

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். சூரியன் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனத்தில் தெளிவு பிறக்கும். கலைஞர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். அதிர்ஷ்டத்தால் ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளும் அரசுப் பணியாளர்களும் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். ராசிநாதன் செவ்வாயும் சனியும் 8-ல் இருப்பதாலும், குரு பலம் குறைந்திருப்பதாலும் பெரிதாக வளர்ச்சிக்கு இடமிருக்காது. கெட்ட தொடர்பை விட்டு விலகுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யலாகாது. தொழிலாளர்கள், விவசாயிகள், உத்தியோகஸ்தர்கள், தொழிலதிபர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 23, 24.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளிலும், பொதுப்பணிகளிலும் ஆர்வம் கூடும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். செய்தொழில் விருத்தி அடையும். பண நடமாட்டம் அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் வரும். சொத்துக்கள் சேரும். தகவல்தொடர்பு பயன்படும். சுபகாரியங்கள் நிகழும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அலைச்சல் வீண் போகாது. மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் ஏற்படும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவி புரிவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டு. சிறு பயணத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். மன உறுதி கூடும். எதிர்ப்புகள் வலுக் குறையும். வழக்கில் அனுகூலமான போக்கு தென்படும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் செழிப்புக் கூடும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். தொலைதூரப் பயணங்களால் லாபம் உண்டு. பொருளாதாரம் சார்ந்த துறையிலிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 8, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். பொருளாதார நிலை உயரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். குரு 3-ல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். அந்நியர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டுகளில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் தன் சொந்த வீடுகளில் இருப்பதால் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பணவரவு கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். என்றாலும் 4-ல் சனி இருப்பதால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் உலவுவதால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வாரக் கடைசியில் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 24.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு. நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். ஆன்மிகப் பணிகளிலும், பொதுநலப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் உருவாகும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22 (பகல்).
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதும் நல்லது.