அடிப்படையான பிரமாணங்கள் எவை?

அடிப்படையான பிரமாணங்கள் எவை?
Updated on
1 min read

பிரமாணங்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தை அறிவதற்கான வழிமுறைகள் எனப் பொருள். பிரபஞ்சத்தை, அதன் அம்சங்களை நாம் சரியாக அறிந்தால் தான் அவற்றுக்கு அடிப்படையான உண்மைகளை அறிய முடியும். எனவே இந்தியத் தத்துவ மரபில் உள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளுமே அறிதல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக் கின்றன. இந்த அறிதல் முறைகள் ஆறு வகைப்படும்.

பிரத்தியட்சம் - பார்வை முதலான புலன்கள் மூலம் அறிவது.

அனுமானம் அல்லது யூகம்: உய்த்துணர்வு – தர்க்க அறிவின் மூலம், ஊகித்து / அலசி அறிவது (புகை இருந்தால் நெருப்பு இருக்கும். இடி இடித்தால் மழை பொழியும்…).

அனுபவ வாக்கு: அறிந்தவர் / அனுபவித்தவர் சொல்வதைக் கேட்பதன் மூலம் அறிவது.

உபமானம்: ஒப்பு நோக்கு. வெவ்வேறு விஷயங்களை ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை அலசிப் புரிந்துகொள்ளுதல்.

அர்த்தாபத்தி: சூழ்நிலையின் அடிப் படையில் மேற்கொள்ளும் அனுமானம். சந்தர்ப்ப சூழ்நிலையை நன்கு அறிந்து அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருதல். புலன்களால் அறிய முடியாத, ஊகிக்க முடியாத விஷயங்களையும் இதன் மூலம் அறிய லாம். துப்பறிதல் அல்லது புலனாய்வு என்பதற்கு இணையானது இது.

அனுபலப்தி: எதிர்மறைச் சான்று. எதிர்மறை நிரூபணம் மூலம் ஒரு உண்மையை அறிதல். அதாவது, ஒரு பானையை இங்கே காண முடியவில்லை என்றால் இங்கே பானை இல்லை என்று பொருள். இப்படி அறியும் முறைக்கு அனுலப்தி என்று பெயர்.

எல்லாத் தத்துவப் பிரிவுகளும் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலான பிரிவுகள் முதல் மூன்றே போதும் என்று நினைக்கின்றன. அனுமானம், அனுபவ வாக்கு ஆகியவற்றிலேயே மற்ற மூன்றும் அடங்குவதாகப் பல தத்துவவாதிகள் கருதுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in