

நோன்பு என்பது பட்டினியல்ல; பத்தியம். புசித்திருப்பதற்கும் ருசித்திருப்பதற்கும் எல்லாமிருந்தும் அண்டை அயலாராக வசித்திருக்கும் ஏழைகளின் பசிக்கொடுமையை சுயமாக அறிந்துகொள்ள விழைகின்ற ஆன்மீகத் தேடல்தான் நோன்பு. அந்தரங்கங்களால் நிறைந்திருக்கும் பூட்டிய அறைபோல நோன்பு என்பது அதை நோற்கும் அடியானுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ஓர் ஒழுக்க உடன்பாடும் உயர்ந்த வழிபாடுமாகும். இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றும்போது அது வெளிப்படையாகவே தெரிகிறது.
‘நோன்பு ஒரு கேடயம்’ என்கிறார் நபிகள் நாயகம். நரக நெருப்பிலிருந்து நம்மைத் தடுக்கிற ஒரு கேடயமாக மட்டும் கருதிவிடாமல் ஈட்டிய வருமானத்தில் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய ஜக்காத்தை வழங்காமல் சுரண்டுகிற பாவத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிற ஒரு கேடயமாகவும் அர்த்தப்படுத்தும்போது நோன்பின் வரைவிலக்கணமே வளம் பெறுகிறது. பசித்திருத்தல் என்பதோடு நின்றுவிடாமல் சமூக ஒழுக்கத்தைப் பேணும் ஓர் பயிற்சியாகவும் நோன்பு அமைகிறது.
நோன்பின் நோக்கம்
ஆன்மாவை உள்ளிலும் வெளியிலும் பரிபூரணமாக சுத்திகரிக்கிற ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வேள்விதான் நோன்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதகுலம் கடைபிடித்து வருகிற நோன்பு நோற்கும்முறை கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் வேறுபட்டு காணப்படினும் குறிப்பிட்ட ஒரு குறிக்கோளை முன்வைத்தே நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருவதை வரலாற்றில் காண்கிறோம். கிரேக்கர்கள் தங்கள் அறிவினை வளர்ப்பதற்காக நோன்பிருந்திருக்கிறார்கள். தங்களது கடவுளின் ஓவியத்தை வரைவதற்குமுன் ரஷ்யர்கள் நோன்பிருந்தார்கள். மூசாநபி தன் இறைவனை காண்பதற்காக தூர்சினா மலையில் நோன்பிருந்ததாக விவிலியம் சொல்கிறது.
“பசித்தவர்க்கு உணவளிப்பது – அவர் அனாதையான உறவினரானாலும், ஏழையானாலும் சரி; அது பெரியதோர் நற்பணியாகும்” என்று திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.
தொழுகையை நிலை நிறுத்துங்களென்று சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஏழைகளுக்கு வழங்குங்கள் என்பதையும் சேர்த்தே வலியுறுத்துகிறது திருக்குர்ஆன். திருக்குர்ஆனை தந்த மாதம் இது. வசதி உள்ளோர் ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு வழங்கவேண்டிய ஜக்காத்தை கடமையாக்கியதும் இம்மாதம்தான். பசியை அறியும் பாடத்தைக் கற்றுத் தருவதும் இந்த மாதம்தான். இத்தனையும் தந்த இறைவன் இதில்தான் தன்னையும் தந்து நிற்கிறான்.