ஆன்மிக இசை: மயிலையில் மாதம் தோறும் கச்சேரி

ஆன்மிக இசை: மயிலையில் மாதம் தோறும் கச்சேரி
Updated on
1 min read

கச்சேரி என்றால் அதை டிசம்பர் மாதம் மட்டும்தான் கேட்க வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் கச்சேரி கேட்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குப் போகலாம். கிரி ஃபைன் ஆர்ட்ஸ் உடன் இணைந்து மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் ‘சன்னிதியில் சங்கீதம்’ என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கச்சேரி மட்டுமல்லாமல் நாட்டியம், கதாகால க்ஷேபம், பஜனைப் பாடல்கள் என்று ஒவ்வொரு மாதமும் ஒரு வடிவம் இடம்பெறுகிறது.

இந்த வருடம் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஏற்பாடாக ‘ஆஷாட ஏகாதசி’யை முன்னிட்டு முதன் முறையாக ப்ரத்யேக ‘பஜன் மேளா’ ஜூலை 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபலமான பஜனை குழுவினர்களால் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உடையலூர் கல்யாணராமன், பாம்பே மணிகண்டன், கல்யாணி மார்கபந்து, மஞ்சப்பரா மோகன் ஆகியோர் குழுவாக பாடல்களைப் பாடினர்.

பல பஜனைப் பாடகரான உடையாளூர் கல்யாணராமன் கூறுகையில், “முதல் முறையாக எனக்கும் எங்கள் குழுவினருக்கும் மயிலை கபாலீஸ்வரர் சன்னிதியில் பாடும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது” என்றார் மகிழ்ச்சியுடன்.

இந்நிகழ்ச்சியின் நோக்கமே பக்திப் பரவசத்தைப் பெருக்குவதும், நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை மக்கள் இலவசமாக கண்டுகளித்து மகிழவும், இக்கலைகளில் ஆர்வமுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் வகையில் மேடை அமைத்து தருவதும்தான் என்று கிரி ஃபைன் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய தகவல்களை ‘girifinearts’ என்ற முகநூல் பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in