கம், தடுமாற்றம், சகோதர வகையில் சச்சரவு, தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்புகள், முன்கோபம் வந்துச் செல்லும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். ரத்த அழுத்தம் அதிகமாகும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அவருக்கு முழங்கால் வலி, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் சற்று தாமதமாகும்.
இந்த குருப்பெயர்ச்சி நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், எதிர்நீச்சல் போட வைக்கும்.
கடகம்.
புனர்பூசம் 4-ம் பாதம் 73% பூசம் 70% ஆயில்யம் 85%
சொல்வன்மையும், செயல்திறனும் கொண்ட வர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை மூன்றாம் வீட்டில் மறைவதால் எதையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. என்றாலும் உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வரும். என்றாலும் அன்பும், அன்யோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தையாரின் நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த மோதல்களும் விலகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் 3-ம் வீட்டில் குரு தொடர்வதால் எடுத்த வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். தினமும் எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.
ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால் இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவது, மாற்றுவது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள்.
இந்த குரு மாற்றம் சோர்வு, சலிப்பு, அலைச்சல், வேலைச்சுமையை தந்தாலும், அனுசரித்துப் போகும் குணத்தால் ஓரளவு வெற்றி பெற வைக்கும்.